TAMILI

தமிழி

தொலைபேசியை எடுக்க வேண்டாம் – தெட் ஹியூஸ்

 

தொலைபேசியை எடுக்க வேண்டாம்
– தெட் ஹியூஸ்

குறிப்புகளும் மொழியாக்கமும் : கௌதம சித்தார்த்தன்

 

 

அந்த பிளாஸ்டிக் புத்தரின் நாராச ஒலி கராத்தேகாரனின் கூச்சலாய் வெளிப்படுகிறது,

அதன் நுண்துளைகளிலிருந்து மென்மையான வார்த்தைகள் வருபவதற்கு முன்பு
கல்லறையின் மூச்சு அரற்றுகிறது.

மரணம் தொலைபேசியைக் கண்டுபிடித்தது, அது மரணத்தின் பலிபீடம்
தொலைபேசியை வழிபட வேண்டாம்
அது அதன் வழிபாட்டாளர்களை வாஸ்தவமான கல்லறைகளுக்கு இழுக்கிறது
பலவிதமான சாதனங்களுடன், பல்வகையான குரல்களுடன்

தொலைபேசியின் மத அழுகையைக் கேட்கும்போது கடவுளற்றவர்களாக உட்கார்ந்து கொள்ளுங்கள்

உங்கள் வீடு ஒரு அடைக்கலம் என்று நினைக்க வேண்டாம் : அது ஒரு தொலைபேசி.
நீங்கள் தேர்ந்தெடுத்த பாதையில் பயணிப்பதாக நினைக்க வேண்டாம் : நீங்கள் ஒரு தொலைபேசியில் பயணம் செய்கிறீர்கள்.
நீங்கள் கடவுளின் கரங்களில் தூங்குவதாக நினைக்க வேண்டாம் : நீங்கள் ஒரு தொலைபேசியின் டிரான்ஸ்மீட்டரில் தூங்குகிறீர்கள்.
உங்கள் எதிர்காலத்தை நீங்கள் சிந்திக்க முடியாது : அது தொலைபேசியில் இருக்கிறது.
உங்கள் எண்ணங்களை உங்களுடையவை என்று நினைக்காதீர்கள் : அவை தொலைபேசியின் காட்சி பிம்பங்கள்.
இந்த நாள் உங்களுடைய நாள் என்று எண்ணாதீர்கள். அவை தொலைபேசியின் குருமார்களுடையவை.

தொலைபேசி என்பது கண்காணிப்பு வளையம்.

ஓ தொலைபேசியே, என் வீட்டை விட்டு வெளியேறு
நீ ஒரு கெட்ட கடவுள்
சென்று வேறு ஏதேனும் தலையணையில் கிசுகிசுக்கவும்
என் வீட்டில் உன் அரவத் தலையை உயர்த்த  வேண்டாம்
இனியும் அழகான மனிதர்களைத் தீண்ட  வேண்டாம்

நீ பிளாஸ்டிக் நண்டு
உன் அசரீரி எப்போதும் முடிவில் ஏன் ஒரே மாதிரியாக இருக்கிறது?
கல்லறைகளிலிருந்து வாரிவரும் கசடுகள்தான் என்ன?

உன் மௌனங்கள் மிக மோசமானவை
புலன் காணாதவற்றையும் காணும் நீ,  உன் தேவைக்கேற்ப, பேச்சற்ற பைத்தியத்தின் கெடுமதியுடன் முடக்குகிறாய்.
உன் சுவாசத்தில் நட்சத்திரங்கள் இணைந்து கிசுகிசுக்கின்றன
உன் பேச்சுக் குழலில் உலகின் வெறுமையான கடல்
முட்டாள்தனமான உன் நரம்புத்தண்டின் படுகுழியில் தொங்குகிறது

அஞ்சல் பெட்டியை உடைத்த பிளாஸ்டிக் ஆயுதம் நீ
தீயதை மட்டுமே கதைக்கும் நீ ஒருபோதும் உச்சரிக்க முடியாது
பொய் அல்லது உண்மையை,
உன் அதிர்வினால் ஒவ்வொருவரின் இருப்பும் இழப்பதைக் குதூகலிக்கிறாய்.

உங்கள் வீட்டின் வேர்களை அது தன் வயர்களால் இறுக்குகிறது.
கருத்த மின் இணைப்புகளின் வழி அழைத்துச் செல்லும்
மரணப் படிகங்களை வெளுக்கும் பயணத்தில்
நீங்கள் வீங்கிப் பெருத்து வாதையில் நெளிகிறீர்கள்
உங்கள் புத்த மனம் கதறுகிறது.

