TAMILI

஥ தமிழி

தொப்புள் கொடி

 

– கௌதம சித்தார்த்தன்

 

கெச்சங்களின் இசைச் சிரிப்பு அந்தக் கிராமத்து மண்ணில் வெடித்துச் சிதறிய போது, சாயங்கால நேரத்துப் பொழுது ஆச்சரியத்துடன் மேற்கில் சரிந்தது. கூடு திரும்பிக் கொண்டிருந்த நாரைகளும் பக்கிகளும் ஒழுங்கு கலைந்து தலையசைத்துத் திரும்பிப் பார்த்தன. வாய்க்கால் கரையோரம் சோர்வாய் ஊர்ந்து கொண்டிருந்த பெண்களின் கால்கள் ஒரு லய அசைவில் நடைபோட்டன. அந்தச் சலங்கைகளின் நாத ஒலி தொப்புளான் வீட்டிலிருந்துதான் வந்த கொண்டிருந்தது என்பது எல்லோருக்குமே பரபரப்பாகவும் அதிசயமாகவும் இருந்தது.

கெச்சங்களின் அசைவில் மாத்திரம் எப்படி அந்த அற்புதமான நாதம் சாத்தியமாகிறது? சாணம் மெழுகிய வாசலில் ஆடிக் கொண்டிருந்தான் சிறுவன். அவனது பிஞ்சுக் கால்களின் குதியாட்டம் நிலத்தை அதிர வைத்துக் கொண்டிருந்தது. அவனைச் சுற்றிலும் அவனது சேக்காளிச் சிறுவர்கள் குழுமி நின்று ஆரவாரத்துடன் ரசித்துக் கொண்டிருக்க, குலுங்கின கெச்சங்கள். இசையரவம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கூடி வேடிக்கை பார்க்க, கால்களில் அவிழ்ந்த நாதம் காற்றில் கலந்து அந்தப் பிராந்தியமெங்கும் எதிரொலித்தது.

தொப்புளானுக்கு சாட்டையால் வீசியதுபோல அந்த இசையின் எதிரொலி உடம்பெங்கும் சொடுக்கியது. மதம் பிடித்தவன் கணக்காய் இசையை நோக்கி காலெட்டிப் போடப் போட, இசை சமீபித்தது. அது தனது வீட்டிலிருந்துதான் வருகிறது என்று தெரிந்ததும் சர்ப்பத்தின் இரைச்சலோடு நடக்க ஆரம்பித்தான்.

அவனது மைந்தன்தான் என்னமாய் சுழன்றாடுகிறான்? தனது மகன் காலடி எடுத்துச் சுற்றும் ஒயிலிலும் கெச்சங்கள் குலுங்கும் ஒலிச் சிதறல்களிலும் தன்னை மறந்தவனாய் லயித்துப் போய் நின்றான். அந்த இசை சட்டென மகுடியின் நாதமாய் உருமாறிப் போயிற்று. அவனது இரைச்சல் அடங்கி, மெல்ல மெல்லத் தலையாட்ட ஆரம்பித்தான்.

இந்நிலை வெகு நேரம்வரை நீடிக்கவில்லை. சட்டென பிரக்ஞை வந்தவனாய் அவனது மகன்மேல் பாய்ந்தான்.

காலங்காலமாய் அடக்கி வைத்திருந்த எல்லா விஷயங்களுக்கும் எதிரான பாய்ச்சல் அது. “ஏண்டா மூதேவி, ஆட்டம் போடறியா ஆட்டம், படிக்கிற பயலுக்கு ஆட்டம் என்னடா வேண்டிக் கெடக்கு… பரதேசி நாயே” ஆவேசம் வந்தவன் போல் கண்மண் தெரியாமல் விளாச ஆரம்பித்தான் தொப்புளான். பையனின் சேக்காளிகள் சிதறி ஓட, பையனைத் துரத்தித் துரத்தி அடிப்பதைத் தடுத்தனர் பக்கத்திலிருந்தவர்கள். அவனது மனைவி ஓடி வந்து பையனைப் பாதுகாத்து தொப்புளானைத் திட்டியவாறே வீட்டிற்குள் அழைத்துக் கொண்டு போனாள்.

