TAMILI

தமிழி

புறக்கணிப்பின் அரசியல் – ஒரு கடிதம்

 

புறக்கணிப்பின் அரசியல் – ஒரு கடிதம் 

V.சரவணக்குமார்
கோவை.

அன்புள்ள கௌதம்,
தொடர்ந்து  நான் உங்களை எழுத்தை வாசித்து வருபவன், எனக்கு உங்கள் எழுத்து மிகவும் பிடிக்கும். அதன் சிறப்பு குறித்து பிறகு எழுதுகிறேன். நீங்கள் கடந்த 2 நாட்களாக முகநூலில் உங்களை, ஊடகங்கள் புறக்கணித்து வருவதாக எழுதி வருகிறீர்கள். இது ஒருவித புலம்பல் தன்மையிலும் இருக்கிறது. நீங்கள் உங்கள் எழுத்துக்களில் ஜென் நிலை குறித்து சிலாகித்துப் பேசுகிறீர்கள், புத்த நிலையில் ஆழ்ந்து திளைக்கும் கவிதைகளை படைக்கிறீர்கள். ஏன்,  சூஃபிய மனோநிலையின் அற்புதத்தைக்கூட வெகுவாக முன்வைக்கிறீர்கள்.. இது போன்ற ஒரு ஞான நிலை கொண்ட கலைஞன், தன்னைப் பற்றி யாரும் பேசவில்லை, அங்கீகாரம் கொடுக்கவில்லை என்று புலம்புவது சரியா?

அன்புள்ள சரவணக் குமார்,
உங்கள் கடிதத்திற்கு நன்றி.  சற்றே விரிவாக விளக்கமாகச் சொல்கிறேன் : தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்,  என்னைப் பற்றி எந்த ஊடகங்களும் பேசவில்லை, அங்கீகாரம் கொடுக்கவில்லை என்று சொல்லவில்லை. அவர்கள் ஒரு வரலாற்றுத்தன்மை கொண்ட ஒரு சில விஷயங்களை பதிவு செய்யவில்லை. ஆவணப்படுத்தவில்லை, என்னை அடையாளப்படுத்த வில்லை என்றுதான் சொல்கிறேன். ஆவணப்படுத்த வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.

நேற்றிலிருந்து ஒரு விஷயம் ட்ரெண்டிங் ஆகப் போய்க் கொண்டிருக்கிறது.   இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், இந்தி திரைப்பட உலகில் தன்னை இசையமைக்க விடாமல் ஒரு பெரிய கும்பலே தனக்கு எதிராக திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று சொல்லியிருப்பதுதான் இப்போது ட்ரெண்டிங். ரகுமான் ஒரு அற்புதமான இசைஞர். ஹிந்துஸ்தானியையும், சூஃபியத்தையும் எல்லையற்ற அற்புதமாக முன்வைக்கும் மஹா கலைஞர். இப்படியான ஒரு சூஃபிய ஞான நிலை கொண்ட ஒரு இசைஞர், பெரும் பத்திரிகைகளில் தனக்கு நேர்ந்து கொண்டிருக்கும் புறக்கணிப்பு நிலையை பொது மக்களிடம் சொல்கிறார்.

இது ஒரு கலைஞனின் அவலம். அதை வேறு எங்கு பேசமுடியும். மௌனமாக தனக்குள்ளேயே வைத்து புழுங்கிக் கொண்டிருந்தால், கலை மனம் கொண்ட ஆழ்மனச் சிந்தனைகளும், படைப்பின் சிருஷ்டீகரமும் வக்கிரமாக மாறிப்போகும்.
நவீன தமிழின் முதன்மையான கவிஞர் பிரமிள் தனக்குள்ளேயே வைத்துப் புழுங்கிக் கொண்டிருந்ததனால், அவரது கலை மனம், பின்னாட்களில் சிதிலமடைந்தது என்று இனங்காணலாம்.