தொலைபேசியின் டெட்டனேட்டரை எடுக்க வேண்டாம்
அதிலிருந்து வெடித்தெழும்பும்  தீச் சுடர்,
சடலமாக வீழ்த்தும் சமத்காரத் தன்மையது.

தொலைபேசியை எடுக்க வேண்டாம்.

*********

குறிப்புகள் :

ஐரோப்பியக்கவிதையின் கடைக்கொழுந்து என்று போற்றப்படும் தெட் ஹியூஸ் (1930 – 1998) ஆங்கில மொழி நவீனகவிஞர்களில்  மிக மிக முக்கியமானவர். உலகப்புகழ்பெற்ற மகத்தான கவிதாயினி ஸில்வியா பிளாத்தின் கணவர் இவர் என்பதும் முக்கியமானது. இவரது கவிதைப் படைப்புத் தன்மை இயற்கையில் வேரூன்றியுள்ளது என்பதை இவரது, புகழ் பெற்ற பல கவிதைகளில் உணரலாம்.  குறிப்பாக, விலங்குகளின் மீதும் பறவைகள் மீதும், சிறுவயதிலிருந்தே பேரார்வம் கொண்டவராக இருந்தார். காக்கையை முன்வைத்து இவர் எழுதிய கவிதைகள் புகழ் பெற்றவை. விலங்குகள், பறவைகள் சார்ந்த இயற்கை உலகில் அழகு மற்றும் வன்முறை சார்ந்த வாழ்வியலின் பரிமாணங்களை கவித்துவ தரிசனத்தில் முன்வைத்தார். இவரது கவிதைகள் இயற்கை ஜீவராசிகளின் வாழ்க்கையைப் பற்றிய மாற்றுப் பார்வைக்கு ஒரு உருவகமாக செயல்படுகின்றன: விலங்குகள் உயர்வு மற்றும் வெற்றிக்காக மனிதர்கள் பாடுபடுவதைப் போலவே விலங்குகளின் பிழைப்புக்கான போராட்டத்தில் வாழ்கின்றன என்பதை “Hawk Roosting” மற்றும் “Jaguar” கவிதைகளில் உணரலாம்.

இவர் முதன்மையாக கவிஞர். சிறுகதை எழுத்தாளர், நாடக எழுத்தாளர், குழந்தைக் கதைகள் எழுத்தாளர் மற்றும் புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளர். இதுவரை இவரது 100 க்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன.

1965 ஆம் ஆண்டில், அவர் மொழிபெயர்ப்பில் நவீன கவிதைகள் என்ற பத்திரிகையை தமது நண்பர் டேனியல் வைஸ்போர்ட்டுடன் நிறுவினார், இதில் செஸ்ஸாவ் மிலோஸ் படைப்புகளை மேற்குலகின் கவனத்திற்குக் கொண்டுவந்தார், அதன் விளைவு, மிலோஸ் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார். எஹுதா அமிச்சாய், கார்ஸியா லோர்கா போன்ற உலகக்கவிகளின் கவிதைகளை மொழியாக்கம் செய்தவர். மற்றும்,  சோவியத் யூனியனால் கட்டுப்படுத்தப்பட்ட போலந்து மற்றும் ஹங்கேரி போன்ற நாடுகளிலிருந்து அரிதாகவே அறியப்பட்ட பல கவிஞர்களின் படைப்புகளை ஆங்கில மொழி பேசும் உலகிற்கு கொண்டு வருவதில் ஹியூஸ் முக்கிய பங்கு வகித்தார். புகழ் பெற்ற செர்பியக் கவிஞரான வாஸ்கோ போபா கவிதைகளின் மொழிபெயர்ப்புக்கு ஹியூஸ் ஒரு அறிமுகம் எழுதினார்.

ஷேக்ஸ்பியர், எமிலி டிக்கின்சன், சில்வியா ப்ளாத், கோல்ரிட்ஜ், ஸீமஸ் ஹீனி போன்ற உலகப்புகழ்பெற்ற கவிஞர்களின் கவிதைகளைத் தேர்வு செய்து, கவிதை நூல்களின் தொகுப்பாசிரியராக செயல் பட்டுள்ளார்.

ஹியூஸின் படைப்புகள் புராணம் மற்றும் பிரிட்டிஷ் தொன்மையான பாரம்பரியத்தில் காலூன்றிச் செல்பவை. கிளாசிக்கல் மற்றும் பழங்கால புராணங்களை மீளுருவாக்கம் செய்வதில் பெரு விருப்பம் கொண்டவர். ரோமானிய தொன்மையான காவியக் கவிஞனான ஓவிட் இயற்றிய “Metamorphoses” காவியத்தை, “Tales from Ovid” என்ற தலைப்பில் கவிதையாக மீளுருவாக்கம் செய்தவர். இது பல்வேறு விருதுகளை வென்றது.

