TAMILI

தமிழி

Tribal Scars – Ousmane Sembène

 

Tribal Scars
– Ousmane Sembène
Tamil translation : Lingaraja Venkatesh

தொல்குடி தழும்புகள்
– செம்பேன் உஸ்மான்
தமிழில் : லிங்கராஜா வெங்கடேஷ்

 

மாலை நேரங்களில் நாங்கள் எல்லோரும் மானேவின் கடையில்தான் இருப்போம், அங்கே கிடைக்கும் புதினா தேநீரைக் குடித்துக்கொண்டு நாங்கள் விவாதிக்காத விடயங்களே இல்லை, அவை குறித்து எங்களுக்கு முழுமையாகத் தெரியாமல் இருந்தாலும் கூட. ஆனால் சில நாட்களாக, முன்னாளைய பெல்ஜியன் காங்கோ, மாலி ஒன்றியத்தின் சிக்கல்கள், அல்ஜீரியப் போர் மற்றும் வரவிருக்கும் ஐக்கிய நாடுகளின் கூட்டம் போன்ற எந்த முக்கியமான பிரச்சினைகள் பற்றியும் பேசுவதைத் தவிர்த்துவிட்டோம். எங்களது அரட்டையின் கால்வாசி நேரத்தை எடுத்துக்கொள்ளும் பெண்கள் பற்றிய பேச்சு கூட இல்லாமல் போய்விட்டது. இதற்கெல்லாம் காரணமாக இருந்தது, அவ்வளவு எளிதில் எந்த உணர்வுகளுக்கும் ஆட்பட்டுவிடாத, சேயர் கேட்ட கேள்விதான், “ நாம் ஏன் தொல்குடி தழும்புகளைக் கொண்டிருக்கிறோம்?” (நான் இங்கே ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும் சேயர், அரை செனகலியனும் அரை வோல்தாவினனும் ஆவான், அவனிடமும் தொல்குடித் தழும்புகள் ஏதும் இல்லை)

எங்களில் யாருடைய முகத்திலும் அத்தகைய தழும்புகள் இல்லாதிருந்தாலும், மானேயின் கடையில் இதுவரை நாங்கள் சந்தித்துக் கொண்ட காலம் முழுமைக்கும் இவ்வளவு உணர்வுப்புர்வமான விவாதத்தை நான் கேட்டதே இல்லை. எவ்வளவு கொந்தளிப்பான வார்த்தைகள் அவை. எங்களது பேச்சை தற்செயலாகக் கேட்க நேரும் எவருக்கும் ஒட்டுமொத்த ஆப்பிரிக்க கண்டத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகி விட்டதாய் தோன்றும். வாரக்கணக்காக மாலை நேரங்களில் தொல்குடி தழும்புகள் குறித்து அதியற்புதமான, எவரும் யோசிக்கவே முடியாத விளக்கங்கள் எல்லாம் முன்வைக்கபட்டன. கடந்தகால வரலாற்றில் எங்கோ புதைந்து போய்விட்டதாய் தோன்றும் இந்த தொன்மத்தின் ஆழத்தை அறிந்துகொள்வதற்காக அங்கே அறிவுக்களஞ்சியங்களாக மதிக்கப்பட்ட சில பெரியவர்களையும் கதைசொல்லிகளையும் தேடி எங்களில் சிலர் பக்கத்து ஊர்களுக்கும் ஏன் தொலைதூரப் பகுதிகளுக்கும் கூட அலைந்து திரிந்தனர். அங்கே முன்வைக்கப்பட்ட அத்த்னை விளக்கங்களையும் சேயரால் மறுக்க முடிந்தது.