நான் கடந்த 2 நாட்களாக தமிழ் ஊடகங்களில் திட்டமிட்டு என்னை நிராகரிக்கிறார்கள் என்று கத்திக் கொண்டிருக்கிறேன். இதற்கு என் முகநூல் நண்பர்கள் முப்பது அல்லது நாற்பது பேர் தவிர யாரும் அது ஒரு விஷயமாகவே கண்டு கொள்ளவில்லை. ஆனால், ரகுமான் விஷயம் தீயாய் பரவுகிறது.

எப்போதுமே, தமிழின் வெகுஜன ரசனைக்கு சினிமா பற்றிய விஷயங்களே பரபரப்பாகப் பேசப்படும் என்பதற்கு ரகுமான் விஷயம் ஒரு காட்சி. இவர், ஒரு இஸ்லாமியர் என்பதனால்தான், இத்தகைய திட்டமிட்டு புறக்கணிக்கும் போக்கு நடைபெறுவதாக முன்வைக்கப்படும் யூகங்களை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தி சினிமாவில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்களாகத்தான் இருக்கிறார்கள்.பின்னர் ஏன் ரகுமானை புறக்கணிக்கப்படுகிறார் என்பதை விரிவாகப் பார்க்கலாம் .

ரகுமானுக்கு நேர்ந்திருப்பதும் எனக்கு நேர்ந்திருப்பதும் ஒன்றுதான். ரகுமான் அவரது துறையில் பல சாதனைகளை செய்திருப்பவர். இந்தியாவின் அதிக பட்ச விருதாக 2 ஆஸ்கார்களை வென்று வந்திருப்பவர். இது அவர் சார்ந்த துறையின் உச்ச பட்சச் செயல்பாடுகள்.

நான் என் துறையில், 17 நூல்கள் வெளியிட்டுள்ளேன். அவை எல்லாமே கலை இலக்கிய ரீதியாக முக்கியமான நவீனத்துவப் படைப்புகள்.  சமூக அரசியல் ரீதியாக பெரும் ஆவணங்கள்.  திரைப்பட விமர்சனங்கள் என்னும் பார்வையில் புத்தம் புதிய விமர்சனப் பார்வையை உருவாக்கியவை.  இந்தியாவில் எந்த மொழி எழுத்தாளனும் செய்திராத சாதனையாக, உலகின் பிரதான 9 மொழிகளில் என் 10 நூல்கள் வெளிவந்துள்ளன. 15 உலக மொழிகளில் என் கவிதைகள் கட்டுரைகள் மொழியாக்கமாகியுள்ளன. பிரெஞ்சு, ஸ்பானிஷ், ரஷ்யன், இத்தாலி என்று 4 மொழிகளில் பத்தி எழுதிக் கொண்டிருக்கிறேன். (கீழே பின் இணைப்பில் விரிவான பட்டியல் கொடுத்துள்ளேன்.) இது என் சார்ந்த எழுத்துத் துறையின் உச்ச பட்சச் செயல்பாடுகள்.
அவர், அவரது துறையில் மகத்தான சாதனைகள் செய்திருக்கிறார் என்றால், நான் என் துறையில் செய்திருக்கிறேன். சினிமா என்னும்போது எல்லாமே பிரம்மாணடமாக ஊதிப் பெருக்கி காட்டப்படும் தன்மையும், பரிதாபமான நவீன இலக்கியம் என்றால், அலட்சியப்படுத்தும் போக்கும் நிறைந்த தமிழ்ச் சூழலில் இருவரையும் இணை வைத்துப் பேசுவதல்ல என் நோக்கம்.

அவர் துறை சார்ந்த சமூக மதிப்பீடுகள் வேறு, அதிகார அந்தஸ்துகள் வேறு. என் துறை சார்ந்த கௌரவங்கள், மதிப்பீடுகள் வேறு. ஆகவே இருவரையும் இணை வைக்காமல், இருவருக்கும் நிகழும் ஒத்த தன்மைகளைதான் பொதுமைப் படுத்துகிறேன்.