“ஓவிட்டை மாற்றுவதில், ஹியூஸ் ஒரு அற்புதமான பாதையைப் பின்பற்றியிருக்கிறார். குறிப்பாக ஷேக்ஸ்பியர் கிரேக்க மற்றும் ரோமானிய புராணங்களை மீளுருவாக்கம் செய்ததற்கும், இதற்கும் பல்வேறு நுண்ணுணர்வுகள் செயல்படுகின்றன, ஷேக்ஸ்பியர், ஓவிட் உடன் பகிர்ந்து கொள்ளும் தரிசனம் பற்றிய தனது அபிமானத்தை ஹியூஸ் இதில் தெளிவுபடுத்துகிறார்..: என்று புகழாரம் சூட்டுகின்றனர் விமர்சகர்கள்.

***********

தொலைபேசி குறித்த இக்கவிதை தெட் ஹியூஸின் முக்கியமான கவிதையாக இல்லாவிட்டாலும், இக்கவிதை வெளிவந்த சமயங்களில் பெரிதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இது, தொலைபேசி குறித்து, பொதுப்புத்தியில் உறைந்து கிடக்கும் பல்வேறு தொன்மங்களை உடைத்தெறிகிறது. மேலும், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் புத்தமனத்தின் நிலைகளை சமன் குலைக்கும் எதிர்நிலையில் பிளாஸ்டிக் புத்தரை முன்வைக்கும்  நுண்ணிய உருவாக்கத்தில் அவரது ஆசியத் தொன்மங்கள் மீதான காதலை உணரலாம்.

தென்னாப்பிரிக்க பிரிட்டிஷ் எழுத்தாளரும், கவிஞருமான வில்லியம் ப்ளோமர் (1903 -73)  தொலைபேசி பயன்படுத்தாமல் இருப்பது குறித்து “On Not Answering The Telephone” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். இந்த கட்டுரை பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷனில், அவர் ஆற்றிய சொற்பொழிவின் சுருக்கம்.

இந்த கட்டுரை பொதுவாக இயந்திரங்களின் சிறப்புகள் மற்றும் குறைபாடுகள் மற்றும் குறிப்பாக தொலைபேசி பற்றிய மிக முக்கியமான விவாதத்தை ஏற்படுத்தியது. தொலைபேசியை ஏன் தேவையான தீமை என்று ப்ளோமர் கருதுகிறார் என்பதற்கான பல்வேறு தரவுகளை முன்வைத்தார். இயந்திரங்களில் மனிதனின் சார்புநிலை குறித்தும், இயந்திரங்கள் மனிதனை கட்டுப்படுத்தும் கண்ணுக்குப் புலனாகாத அவலம் குறித்தும் விரிவாக முன்வைத்தார். ஒரு தொலைபேசி, நாம் விரும்பாதபோது பெரும்பாலும் ஒலிக்கிறது. நாம் தூங்கும்போது அல்லது உரையாடலின் நடுவில் அல்லது வெளியே செல்லும்போது அல்லது குளிக்கும்போது.  இது ஒருவிதமான இயந்திரவாதம் என்கிறார் அவர். தான், அடிப்படையில் இயந்திரங்களுக்கு எதிரானவன் அல்ல, ஆனால் சர்வ நிச்சயமாக மனிதனின் தேவையற்ற சார்புக்கு எதிரானவன், மனிதன் மீது இயந்திரங்கள் நிகழ்த்தும் ஆதிக்கத்திற்கு எதிரானவன் என்கிறார். நான் அந்த இயந்திரத்தைத் தொடும்போதெல்லாம், அது உடைந்து போகிறது, தீப் பிடிக்கிறது அல்லது வெடிக்கிறது… என்கிறார் ப்ளோமர்.

இந்தக்கட்டுரை உலகம் முழுக்கப் பெரிதும் பேசப்பட்டது. அறிவு ஜீவிகளிடையே, தொலைபேசியை விரும்பாதது ஒரு உலகளாவிய விஷயமாக மாற ஆரம்பித்தது.

**********

இந்தக் கவிதைதான், நான் முதன் முதலாக மொழிபெயர்ப்பு செய்தது. கடந்த வருடத்தில் ஆரம்பித்த இந்த செயல்பாடு, மொழியாக்கத்தின் மீது ஒரு தீவிரமான வசீகரத்தை ஏற்படுத்தியது.