ஒருசிலர் அத்தழும்பை உயர்குடிப் பிறப்பின் அடையாளம் என்றும் வேறுசிலர் அது அடிமைத்தளையின் அடையாளம் என்றும் கூறினர். இன்னும் சிலர் “அது ஒரு அலங்காரக் குறியாய் இருந்திருக்கும், முகத்திலோ உடலிலோ இத்தகைய குறிகள் இல்லாத ஆணையோ பெண்ணையோ (துணையாக) ஏற்றுக்கொள்ளாத வழக்கம் கொண்ட ஒரு பழங்குடி இங்கே இருந்திருக்க முடியும்” என்று அறிவித்தனர். எங்கள் முகத்துக்கு நேராகவே ஒரு கோமாளி சொன்னான் “செல்வச் செழிப்பான ஆப்பிரிக்க பழங்குடித் தலைவன் ஒருவன் தனது மகனை ஐரோப்பாவிற்கு படிப்புக்காக அனுப்பினான். போகும்போது சிறுவனாயிருந்த அவன் இப்போது வளர்ந்து பெரியவனாகி இருந்தான். படித்தவனாக இருந்தான், புத்திசாலி என்று கூட சொல்லலாம். கல்விகற்று மீண்டு வந்த அவன் அங்கேயிருந்த பழங்குடி வழக்கங்களை இழிவாகக் கருதத்தொடங்கினான். இதனால் மனமுடைந்த தகப்பன், மகனை பழைய வழக்கங்களுக்கு மீட்டுக் கொண்டுவருவது குறித்து கவலை கொண்டான். ஊர்ப்பூசாரியிடம் ஆலோசித்தான். ஒருநாள் காலையில் மக்கள் முன்னிலையில் ஊர்மந்தையில் வைத்து மகனின் முகத்தில் வெட்டுக்காயங்கள் ஏற்படும்படி கீறப்பட்டது.” இந்தக் கதையை அங்கே எவரும் நம்பவில்லை. அவன் மிகுந்த தயக்கத்துடன் அதை ஒத்துக்கொண்டான்.

வேறொருவன் சொன்னான்: “நான் பிரெஞ்சு கல்விநிலையத்திற்குச் சென்று புத்தகங்களில் ஏதெனும் குறிப்பு கிடைக்குமா என்று பார்த்தேன், ஒன்றும் அகப்படவில்லை. இருந்தாலும் ஒரு விசயத்தைத் தெரிந்து கொண்டேன், சில கனவான்களின் மனைவிமார் தமது முகத்திலிருந்து இத்தகைய தழும்புகளை நீக்கியிருக்கின்றனர், இதற்காக அவர்கள் ஐரோப்பா சென்று அங்குள்ள அழகுக்கலை நிபுணர்களை சந்தித்திருக்கின்றனர். ஆப்பிரிக்க அழகிக்கான(போட்டி) புதிய விதிமுறைகள் நமது மரபான நடைமுறைகளை வெறுத்தொதுக்கி விட்டன. பெண்கள் அமெரிக்கமயமாகி வருகின்றனர். இது நியூயார்க்கின் ஐந்தாவது பெருவீதியின் கறுப்பர்களுடைய தாக்கத்தால் பரவியதுதான். இவ்விதமான போக்குகள் பெருகவே தொல்குடி தழும்புகள் அதன் அர்த்தத்தை இழந்ததுடன் அதன் முக்கியத்துவமும் மறைந்துவிட்டது.”

அந்த தழும்புகளின் வேறுபாடுகள் குறித்து, ஒரே இனக்குழுவுக்குள் இருக்கும் அதனுடைய வேறுபட்ட தன்மைகள் குறித்து கூட நாங்கள் பேசினோம். உடலில் மட்டுமல்லாது முகத்திலும் வெட்டுக்கள் இருந்திருக்கின்றன. இதெல்லாம் ஒருவரை இவ்வாறு கேட்கத் தூண்டியது “ இந்த தழும்புகள் ஒருவரது உயர்குடி பிறப்பையோ, மேல் அல்லது கீழ் சாதியையோ குறிப்பனவாக இருந்தால், இவை ஏன் அமெரிக்கா எங்கும் காணப்படவில்லை”

“ஆ… ஒருவழியாக நெருங்கி வந்து விட்டோம்…” சேயர் மகிழ்ச்சியோடு கத்தினான், உண்மையில் அவனது கேள்விக்கான பதில் அவனுக்குத்தானே தெரியும்.