சர்வ வல்லமை படைத்த 2 ஆஸ்கர் விருதுகள் வாங்கியவரே இவ்வாறு புலம்புகிறார் என்றால், எந்த வித பவரும் இல்லாத என் குரலின் ஒலி, நதியில் நழுவும் கூழாங்கல்லின் அசைவை ஒத்தது.

நான் இப்படியான ஒரு பதிவை போடும்போது, இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் நீங்கள் உங்கள் பாட்டுக்கு எழுதிக் கொண்டே இருங்கள் என்று கருத்து சொன்ன நண்பர்களே, தங்களுக்கான தளங்கள் நிராகரிக்கப்படும்போது ஏற்படும் அந்த வலி கலைஞனுக்கே உரிய வலி என்பதை ரகுமான் மூலமாகவாவது புரிந்து கொள்ளுங்கள்.

சர்வதேச அளவில் நடக்கும் ஆயுத வியாபாரகளுக்குத் துணை போகின்றது Future Weapons என்னும் நிகழ்ச்சி என்று, அதைக் கண்டித்து “ஆயுத வியாபாரத்தின் அரசியல் ” என்ற என் கட்டுரை ஆங்கிலத்தில் வெளிவந்தது.. இந்தக்கட்டுரை 100 க்கும் மேற்பட்ட இணைய இதழ்களில் Share செய்யப்பட்டு உலகம் முழுக்க வைரலாகப் பரவியது. சம்பந்தப்பட்ட டிஸ்கவரி சேனல் இது சம்பந்தப்பட்ட சில குறிப்பிட்ட  links – ஐ dissable செய்து  வைக்குமளவிற்கு புகழ் அடைந்தது கட்டுரை. அந்த நிகழ்வின்  ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட, யுனைடெட் ஸ்டேட் நேவியில் Zeal ஆகப் பணி புரிந்த  மேக் மெக்கோவிஸ் என் முகநூலுக்கு நட்பழைப்பு அனுப்பினார். (சமீபத்தில் இறந்துவிட்டார். அன்னாரது ஆன்மா சாந்தி அடைவதாக) இப்படி, உலகளாவிய முற்போக்குச் சிந்தனையாளர்களுக்கும், ஊடகவியலாளர்கள், போர் எதிர்ப்பாளர்கள், அமைதிப் போராளிகள், மனித உரிமையாளர்கள், கலை இலக்கியவாதிகள் என உலகம் முழுக்க கொண்டாடினார்கள்.

இப்பேர்ப்பட்ட ஒரு வரலாற்றுப் பதிவை ஒரு சிறு சின்னஞ்சிறு அறிமுகமாக வெளியிடுமாறு விகடனில் வேலை பார்த்த மகா முற்போக்கு திலகங்களுக்கு ஓயாமல் கேட்டுப் பார்த்தேன். அவர்கள் அலட்சியப்படுத்தி மூன்றாந்தர மசாலாப்படங்களுக்கு முற்போக்கு மார்க் போட்டுக்கொள்வதிலேயே கவனம் செலுத்தினார்கள்.

உலகத்தமிழ் இதழ் என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறது காலச்சுவடு என்கிற இதழ் கடந்த 30 வருடங்கலாக வருகிறது. என்னைப்பற்றி ஒரு சிறு குறிப்பாவது வெளியிட்டிருக்குமா? எத்தனை முறை அனுப்பினாலும், படைப்புகள் நிராகரித்துக்கொண்டேயிருக்கும் குறுங்குழு வக்கிரம் கொண்ட தன்மையை தனக்குள் பொதிந்து வைத்திருக்கும் இதழ்.

உயிர்மை இதழில் கூட நான்தான் என்னைப்பற்றி எழுத வேண்டும். இப்படிப் பல விஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

இன்றைக்கு சிறுபத்திரிகைகள்தான் காலத்தின் ஆவணங்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் ஒரே ஒரு – அடிகோடிட்டு சொல்கிறேன் – ஒரே ஒரு சிறு பத்திரிக்கை கூட என் இலக்கியப் பயணத்தை பதிவு செய்ய வில்லை.     நான் இப்படியான ஒரு பதிவை போடும்போது, இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் நீங்கள் உங்கள் பாட்டுக்கு எழுதிக் கொண்டே இருங்கள் என்று கருத்து சொல்லும் நண்பர்களே, தங்களுக்கான தளங்கள் நிராகரிக்கப்படும்போது ஏற்படும் அந்த வலி கலைஞனுக்கே உரிய வலி என்பதை ரகுமான் மூலமாகவாவது புரிந்து கொள்ளுங்கள்.

