TAMILI

தமிழி

நான் கணப்பருகில் அமர்ந்து யோசிக்கிறேன் – ஜே. ஆர். ஆர். டோல்கின்

 

 

நான் கணப்பருகில் அமர்ந்து யோசிக்கிறேன்
– ஜே. ஆர். ஆர். டோல்கின்

தமிழில் : கௌதம சித்தார்த்தன்

நான் கணப்பருகில் அமர்ந்து யோசிக்கிறேன்
நான் பார்த்த எல்லாவற்றையும் புல்வெளியின் பூக்களும்,
பட்டாம்பூச்சிகளும் அசைந்த கோடைகாலங்களை

பழுத்த மஞ்சள் இலைகள் மற்றும் சிலந்தி நூல்கள்
தொங்கிய இலையுதிர்காலங்களை
காலை மூடுபனி மற்றும் வெள்ளிச் சூரியனுடன்
என் தலைமுடியைக் கலைக்கும் காற்றை

நான் கணப்பருகில் அமர்ந்து
உலகம் எப்படி இருக்கும் என்று யோசிக்கிறேன்
வசந்தம் இல்லாமல் ஒரு குளிர்காலம் வரும்போது
நான் அனுபவித்துப் பார்ப்பேன்.

இன்னும் பல விஷயங்கள் உள்ளன
நான் பார்த்திராதவை :
ஒவ்வொரு வசந்த காலத்திலும் ஒவ்வொரு மரத்திலும்
வேறு வேறு பச்சை உள்ளது.

நான் கணப்பருகில் அமர்ந்து யோசிக்கிறேன்
நீண்ட காலத்திற்கு முன்பு
இந்த உலகைப் பார்த்த மக்களை
நான் ஒருபோதும் அறிய மாட்டேன்.

ஆனால், நான் அமர்ந்திருக்கும் எல்லா பொழுதுகளிலும்
முன்பு இருந்த காலங்களை நினைத்துப் பார்க்கிறேன்,
திரும்பி வரும் காலடிகளின் அரவத்தைக் கேட்கிறேன்.
மற்றும் வாசலில் குரல்களின் ஆரவாரத்தையும்.

*********

சர்வதேச அளவில் ஃபேண்டஸி இலக்கியத்தின் முக்கியமான ஆளுமையாக கருதப்படும்  ஜே. ஆர். ஆர். டோல்கின் (J. R. R. Tolkien 1892 – 1973) ஆங்கில எழுத்தாளர், கவிஞர்.  இவர் கற்பனைக்கெட்டாத புதிய புதிய உலகங்களை தோற்றுவித்து ஒரு புத்தம் புதிய நவீன ஃபேண்டசியை உருவாக்கினார்.  The Lord of the Rings, The Hobbit, The Silmarillion ஆகியவை இந்தவகையில் முதன்மையான படைப்புகள். இவருக்கு முன்பே பல எழுத்தாளர்கள் ஃபேண்டஸி தளத்தில் படைப்புகளை எழுதியிருந்தாலும் இவரது படைப்புகளே முதன்மையாகவும் முக்கியமானவையாகவும் நிலைத்து நிற்கின்றன. இதனால்தான், இவரை ‘நவீன ஃபேண்டஸி இலக்கியத்தின் தந்தை’ என்று கொண்டாடப் படுகிறார்.

இவரது நாவலை அடிப்படையாக வைத்து பீட்டர் ஜாக்ஸன் இயக்கிய லார்ட் ஆஃப் த ‌ரிங்ஸ் சீ‌ரிஸ் உலகளவில் மிகப்பெ‌ரிய வரவேற்பை பெற்றது.அதைத்தொடர்ந்து, டோல்கினின் The Hobbit நாவலை மையமாக வைத்து மூன்று பாகங்கள் திரைப்படங்களாக வெளிவந்தன.

1990 களில், உன்னதம் இதழில், அவரது சிறுகதையான  “நிகில் வரைந்த இலை”  (தமிழாக்கம் : ராஜசுந்தர்ராஜன்) வெளிவந்துள்ளது.

******

unnatham

One thought on “நான் கணப்பருகில் அமர்ந்து யோசிக்கிறேன் – ஜே. ஆர். ஆர். டோல்கின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top