தமிழ்ச் சூழலின் கசப்பான தாக்கத்தினால், எழுதுவதை நிறுத்தியிருந்த கட்டம். சர்வதேச அரங்கில் கால் பாதிக்க வேண்டும் என்று ஆர்வம் எனக்குள் அலையடித்துக்கொண்டிருந்த சமயம், தட்டுத் தடுமாறி, எளிமையான ஆங்கில உரைநடைகளை, எளிமையான கவிதைகளை வாசிக்க ஆரம்பித்தேன். புரியுதோ, இல்லையோ தொடர்ந்து வாசித்துக் கொண்டே இருந்தேன். எனக்குள் பல்வேறுவிதமான காட்சிகள் மங்கலாகப் புலனாகும். காலத்தின் ஒரு ஓரத்தில் அமர்ந்து வாசித்துக் கொண்டே இருந்தேன். அப்படியான தீராத வாசிப்பின் காலமுகட்டில், பளீரென இடைவெட்டோடின இக்கவிதைக் காட்சிகள். கவிதையை வாசித்து முடித்ததும் எனக்குள் ஒரு பரவசமும் அந்தக் கிளர்ச்சியும் அலையடித்தெழுந்தன. மீண்டும் மீண்டும் வாசித்தேன். உடனே அதை என் தாய்மொழிக்கு மாற்றிப்பார்க்க வேண்டும் எனக்கிற மனக்கிளர்ச்சி பொங்கி எழுந்தது.

அதிகாலையின் இளவெயில் என் அறைச்சாளரத்தில் ஏறியடிக்க, மொழியாக்க வேலையைத் துவக்கினேன்.  முதலாவதாக செல்பேசியை அணைத்து வைத்தேன். எனக்கு உடல்நலம் சரியில்லை. ஓய்வெடுக்கிறேன் என்னை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம் என்று சொல்லி விட்டு அறைக்கதவைத் தாழிட்டுக்கொண்டு வேலையைத் தொடங்கினேன். ஒரு வழியாக  மொழியாக்கம் முடிந்தபோது, அந்தி மந்தாரையின் வாசனையை என் நாசி சுவாசித்துக் காட்டியது. சட்டென கடுமையாக பசி எடுத்தது. எழுந்து சாப்பிடச் சென்றேன்.

இல்லாள் ஒரு டம்ளரில் பால் பாயசம் கொண்டுவந்து தந்தார். ஹ்ஹா ! மொழிபெயர்ப்புக்கு இவ்வளவு பெரிய Treat ஆ?

பிறகுதான் தெரிந்தது, அன்றைக்கு செப்டம்பர் 17 என்னுடைய பிறந்தநாள். பற்களில் நிரடிய முந்திரிப் பருப்பின் சுவை அதுவரை ருசித்தறியாத பேரின்பத்தைக் கொடுத்தது.

அன்றைக்கு இரவு வெகுநேரம் வரை கவிதையில் சில நகாசு வேலைகள் செய்தேன். ஒரு பெரும் பூரிப்பான திருப்தியுடன் படுக்கையில் சாய்ந்தேன்.

அடுத்த நாள் முகநூலில் கவிதையை வெளியிட்டேன்.  கவிதை நீளமாக இருந்ததால்  கவிதையின் சில பாராக்களை மட்டும் வெளியிட்டேன். முகநூல் நண்பர்கள் பெரிதும் பாராட்டினார்கள். மொழியாக்கத்தை கொண்டாடினார்கள். எனக்குள் அப்போது எழுந்த மன உத்வேகம் பெரும் சூறாவளியாக மாறி தினம் ஒரு கவிதை என, 132 கவிதைகளை மொழியாக்கம் செய்யும் வல்லமையைக் கொடுத்தது.  எனக்குள் பெரும் உத்வேகத்தையும் அந்த எழுத்தியக்கத்தின் மீது பெரும் அன்பையும் ஆதரவையும் தந்தவர்கள் முதன்மையாக முகநூல் நண்பர்களே.. அவர்களை இந்தக்கணம் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

 

**********

unnatham

One thought on “தொலைபேசியை எடுக்க வேண்டாம் – தெட் ஹியூஸ்

  1. முதல் முயற்சியே சிறப்பாக இருக்கிறது. சிறப்புங்க ஐயா. உலகக் கவிதைகள் மீது இப்போது அதீதமாக ஆவல் எழுகிறது. தமிழி தொடர்ந்து ஆக்கப்பூர்வமாக வெளிவருவதில் மகிழ்கிறேன். வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top