சரி இருக்கட்டும். இந்த புறக்கணிப்புகள் குறித்து என் பார்வையில் பார்த்தால் :

திரைப்பட உலகில் மேலோட்டமாக நுனிப்புல் மேய்பவர்களை மட்டும்தான் பக்கத்தில் வைத்துக்கொள்வார்கள், விஷய ஞானம் உள்ளவர்களை அண்ட விடமாட்டார்கள். எல்லாத்துறைகளிலும் இது நடக்கிறது. சாதாரண எளிய மனிதர்களிடமிருந்து அதிகாரம் மிக்க மனிதர்கள் வரை இந்த குணம் பெருமளவில் உண்டு. தங்களது அலுவலகங்களில் தங்களை விட விஷயம் தெரிந்தவர்களை ஒழிப்பது, சொந்த பந்தங்களில் உள்ள விஷயம் தெரிந்தவர்களை மட்டம் தட்டுவது.. என்று நீக்கமற நிறைந்திருக்கிறது இக்குணம்.  இது தன்னை – தன் சுயத்தை – பாதுகாக்க மனிதனின் ஆழ்மனதில் ஏற்படும் ஒரு உளவியல் சார்ந்த நோய்  என்கிறான் உளவியல் ஆய்வாளர் யுங்.

இன்னும் முகநூல் பாஷையில் சொன்னால், உங்களது பதிவு 100 லைக்குகள் வாங்கிவிட்டால், நான்கைந்து லைக் வாங்கும் இன்னொருவருக்கு இதயமே வெடித்துவிடும். உடனே, உங்களது அந்தப் பதிவு குறித்து, சாடை மாடையாக தங்களது பக்கத்தில் எழுதினால்தான் அவருக்கு ஒரு நிம்மதி கிடைக்கும்.

இந்த ஒழித்துக் கட்டுதல், கீழறுப்பு வேலைகள்  செய்தல், புறக்கணித்தல் போன்ற எண்ணங்கள் தோன்றக் காரணம், தங்களுக்கு சற்றும் பிடிக்காத அறிவு சார் சிந்தனைகளை – அறிவு ஜீவித் தன்மையை ஒழித்துக் கட்டுவதற்காக, தங்களுக்குள் ஏற்படும் கீழான எண்ணங்கள்.

“அறிவு சார்ந்த ஒரு மனிதனை, சக மனிதர்களால் வெறுத்து ஒதுக்கும் சாத்தியமே அதிகம் ” என்கிறான்  நீட்ஷே. ஆழ்ந்த அறிவு, துர் மரணத்திற்கு இட்டுச்சென்ற சாக்ரடீஸின் கதை தெரிந்ததுதானே..

அறிவு சார்ந்த போக்கை கலைஞர்கள் ஆராதிக்கும் அதே சமயம், இந்த போக்கின் நீட்சி, அறிவு பயங்கரவாதத்திற்கு இட்டுச் செல்லும் வளர்ச்சிப் படிநிலையை முன்வைத்து விவாதிக்கிறார்கள் மேற்கின் சிந்தனையாளர்கள். அறிவு என்பதே ஒரு பயங்கரவாதம் என்று சொல்லும் சிந்தனைக் கட்டுரைகள் உலகம் முழுக்க வாதப்பிரதிவாதங்களை ஒருபுறம் எழுப்பிக்கொண்டிருக்கின்றன என்பதையும் நாம் மறந்துவிடலாகாது.

இந்த அறிவு பயங்கர வாதத்திற்கு இட்டுச்செல்லும் பயணத்தைத்தான் பௌத்தம், ஜென், இந்திய சிந்தனைப்போக்குகள் போன்ற தத்துவமரபுகள் எதிர்க்கின்றன.