“சொல்லிவிடு, நாங்கள் தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்” என்று கெஞ்சினோம்.

சேயர் சரியென்று சொல்லிவிட்டு, அங்கிருந்த வேலையாள் சூடான தேநீரை தம்ளர்களில் ஊற்றிவிட்டுக் கடந்துபோகும் வரை அமைதியாக இருந்தான். அப்போது அந்த அறை முழுவதும் புதினாவின் வாசனை நிரம்பியிருந்தது.

“ஆக… ஒருவழியாக நமது பேச்சு அமெரிக்கா குறித்து வந்து விட்டது”, சேயர் பேசத்தொடங்கினான். “நானறிந்த வரையிலும் அடிமைமுறை மற்றும் அடிமை விற்பனை குறித்து எழுதிய நம்பகமான எழுத்தாளர்கள் எவரும் இந்த தழும்புகள் குறித்து எங்கும் குறிப்பிட்டதேயில்லை. இன்று வரையிலும் மாந்திரீகம் மற்றும் சூனியம் போன்றவற்றை நடைமுறையில் கொண்டிருக்கும் தென்னமெரிக்க அடிமைகளிடத்திலும் இந்த தழும்புகள் ஏதும் காணப்பட்டதேயில்லை. கரீபிய தீவுகளில் வாழும் கறுப்பர்களிடத்திலும் இது இல்லை, ஹைதி, கூபா, டமினிகன் குடியரசு என இங்குமே இது இருந்ததில்லை. அடிமை வணிகத்திற்கு முந்தைய கறுப்பு ஆப்பிரிக்காவிற்கு வருவோம், பழைய கானா பேரரசு, மாலி மற்றும் காவு பேரரசின் காலத்திற்கும் மேலும் ஹாசா, பார்னாவ், பெனீன், மோஸி போன்றவற்றின் இராஜ்ஜியங்களுக்கும் நகரங்களுக்கும் பயணித்தவர்களின் குறிப்புகளிலும் தொல்குடி தழும்பு என்ற நடைமுறை பற்றிய குறிப்புகள் எதுவுமே இல்லை. அப்படியானால் இது எங்கே தொடங்குகிறது?”
இப்போது எல்லோருமே தேநீரை உறிஞ்சுவதை நிறுத்தியிருந்தனர், கவனம் முழுவதையும் சேயரிடம் வைத்திருந்தனர்.

“அடிமை வணிகத்தின் வரலாற்றை புறவயமாக ஆராய்ந்து பார்த்தோமானால், திடகாத்திரமான, ஆரோக்கியமான அதேவேளையில் உடலில் ஒரு சிறு கீறல்கூட இல்லாத கறுப்பர்களையே வியாபாரிகள் விரும்பியதை நாம் தெரிந்துகொள்ளலாம். ஆப்பிரிக்காவின் அடிமைச் சந்தைகளிலும் சரி, கடத்தப்பட்டு வேறுநாடுகளில் சேரும்போதும் சரி அவர்கள் பரிசோதிக்கப்பட்டு, எடை பார்க்கப்பட்டு ஒரு விலங்கைப் போல மதிப்பிடப்பட்ட செய்திகள் எல்லாம் நாம் அறிந்ததுதான். உடலில் காயங்களோ உறுப்புச் சிதைவுகளோ உள்ளவர்களை எவரும் ஏற்றுக்கொள்வதில்லை. அடிமை வியாபாரி இடும் அடையாள முத்திரையைத் தவிர அந்தச் சரக்கில இருக்கும் வேறெந்த குறைபாடும் பொறுத்துக் கொள்ளப்படாது. சந்தையில் அடிமைகளை ஏலம் விடுவதற்கான முன்தயாரிப்புகள் சில இருந்தன, அவர்களைக் குளிப்பாட்டி, பொலிவாக்கி, வெளுப்பாக்கி- அவர்கள் சொல்கிறபடி – விலையேற்றுவர். இவ்வளவும் இருக்கும்போது இந்த தழும்புகள் எப்படித் தோன்றியிருக்க முடியும்?”