ஓரிரு நிமிஷங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே நின்றிருந்தான் தொப்புளான். பிறகு மெல்ல சுற்றிலும் நோட்டம் விட்டபோது, அவன் மட்டும் தனியாக வாசலில் நின்று கொண்டிருப்பதை உணர்ந்தான். திடுமென கெச்சங்களின் விசும்பல் ஒலி கேவியது. வாசலில் சிதறிக் கிடந்த உடைந்து போன கெச்சங்களின் முத்துக்கள் அவனது நினைவுக் குளத்தில் கற்களாய் விழுந்து அலையோடின.

***

ஜல் ஜல் ஜலங்… ஜல் ஜல் ஜலங்… என்று கால் சலங்கைகளின் சத்தம் ஒரே சீராகக் கேட்டது. ஆட்டக்காரர்கள் உறுமியின் கை வரிச்சலுக்கேற்ப அங்கங்களை நளினமாக அசைத்து மானாய்த் துள்ளிக் கொண்டிருந்தனர். பறையொலியின் தாள அசைவிற்கேற்ப கெச்சங்கள் பேசிச் சிரித்தன. புதியதாய் ஆட்டம் கற்பவர்கள் ஆட்டக்காரர்களின் வரிசைக்கு அடுத்தாற்போல நின்றுகொண்டு, அவர்கள் காலடி எடுத்து வைத்துச் சுற்றுவதை உன்னிப்பாகப் பார்த்துச் செய்து கொண்டிருந்தனர். சுற்றிலுமிருந்த ஜனத்திரளில், இவர்கள் தப்பும் தவறுமாக அடியெடுத்து சுற்றும்போதெல்லாம் சிரிப்பு வெடித்துக் கிளம்பியது. இளவட்ட ஆட்டக்காரர்கள் பூப்போட்ட சிலுக்கு கர்ச்சீப்புத் துணியை கையில் வைத்து சுற்றிக்கொண்டிருந்தார்கள். கொஞ்சம் வயதானவர்கள் வெட்கப்பட்டுக்கொண்டு துண்டை வைத்துச் சுற்றினார்கள். எர்ர நாய்க்கர்தான் சொல்லுவார், ‘அந்தக் கருமத்தையெல்லாம் வெச்சிச் சுத்த நாமென்ன தண்டுவப் பசங்களா?’.

தொப்புளான்தான் அந்த எட்டுப்பட்டிக்கும் ஆட்டம் சொல்லிக் கொடுக்கும் வாத்தியார். மனித உடலில் சுருண்டிருக்கும் அபூர்வமான அடவுகளை தேவராட்டமாகவும் ஒயிலாட்டமாகவும் மாற்றிவிடுவதில் மகா விற்பன்னன். உறுமியும் பறைக்கொட்டுகளும் முழக்கமிடும் தாளகதியை, ஆட்டக்காரர்களின் கால் கெண்டை மடிப்புகள் உள்வாங்கி நளினமான அடவுகளாய் விரியும் கலாரூபத்தின் அற்புதத்தை தேவராட்டத்தில் நிகழ்த்திக் காட்டுவான். கொட்டுக்களேதுமில்லாமல், கெச்சங்களின் இசைச்சுருதி மட்டுமே பங்குபெறும் ஒயிலாட்டத்தில் கால்களின் திசையை வாத்தியாரின் பாட்டுக்களே தீர்மானிக்கும். புராண காவியங்களை உடலின் மொழியால் எழுதிக்காட்டும் ஆட்டக் கலையின் நுட்பமான வீச்சுக்ளை வீசுவதற்கு அந்தச் சுற்று வட்டாரத்திலேயே அவனைத் தவிர வேறு ஆளில்லை. அதேபோல, வருஷா வருஷம் சாமிக்குப் பொங்கல் உண்டோ இல்லையோ கோயில் மைதானத்தில் ஆட்டம் கட்டாயம் உண்டு. எந்த ஊரில் பூச்சாட்டினாலும் உடனே ஆஜராகி விடுவான் தொப்புளான். கோயில் பூச்சாட்டியதும் ஒரு வாரத்திற்கு ஒரே ஆட்டம் பாட்டுத்தான். உழைத்துக் களைத்தவர்கள் இரவு நேரங்களில் தலை சாய்த்து ஓய்வெடுக்க முடியாமல் கெச்சங்களின் சத்தம் சுண்டியிழுக்கும். தங்கள் கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் மகிழ்ச்சியூட்டிக் கொள்ள, சக மனிதர்களிடத்தில் அன்யோன்யமாய் சிரித்துப் பேச, ஊராருக்குத் தங்கள் இருப்பை நிரூபணம் செய்ய ஆட்டம் என்கிற நளினமான கலை பெரிதும் பயன்பட்டது. பகல் முழுவதும் சூர்யனுக்குக் கீழே உழைத்துக் களைத்த கறுத்த உடம்புகள் இரவில் சந்திர ஒளியில் துள்ளிக் குதிக்க போதையேற்றிக் கொண்டுதான் களத்தில் இறங்க வேண்டியிருந்தது. சுருதி குறையும் போதெல்லாம் ஏற்றிக் கொள்வதற்கு வாகாகப் பக்கத்திலேயே கடை விரித்திருந்தான் சுண்டக்காயன்.