இந்த கணத்தில், காலங்காலமாக, இந்திய சிந்தனை மரபு முன்வைக்கும் ஞான நிலையை நான் வேறு ஒரு பார்வையில் பார்க்கிறேன் :  இது போன்ற அறிவு சார்ந்த ஒரு நிலையிலிருந்து மீள்வது, எல்லாவற்றையும் விட்டு விலகி நிற்கும் ஞான நிலை என்பது, ஒரு பரிமாணத்தில், சக மனிதனை நேசிக்கும் ஞான நிலையாகப் பார்க்கிறேன்.  இதன் நீட்சியாக, ஜே கிருஷ்ணமூர்த்தியின், “அறிந்ததினின்றும் விடுதலை” யை கணிக்கிறேன்.

ரூமி சொல்வது போல,
“ஒரு மலையின் மௌனம், அதனது அடியாழத்தினுள்
தக்க வைத்திருக்கும் பேரொலியை இனங்காட்டுகிறது” என்னும் ஒரு சூஃபிய நிலையை அவதானிக்க வேண்டும். அறிவு சார் நிலை என்பது, பேரொலியை வைத்திருக்கும் மௌனம் என்பது போன்ற ஞான நிலையில்தான் இருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது.

அறிவு என்பது ஒரு பெரிய பிரச்சினை. நான் 2000 களில் எழுதிய ஒரு விஞ்ஞானப் புனை கதை ஞாபகம் வருகிறது :

கதை 2100 ல் நடக்கிறது.  அறிவு, சிந்தனை, யோசனை என்பது தடை செய்யப்பட்ட விஷயங்கள். இப்படி புதுவிதமாக யோசிப்பதும், சிந்தனையோட்டங்கள் உருவாவதும்  கடந்த காலங்களை ஞாபகத்தில் வைத்திருப்பதால்தான் என்று கணிக்கும் அன்றைய அரசாங்கம், ஒரு புதுவித இயந்திரத்தை ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கியிருக்கிறது. தினமும் காலையில் அந்தக் கையடக்கக் கருவியை தங்கள் மண்டையின்மேல் வைத்து, தங்கள் ஐக்யூ பவரை ஜீரோவுக்குக் கொண்டு வந்து விடவேண்டும். கதையின் நாயகன்,  ஒருநாள், அந்தக்கருவியை உபயோகிக்க மறந்து அலுவலகம் போகிறான். அன்றைக்கு அலுவலகத்தில் அவன் சந்திக்கும் பிரச்சினைகளும் நிகழ்வுகளும்தான் கதை.

கட்டுரையின் இறுதியை ரகுமானுக்கு சமர்ப்பிப்போம் : பொதுவாக, ஒவ்வொரு துறையிலும், உயர் மட்டப்பொறுப்பில் வேலை செய்து கொண்டிருக்கும் மனிதனுக்கு, ஓராயிரம் கொம்புகள் முளைத்திருக்கும். அதுவும் சினிமா பற்றி சொல்லவே வேண்டாம். அப்படியான பவர் கொண்ட மனிதர்களுக்கு, ஆஸ்கார் விருது வாங்கியது, மேற்கத்திய இசையின் தாக்கத்தை உள்வாங்கி இந்திய மரபில் இணைத்து புத்தம் புதிய இசையாக மலரவைப்பது, சூஃபி இசையை ஒரு தேவ கானமாக மாற்றுவது.. இப்படி உலகளாவிய இசைப்பார்வையை தன்னகத்தே வைத்திருக்கும் ஒரு ஆளுமையை, மும்பை கச்சடாக்களில் காலம் தள்ளிக் கொண்டிருக்கும் பவர் ஸ்டார்கள் விடுவார்களா? இது போன்ற Groundlings சிந்தனை கொண்டவர்களுக்கு மதம், இனம், சாதி, குழு எதுவுமே முக்கியமில்லை, தன் பரிதாபமான வாழ்வின் பரிதாபமான ஈகோ வைக் காப்பாற்ற வேண்டுமானால், புறக்கணிப்பு ஒன்றுதான் வழி, என்பதை அவர்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பேரொலியை தனது அடியாழத்தினுள் தக்க வைத்திருக்கும் மலையின் மௌனம், ஒரு சிறு வண்ணத்துப் பூச்சியின் அசைவொளியில் எதிரொலிக்கும் பெருங்காற்றின் ஓசையை! அந்த பாங்கின் ஒலி, பிரபஞ்சத்தின் உயிர்ச் சக்தியை
ஒரு நாவல் பழமாக மாற்றும்.