எங்களால் விடைகாண முடியவில்லை. அவனது வரலாற்று ஆய்வு அந்த புதிரின் ஆழத்தை மேலும் ஆழப்படுத்தியதாக எங்களுக்குத் தோன்றியது. “சேயர், நீயே எல்லாவற்றையும் சொல்லிவிடு” அவன் சொல்லப்போகும் தொல்குடி தழும்புகளின் தோற்றக்கதையை அறிந்துகொள்ளும் ஆர்வமிகுதியோடு கேட்டோம்.

இவைதான் அவன் எங்களுக்கு சொல்லியது.

‘ஆப்பிரிக்கன்’ என்கிற அந்த அடிமைக் கப்பல் தன்னை நிரப்பிக்கொண்டு அடிமை தேசங்களுக்கு புறப்படுவதற்கு முன்பாக அந்தக் கடலில் நாட்கணக்கில் நங்கூரமிட்டு நின்றுகொண்டிருந்தது. ஏற்கனவே அங்கே 50க்கும் மேற்பட்ட ஆண்களும் 30 பெண்களும் பிடித்து வைக்கப்பட்டிருந்தனர். அந்த கப்பல் தளபதியின் கங்காணிகள்(ஆள் பிடிப்பவர்கள்) அந்த நிலப்பகுதி முழுவதும் சரக்குகளைத் தேடி அலைந்து கொண்டிருந்தனர். அந்த குறிப்பிட்ட நாளில் தளபதியோடு ஒரு மருத்துவர் உள்ளிட்ட மிகக்குறைவான சிப்பந்திகளே மேல்தளத்தில் இருந்தனர். அவர்கள் எல்லோரும் மருத்துவரின் அறையில் இருந்தனர். அவர்களின் பேச்சொலியை கீழ் தளத்திலும் கேட்க முடிந்தது.

ஆமூ தன்னைப் பின்தொடர்ந்து வருபவர்களை பின்னோக்கி குனிந்து பார்த்தான், அவன் எந்தவிதமான் உடலுழைப்பிற்கும் ஏற்ற வலுவான உடலமைப்பும், தசைக் கட்டுகளும் கொண்டு தாட்டியமாகத் தோன்றினான். ஒரு கையில் கோடரியை இறுகப்பற்றியிருந்தான் மறுகையில் கடலோடிகள் பயன்படுத்தும் வளைந்த குறுவாள் ஒன்றை வைத்திருந்தான். பூனையைப் போல பதி போட்டு மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்தான். ஆயுதமேந்திய பலர் மெதுவாக மேல்தளத்தின் சுற்றுச்சுவர்களினின்று (கப்பலின்)உள்ளே ஒருவருக்குப் பின் ஒருவராக இறங்கிக் கொண்டிருந்தனர். மொமுது, அவர்களின் தலைவன், ஓரங்களில் சிவப்புப் பட்டை கொண்டு தைக்கப்பட்ட நீல நிறச் சீருடையும், கருப்பு பூட்ஸுகளும் அணிந்திருந்தான். தனது நெடிய ஒற்றைக்குழல் துப்பாக்கியை(Musket) நீட்டி அந்தக் கப்பலை முற்றுகையிட சைகை செய்தான். எங்கிருந்தோ தோன்றிய கப்பலின் இஞ்சின் பணியாளன் தப்பிச்செல்வதற்காக கடலில் குதித்தான். சிறு தோணிகளில் ஏற்கனவே அங்கிருந்த கறுப்பர்கள் அவனைப் பிடித்து ஈட்டியெறிந்து கொன்றனர்.