ஆனால், வாத்தியாருக்கு இதெல்லாம் ஒத்துவருவதில்லை. முற்றிய எருக்கன் இலையைத் தீக்கணப்பில் சூடுபடுத்தி, சுருளாகச் சுழற்றி, கஞ்சா இலையை ஒரு மூணு சொட்டு நீர் இட்டு, மாவு போல் உள்ளங்கையில் வைத்து உருட்டி, சுருளில் அடைத்துப் பற்றவைத்து குப் குப்பென்று லாவகமாய் உறிஞ்சும் அழகில், இளவட்டங்களும் கைநீட்டுவார்கள். வாத்தியார் என்றால் எட்டு ஊருக்கும் ஒரு தனி மரியாதை. ஊர்ப்பட்டக்காரர் அவனைக் கைலாகு கொடுத்து வரவேற்பதில் பெருமை கொள்வார். ஆட்டக்காரர்களில் நன்கு ஆடுபவனைத் தோளில் தட்டி மெச்சிக் கொள்ளும் வாத்தியாரிடம் பாராட்டுப் பத்திரம் வாங்குவதே இளவட்டங்களின் இலக்காக இருக்கும். ‘ஆட்டத்தில் மெடல் வாங்கிய பெத்தண்ண ராஜுவையே தண்ணி காட்டியவனாக்கும்’ என்று அடிக்கடி மார்தட்டிக் கொள்வான். மேளத்தின் ஊறுமலுக்கேற்ப மான் துள்ளிக் குதிக்கிறாற்போல, பறவை பறக்கிறாற்போல, மீன் நீந்தி விளையாடுகிறாற்போல குதிகாலைப் பூமியில் தட்டி கெச்சத்தைப் பேச வைத்து கர்ச்சீப்புத் துணியைச் சுற்றுகிற அழகில் ஊர்ப்பெண்டுகளை வசீகரம் செய்து விடுவான்.

ஒரே சீராய் ஆடிக்கொண்டிருந்த ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் விசையேறியபோது வாத்தியார் ஆடுவதை நிறுத்திவிட்டு சீழ்க்கை அடித்தான். கொட்டுக்காரர்கள் தப்பட்டைகளைச் சூடுபடுத்திக் கொள்ள தீக்கணப்பருகில்போக, ஆட்டக்காரர்கள் வேர்வையைத் துடைத்து விட்டுக் கொண்டே பெண்டுகள் குழுமியிருந்த திக்கில் நோட்டம் விட்டார்கள்.

சிறிது நேரத்தில் அடுத்த ஆட்டத்திற்கு தயாராவதற்கு அறிகுறியாய் சிணுக்குத்தாளம் கொட்டி அறிவித்தார்கள் கொட்டுக்காரர்கள்.