****************************

பின்னிணைப்பு :

கௌதம சித்தார்த்தன் படைப்புகள் குறித்த பட்டியல் :

சிறுகதைகள் : 6
பொம்மக்கா
மூன்றாவது சிருஷ்டி
பச்சைப்பறவை
நீல ஊமத்தம் பூ
வேனிற்காலவீடு பற்றிய குறிப்புகள்
ஒளிச்சிற்பம்

கவிதைகள் : 1
காலவழுவமைதி

சமூக ஆய்வுக் கட்டுரைகள் : 6
சாதி அரசியல் அதிகாரம்
முருகன் விநாயகன் – மூன்றாம் உலக அரசியல்
சங்ககால சாதி அரசியல்
கருத்து சுதந்திரத்தின் அரசியல்
ஆயுத வியாபாரத்தின் அரசியல்
காலப்பயண அரசியல்

திரைப்பட ஆய்வுக் கட்டுரைகள் : 3
யாராக இருந்து எழுதுவது?
தமிழ்சினிமாவின் மயக்கம்
உலக சினிமாவும் தமிழ் அடையாளமும்

திரைப்படப் பிரதி :1
ஆலா

கடந்த 30 வருடங்களாக தமிழில் எழுதிக்கொண்டிருந்த இவர் தற்போது சர்வதேச மொழிகளில் எழுத ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் சர்வதேச மொழிகளில் இவரது படைப்புகள் மொழியாக்கம் செய்யப்பட்டு ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ரஷ்யன்,ஜெர்மன், இத்தாலி, சைனீஸ், ரோமானியன், பல்கேரியன், போர்த்துகீஸ், அரபி, கிரீக், ஹீப்ரு, சிங்களம், ஷோனா போன்ற உலக மொழிகளில் வெளிவந்துள்ளன.

இந்திய மொழிகளில் : ஹிந்தி, தெலுங்கு,மலையாளம் (மலையாளத்தில் Column)

காலவழுவமைதி – கவிதைகள்

ஆங்கிலம் Timebyrinth – English version
ரோமானியன் Timpdedal – Romanian version
ஜெர்மன் Zeitbyrinth – German version Translator
பல்கேரியன் Времеринт – Bulgarian version Translator

காலப்பயண அரசியல் – இலக்கிய விமர்சனம்.

ஆங்கிலம் – Political travails of Time travel – English version
ஸ்பானிஷ் Las tribulaciones políticas del viaje en el tiempo
இத்தாலி I travagli politici del viaggio nel tempo – Italian version
சைனீஸ் 时间旅行的文学迷思 – Chinese version
போர்த்துகீஸ் Tribulações Políticas da Viagem no Tempo – Portuguese version

உன்னதம் என்கிறபெயரில் நவீன இலக்கிய இதழ் ஒன்றை ஆசிரியப் பொறுப்பில் இருந்து நடத்துகிறார். இதுவரை 40 இதழ்கள் வெளிவந்துள்ளன. இந்த இதழ் உலக இலக்கியபோக்குகளில் கவனம் செலுத்துகிறது.

தற்போது, உலக இலக்கிய போக்குகளில் கவனம் செலுத்தி வரும் இவர், ரஷ்யன், பிரெஞ்சு, ஸ்பானிஷ் மற்றும் இத்தாலிய பத்திரிகைகளில் Column எழுதிக் கொண்டிருக்கிறார்.

****************************

unnatham

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top