கப்பலினுள் மோதல் தொடங்கிவிட்டிருந்தது. தாக்குதலுக்கு முன்னேறிக் கொண்டிருந்தவர்களை நெருங்க முயற்சித்த சிப்பந்திகளுள் ஒருவன் அடித்து வீழ்த்தப்பட்டான். தளபதியும் ஏனையவர்களும் மருத்துவரின் அறைக்குள் தாழிட்டுக் கொண்டனர். மொமுதும், கைகளில் துப்பாக்கிகளும் குறுவாட்களும் ஏந்திய அவனது ஆட்களும் அந்த அறையைச் சூழ்ந்துகொண்டு தாக்கினர். தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டனர். அதேவேளையில் கப்பலைக் கொள்ளையிடுதலும் நடந்துகொண்டிருந்தது. துப்பாக்கிகள் வெடிக்கிற சத்தம் கரையிலிருந்து இன்னும் அதிகமான (மொமுதுவின்)ஆட்களை கப்பலை நோக்கி கொண்டுவந்தது. அவர்கள் சிறு தோணியில் வருவதும் (கொள்ளை) பொருட்களை கரைக்கு அள்ளிச் செல்வதுமாக இருந்தனர்.

மொமுது தனது கும்மாந்தான்களில் நால்வரை அழைத்தான், “இங்கே பிணைத்து வைக்கப்பட்டுள்ள அத்தனை கைதிகளையும் விடுவியுங்கள்” என்றான்.

அவனது இரண்டாம் நிலை கும்மாந்தான் அங்கே வழியில் நின்றிருந்த ஆமூவைக் காட்டி தலையசைத்தவனாய், “அவனை என்ன செய்வது” என்று மொமுதுவிடம் கேட்டான்.

“அவன் தனது மளைத் தேடி வந்திருக்கிறான், அவனைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். முதலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களை எல்லோரையும் விடுவியுங்கள், ஆனால் உள்ளூர்காரன் எவனிடமும் ஆயுதங்களைத் தரவேண்டாம்” என்று மொமுது ஆணையிட்டான்.

கரிமருந்து வாடையும் வியர்வை நாற்றமும் கலந்து அங்கே காற்றின் கணத்தை இன்னும் கூட்டியிருந்தன. ஆமூ உள்நுழையும் கதவை பலமாகத் தாக்க, பிறகு அது கோடரிகள் மற்றும் உலோகத்தடிகளின் தாக்குதலில் முற்றிலுமாக உடைந்துவிட ஏதுவாகிப் போனது.

புழுங்கிய வாடை நிறைந்திருந்த அந்த அடித்தளத்தில் அனைவரின் கணுக்கால்களும் ஒரே சங்கிலியால் கட்டப்பட்டிருந்தன. துப்பாக்கிகள் முழங்கும் சத்தம் கேட்டதில் பாதி மகிழ்ச்சியிலும் பாதி அச்சத்திலும் அவர்கள் கூப்பாடு போடத் தொடங்கியிருந்தனர். கப்பலிம் நடுத்தளங்களிலிருந்து பெண்களின் ஓலம் கேட்டுக்கொண்டிருந்தது. இவ்வளவு இரைச்சல்களுக்கு மத்தியிலும் ஆமுவிற்கு தனது மகளின் சத்தத்தை இனங்காண முடிந்தது. அவனது உடலிலிருந்து வியர்வை ஊற்றிக் கொண்டிருந்தது. தனது பலம் முழுவதையும் திரட்டி அங்கிருந்த அடைப்புத் தட்டிகளை வெட்டியெறிந்தான்.

“சகோதரா…. கொஞ்சம் இங்கே பார்“ ஒருவன் அழைத்தான் “ உனது மகளைத் தேடுகிறாயா?”.

“ஆமாம்” பரிதவிப்பில் ஆமூவின் கண்கள் மின்னின.

சில மணிநேர போராட்டங்களுக்குப் பிறகு அனைத்து அடைப்புகளும் திறக்கப்பட்டன. மொமுதுவின் ஆட்கள் அங்கே பிடிக்கப்பட்ட அனைவரையும் கப்பலின் மேல்தளத்தில் கொண்டுவந்து நிறுத்தினர். அத்தளத்தில் பண்டமாற்றுக்காக எரிசாராய பீப்பாய்களும், கத்திகள் நிறைந்த பெட்டிகளும், கண்ணாடிப் பொருட்களைக் கொண்ட மரப்பெட்டிகளும், பட்டு மற்றும் இதர துணிப்பொதிகளும் குவித்து வைக்கப்பட்டிருந்தன. ஆமூ தனது மகள் அயோமைக் கண்டுபிடித்திருந்தான். அவர்களிருவரும் அந்த கூட்டத்தினின்று சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்த்னர். ஆமுவிற்கு நன்றாகத் தெரியும் மொமுது இந்த கப்பலில் அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்களை விடுவித்தது வேறிடத்தில் விற்பதற்கு என்பது. ஆப்பிரிக்கான கப்பலின் தளபதியை இந்த கடற்பகுதிக்கு வரத்தூண்டி வஞ்சித்தவன் மொமுதுதான்.