ஒவ்வொரு முறையும் ஒரு ஆட்டம் முடிந்து மறு ஆட்டம் ஆரம்பிக்கும்போது விருத்தம் பாடித்தான் ஆரம்பிக்க வேண்டும். அந்தச் சுற்று வட்டாரத்திலேயே விருத்தம் போடுவதில் பிரசித்தமானவன் கோயிந்தசாமிதான். தனது கம்பீரமான குரலெடுத்து விருத்தம் சொல்வதற்கும், கொட்டுக்காரர்கள் ‘சா..மி’ என்று பின்குரல் போடுவதற்கும் அந்த நிகழ்ச்சியே தனிக்களை கட்டும்.

மாரியம்மன் கோயில் ஆட்டத்திற்கு ஒரு வகை விருத்தம், கல்யாண மற்றும் சுபகாரியங்களுக்கு ஒருவகை விருத்தம், எழவு காரியங்களுக்கு வேறு வகை விருத்தமென்று பல்வகைப்பட்ட விருத்தங்கள் அத்துபடி. காரியங்களுக்கேற்ப ஆடுகிற கால்களின் மனோநிலைகளை மாற்றி பூரணமாக அதிலேயே லயிக்கச் செய்வதில் கெட்டிக்காரன்.

கொள்ளை வறுத்து வெச்சி…
சா..மி
கொளுந்தியாளைப் பக்கம் வெச்சி…
சா..மி
கொளுந்தியா பக்கமிருக்க…
சா..மி
கொள்ளுபோன மாயமென்ன, கொட்ரா மத்தளத்தை…

மத்தளம் முழங்கியது.

மறுபடியும் ஆட்டக்காரர்கள் சீரான வரிசையில் நிற்க, ஆட்டம் ஆரம்பமாகியது. இன்று கடைசிநாள், ஆட்டம் விடிய விடிய நடக்கும். விடிந்தால் பொங்கல். ஊரே கோலாகலம் பூண்டு நிற்கும். காலையில் மாவிளக்கு எடுப்பதற்கு இப்போதிருந்தே மாவு இடிக்க ஆரம்பித்திருந்தனர் பெண்கள். மாவிளக்கு எடுத்துவரும் போது இளவட்டங்கள் கோயில் கிணற்றுத் திண்டில் உட்கார்ந்து கொண்டு முறைப் பெண்களிடம் வம்பு பேசுவார்கள். அவர்களும் பதிலுக்குக் கேலி பேசிச் சிரிப்பார்கள். மாவிளக்கு எடுத்து முடிந்ததும் கிடாப் பொங்கல். கிடா விருந்துக்கு வெளியூரிலிருந்து சொந்த பந்தங்கள் சாரிசாரியாய் வந்திறங்குவார்கள். அரைவேக்காட்டுக் கறி செரிக்கவும், வருஷத்திற்கு ஒரு முறை வரும் பொங்கலைக் குதூகலமான முறையில் கொண்டாடவும் சாராயம் தேடுவார்கள். மாலையில் விருந்தினர்களாக எழுந்தருளியிருக்கும் வெளியூர் ஆட்டக்காரர்கள் கலந்து கொள்ளும் கிராமிய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒயிலாட்டம் துவங்கும். தான் உயிர் வாழ்வதே இதுபோன்ற உன்னதமான கணங்களுக்காகத்தான் என்கிறாற்போல் முகமெங்கும் தேஜஸ் ஒளிர, சுழன்று சுழன்று விளையாடும் வாத்தியாரின் கால்கள்.

கொட்டுக்காரர்களின் சுதி குறைந்து கொண்டே வருவதை உறுமியின் வரிச்சல் உணர்த்தியது. எட்டாம் அடி ஆட்டத்திற்கான விசை இவ்வளவு மந்தமாய்ப் போவதை சகிக்க முடியாத வாத்தியார் ஒரு நீண்ட சீழ்க்கையடித்தான். கொட்டுக்காரர்கள் சுரத்தில்லாமல் தீக்கணப்புக்குப்போக, ஆட்டம் பார்த்துக் கொண்டிருந்தவர்களிடமிருந்து ஓர் அயர்ச்சியலை எழுந்தது. ஒயிலாட்டத்துக்குப் போகலாமென ஆட்டக்காரர்களில் சிலர் குரல் கொடுக்கவே, வாத்தியார் தலையை ஆட்டி சரியென்று சொல்ல, ஆட்டக்காரர்களின் வரிசை மாறுபட்டது. இளைஞர்கள் ஆனந்தமாய்க் குதித்துக் கொண்டு அணி திரள, வயசானவர்கள் விடுபட ஆரம்பித்தனர்.

தேவராட்டத்தை விடவும் ஒயிலாட்டத்தின் அடவுகள் நுட்பம் மிகுந்தவை. உடலின் அங்க அசைவுகளை சுழட்டிப் போடும் லாவகம் கொண்டவையாதலால், பார்வையாளர்களின் மத்தியில் கிறக்கத்தை ஏற்படுத்துபவை. பறைக்கொட்டுகளில் வெறுமனே சுற்றும் காலடியின் அடவுகள் இதற்குப் பொருந்தா.

ஆட்டக்காரர்கள் குதிதாளம் போட்டுக் கொண்டு நிற்க, முன்வரிசையில் நடுவாந்திரமாய் நின்று கொண்டிருந்த வாத்தியார் காலடி எடுத்து வைத்துப் பாட ஆரம்பித்தான்.

அரிச்சந்திர காண்டத்தில் லோகிதாசனைப் பாம்பு கொத்திப் பிடுங்கும் படலத்தைக் கண் முன்னால் நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள் கலைஞர்கள்.

“பாம்பு வருகுதையா – பழிகாரப் பாம்பு வருகுதையா” – ஆட்டக்காரர்கள் ஒரே குரலெடுத்துப் பாடி காலெடுத்துப் பாம்பாகச் சுழற்ற,

“பாம்பு வந்திட – படமெடுத்தாடிட…” என்ற அடியை வாத்தியார் பாடிக்கொண்டிருந்த போதுதான் அது நிகழ்ந்தது. பரபரப்பாக ஓடி வந்த ஒருவன் மூச்சிறைக்க வாத்தியாரின் காதில் ஏதோ சொல்ல, வாத்தியார் முகம் சட்டென இருளடைய, ஆட்டம் அப்படியே ஸ்தம்பித்துப் போய் நின்றது.

சற்றைக்கெல்லாம் அந்தக் கரிய இரவின் இருளைக் கிழித்துக் கொண்டு தீப்பந்தங்களோடு ஊர் மக்கள் ஓடினார்கள். வாத்தியாரின் நெஞ்சில் பாடாமல் விட்ட அடி எதிரொலித்தது. ‘அய்யகோ நான் என்ன செய்குவேன் – என் லோகிதாசா அய்யகோ நான் என்ன செய்குவேன்.’

**

அதிகாலைக் குளிரில் விறைத்தபடி கோயில் மைதானத்தின் முன்பு ஊரே திரண்டிருந்தது. ஒரு இளம் பெண்ணும் ஒரு வாலிபனும் கைகளைக் கட்டிக் கொண்டு சபையின் நடுவில் குனிந்த தலையுடன் நிற்க, செத்துப் போன முகத்தோடு நின்றிருந்தான் வாத்தியார். கோயில் திண்டில் அமர்ந்திருந்த பட்டக்காரர்கள் ‘பொங்கலண்ணிக்கு இப்பிடி ஒரு குத்தமா?’ என்று பொருமியவாறிருந்தனர்.

ஊர்மக்களின் குசும்புப் பேச்சுகளையும் குதர்க்கங்களையும் ஒதுக்கியெறிந்துவிட்டு வையா நாய்க்கர்தான் ஆரம்பித்து வைத்தார். “வாத்தியார் பொண்டாட்டியும் வெள்ளையனும் ஆசைப் பட்டிருக்காங்க… ஊரை விட்டு ஓடிப் போய்டலாம்னு பாத்தபோது, நாம புடிச்சி சபைக்குக் கொண்டாந்துட்டம்… அவுங்க இப்பிடிப் பண்ணினது ஊர்க்குத்தம்.. இந்த நாயத்தை பட்டக்காரங்கதான் பேசித் தீக்கோணும்..”