“ நாம் எல்லோரும் இப்போது கரைக்குப் போகிறோம். எச்சரிக்கிறேன், நீங்கள் எல்லோரும் எனது கைதிகள். யாரேனும் தப்பவோ அல்லது தற்கொலைக்கோ முயற்சித்தால் வரிசையில் அவனுக்குப் பின் நிற்பவன் கண்டந்துண்டமாக வெட்டப்படுவான்” மொமுது எல்லோரையும் எச்சரித்தான்.

சூரியன் தொடுவானத்தில் இறங்கி கொண்டிருந்த வேளையில் அந்த கடற்பரப்பு வெள்ளியாய் மின்னிக் கொண்டிருந்தது. மொமுதுவின் ஆட்கள் கொள்ளைப் பொருட்களை சிறு தோணியில் ஏற்றிக்கொண்டு கரையை நோக்கி புறப்பட்டனர். மொமுது, அவனை கேள்வி கேட்க அங்கே எவருமில்லை, ஆட்களுக்கு கட்டளையிட்டுக் கொண்டும் அங்கே நடப்பவற்றை மேற்பார்வையிட்டுக் கொண்டுமிருந்தான். அவனது ஆட்கள் இன்னும் கப்பலின் மேல்தள அறைக்கு வெளியில் நின்றுகொண்டிருந்தனர், தங்களின் இருப்பை மற்றவர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் சில நிமிடங்களுக்கொரு முறை துப்பாக்கிகளால் கதவை நோக்கிச் சுட்டுக் கொண்டேயிருந்தனர். கப்பல் முழுமையாகத் துடைத்தெடுக்கப்பட்ட பிறகு கப்பலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு பெட்டி வெடிமருந்துக்குப் போகும் நீண்ட திரியை மொமுது பற்ற வைத்தான். எல்லாம் ஓய்ந்ததாக முடிவுசெய்த கப்பல் தளபதி மேற்தளத்துக்கு ஏறி வந்து, தனது அறையை அடைந்த நொடிப்பொழுதில் அவனது நடுமார்பில் குண்டு பாய்ந்தது. கடைசித் தோணி கப்பலை விட்டு புறப்பட்டு கரை திரும்பிக் கொண்டிருந்தது, நடுவழியில் அது வந்துகொண்டிருக்கும்போது வெடிமருந்துகள் வெடிக்கத்தொடங்கின; பிறகு ஆப்பிரிக்கன் சிதறி கடலில் ஆழ்ந்தது.

எல்லாச் சரக்குகளும் கரைக்கு வந்துவிட்ட வேளையில் முற்றிலுமாக இருள் சூழ்ந்திருந்தது. சிறைபிடிக்கப்பட்ட அடிமை மந்தை அங்கே ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தது, அவர்களது கைகளும் கால்களும் கட்டப்பட்டிருந்தாலும், அங்கே காவலுக்கு ஒருவன் நின்றிருந்தான். சன்னமான பேச்சொலியும் விசும்பல்களும் இரவு முழுக்க கேட்டுக் கொண்டேயிருந்தன, அதுவும் கூட சுளீரென்ற கசையடியின் ஓசையோடு அவ்வப்போது நிற்பதும் பின்பு தொடர்வதுமாக இருந்தது. சற்றுத் தொலைவில் மொமுதும் அவனது பரிவாரங்களும் விண்மீன்கள் மினுக்கிக் கொண்டிருந்த வானத்திற்குக் கீழே கொள்ளைப் பொருட்களை கணக்கிட்டுக் கொண்டும் மது குடித்துக் கொண்டும் கிடந்தனர்.