பட்டக்காரர்கள் விசாரிக்க ஆரம்பித்தனர். அவர்களிருவரும் மௌனமாக உண்மையை ஒத்துக் கொள்ளவே, வாத்தியாரை விசாரித்தனர். “என்னப்பா தொப்புளா.. உம் பொண்டாட்டி வெள்ளையம் பயலோட ஓடப் பாத்ததென்னமோ நெசந்தான்… ஆனா நாம புடிச்சிக் கொண்டாந்திட்டம்… அதனாலே நீ உம் பொண்டாட்டியைக் கூட்டிட்டுப் போயி பொளைக்கறியில்லே…?”

அவன் யோசித்தான். இது எப்படி நியாயம்? எனக்குத் துரோகம் செய்துவிட்டு ஓடிப் போனவளுடன் மறுபடியும் வாழ்வது எந்த விதத்தில்?

அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவள் வெடித்தாள். “நான் அந்த ஆளோட பொளைக்கவே முடியாதுங்க…” வாத்தியாரின் பிடரியில் விழுந்தது மரண அடி. அவன் சுதாரிக்கும் முன்பே உடலெங்கும் சவுக்கால் வீறியது போல சொடுக்கிச் சொடுக்கி இழுக்க ஆரம்பித்தாள்.

‘வீடு என்று ஒன்று இருப்பதை மறந்துவிட்ட ஜென்மம் என்றும், வீடே தங்குவதில்லை என்றும், எப்போது பார்த்தாலும் ஆட்டம் ஆட்டம் என்று ஊர் ஊராய் சுற்றிக் கொண்டிருப்பவனுக்குப் பொண்டு புள்ளைகள் எதுக்கு என்றும்’ ரணகளப் படுத்திவிட்டாள்.
வாத்தியார் சித்திரவதையின் வெம்மையில் மாய்ந்து போய் நின்றிருந்தான். கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாய்க் கலைய, முடிவில் சாமிக்குப் பூச்சாட்டிய கம்பம் மட்டும் நின்றுகொண்டிருந்தது.

மெல்ல மெல்ல ஊர் மக்கள் அந்த விஷயத்திலிருந்து விலகி பொங்கலை வரவேற்க ஆயத்தமானார்கள். மாவிளக்கு, கிடாப் பொங்கல், தீர்த்தக்குடம் என்று ஊர் களைகட்ட ஆரம்பித்தது. மாலையில் ஊர் மக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த பிரபலமான ஆட்டக்காரர்கள் பங்கு கொள்ளும் பிரசித்தி பெற்ற ஒயிலாட்டம் துவங்கியது. வாத்தியார் எந்தவித சலனமும் இல்லாமல் ஆட்டக்காரர்களின் முன்னணி வரிசையில் பம்பரமாய்ச் சுழன்று கொண்டிருந்தான். வாத்தியார் பாட்டுக்கேற்ப கர்ச்சீப்புகள் சுழன்றன.

‘போயினாள் போயினாளே… என் ஆரிய மாலா சூரிய பொண்ணு
போடு சவாசு போடு சவாசு… போயினாள் போயினாளே.’

கலைஞன் தனது வாழ்க்கையையும் கலையாகவே காண்கிறான்.

அல்லி ராணியை இழந்த அர்ச்சுனராஜனின் அவலம் மைதானம் முழுவதும் கசிய ஆரம்பித்தது.

கூட்டத்தில் வேடிக்கை பார்த்து நின்றிருந்த ஒருவன், சலிப்புடன் அருகிலிருந்தவனிடம் விசாரித்தான், “என்னடா, வாத்தி ஒப்பாரி வெக்கறான்?”

“அல்லிராணி போய்ட்டால்லே.. அதா அர்ச்சுனராசா அளுவறாரு…” என்று குறும்பாய் சிரித்தான் இன்னொருவன். “போடா கம்மனாட்டி.. பொம்பளய அடக்க முடியாம இப்பிடி பொட்டைக் கோழி மாதிரி அளுவறவ… எப்படி அர்ச்சுன ராசாவா இருப்பா…?”

இருவரும் ‘ஹோவ்’ என்று இரைந்து சாராய வாசனையோடு சிரித்தார்கள். வாத்தியாருக்கு உடம்பெங்கும் சூடேறியது. நரம்புகள் விண் விண்ணென்று தெறிக்க, உச்சந்தலைமுடி விலுக்கென்று தூக்கிக் கொண்டது. ‘ஹேய்’ என்று தடுமாறியபடி ஆவேசக் கூச்சலிட்டுக் கொண்டு அவன் மேல் பாய, சற்றைக்கெல்லாம் மைதானத்தில் சிதறியிருந்த கிடா ரத்தத்தின் மேல் உருண்டு புரண்டு கொண்டிருந்தார்கள். வாத்தியாரின் காலில் கட்டியிருந்த கெச்சங்கள் அவிழ்ந்து உடைந்து சிதறின.

அந்தச் சம்பவத்திற்குப் பின் வாத்தியார் கெச்சங்களை ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. மனதிலேயே ஒரு வைராக்கியம் வைத்துக் கொண்டான். தன்னை வாத்தியார் என்று அழைப்பதையே அடியோடு வெறுத்தான். அதற்குப் பின்னால் எத்தனையோ கிடாப் பொங்கல் அவனூரிலும், பக்கத்து ஊர்களிலும் வந்து போனாலும் ராஜ ஸ்வரம் இல்லாத அபஸ்வரங்களின் ஒலிதான் கெச்சங்களில் கசியும். அவ்வப்போது ஏதாவது விசேஷங்களில் பறைமேளம் ஒலிக்கும் போது அவனது கால்கள் சூடேறுவதை உணர்வான். அவனையுமறியாமல் கால்கள் தாளமிடும். சட்டென சுதாரித்துக் கொள்வான். கெச்சங்கள் கொஞ்சிய கால்களைச் சேற்றில் உழலவிட்டு, பச்சை வயல்வெளிகளில் அலைந்து கிடந்தவனுக்கு, அவனது அம்மாவும் உறவினர்களும் முயற்சி செய்து இரண்டாம் தாரம் கட்டி வைத்தார்கள்.

மறுபடியும் பழைய சிரிப்புடன், உற்சாகத்துடன், புதிய மனைவியுடன் கைகோர்த்து வாழ்க்கையை எதிர்கொள்ள குழந்தையின் மழலைமொழி தேனாய் இனித்தது. மனைவி, மகன், வீடு, வயல்வெளி என்று தனது பிரசித்தி பெற்ற கால்களை மறந்து போயிருந்தவனை இன்றைக்கு ஞாபகப் படுத்திவிட்டான் பையன்.

தொப்புள் கொடியின் அபூர்வபந்தம்.

***

உடைந்த கெச்சங்களின் முத்துக்களைப் பொறுக்கி எடுத்தான். அவனது உள்ளங்கையில் நாதம் சுரந்தது. அவற்றை வெறித்துப் பார்த்தான். தனது பழைய சிநேகிதனை வெகுநாள் கழித்து சந்திக்கும் ஆற்றாமை பொங்கியது. பெருமூச்சு விட்டுக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான்.

அவனது மனைவி அடுப்படியில் வேலையாய் இருக்க, தனது புதல்வனைத் தேடினான். பையன் படுக்கையில் படுத்திருந்தான்; அழுத களைப்பின் தூக்கம். அருகில் சென்று தூங்கும் முகத்தைப் பார்த்தான். களங்கமற்ற முகம். மகனின் காலடியில் உட்கார்ந்து அந்த அற்புதமான கால்களைப் பார்த்தான். சுழன்று சுழன்றாடும் கலை வன்மையின் தரிசனம். மெல்ல தனது நடுங்கும் கரங்களால் மகனின் பிஞ்சுக் கால்களை வருட, அவனையும் மீறிக் கண்ணீர் முத்துக்கள் பையனது காலடியில் விழுந்து சிதறின.

unnatham

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top