மொமுது ஆமூவை அழைத்துவரச் சொல்லி ஆள் அனுப்பினான்.

ஆமூ உறங்கிக் கொண்டிருந்த மகளை முதுகில் சுமந்தபடி அந்த இருளில் நின்று கொண்டிருந்தான். “நீங்களும் எம்மோடு குடிக்க வருவீர்கள்தானே?” மொமுது கேட்டான்,

அந்த அழைப்பை மறுத்த ஆமூ “ நான் இரண்டு மாதங்களாக உங்களோடு இருந்திருக்கிறேன். இப்போது நான் போயாக வேண்டும். எனது ஊர் இங்கிருந்து வெகு தொலைவில் இருக்கிறது மேலும் இந்த கடற்கரை அவ்வளவு பாதுகாப்பான இடமும் இல்லை.”

“அடிமை வியாபாரிகளிடம் பிடிபடுவதைத் தவிர்ப்பதற்காக நீ உனது மனைவியைக் கொன்று போட்டது உண்மையா?” அங்கிருந்தவர்களுள் ஒருவன் மதுவை உறிஞ்சியபடி கேட்டான்.

“ஊ ஹூம்”

“உனது மகளைக் காப்பாற்றுவதற்காக மீண்டும் ஒருமுறை துணிந்திருக்கிறாய், இல்லையா?”

“இவள் என் மகள்! எனது இரத்த உறவுகள் ஒருவர் பின் ஒருவராக திக்குத் தெரியாத தேசங்களுக்கு அடிமைகளாக கொண்டு போகப்பட்டதை பார்த்தவன் நான். அடிமையாக்கப்படுவதை தவிர்ப்பதற்காக எனது மக்களுடன் ஓடியபடியும், மிகுந்த அச்சத்துடனுமே வளர்ந்தவன். எமது இனத்திற்குள்ளே அடிமைகள் எவருமில்லை, நாங்கள் எல்லோரும் சமமானவர்கள்”

“அதனால்தான் நீங்கள் கடலோரங்களில் வசிப்பதில்லையோ” ஒருவன் இடைமறித்தான், இதைக் கேட்ட மொமுது சத்தமாக கெக்கலித்தான். “ சரி.. வா.. கொஞ்சம் குடி! நிச்சயமாக நீ பெரிய வீரன் தான். கோடரியை அற்புதமாகக் கையாள்பவன். நீ அந்த மாலுமியை வெட்டிப் போடும்போது நான் பார்த்தேன்”

“என்னோடு இருந்துவிடு, நீ திடமானவன் மேலும் உனக்கு என்ன தேவை என்பதை அறிந்தவன்” மதுக் கலயத்தை நீட்டியபடி மொமுது சொன்னான். ஆமூ தயக்கத்துடன் அதை மறுத்து விட்டான். மொமுது தொடர்ந்தான் “ இதுதான் எங்களது வேலை, இந்த புல்வெளி முழுவதும் அலைந்து மக்களைப் பிடித்து வெள்ளையரிடம் விற்கிறோம். நிறைய கடலோடிகள் என்னை அறிவர், இருந்தாலும் மற்றவர்களை வஞ்சகமாக இந்த கடற்பரப்பிற்கு வரவழைத்து விடுவேன். எனது ஆட்கள் சிப்பந்திகள் அனைவரையும் ஏமாற்றி கரைக்கு வரச்செய்வர். பிறகு கப்பலைக் கொள்ளையிட்டு அதிலிருக்கும் அடிமைகளை மறுபடியும் கைப்பற்றிக் கொள்வோம். கப்பலில் இருக்கும் ஒரு வெள்ளையனைக் கூட உயிரோடு விடமாட்டோம். எங்களுக்கு இது எளிதான வேலைதான், ஒருபோதும் நாங்கள் தோற்றதில்லை. நான் உன் மகளை உனக்கு திரும்ப அளித்திருக்கிறேன். நல்ல சரக்குதான் அவள், சில இரும்பு பாளங்களுக்குப் பெறுமதியுடையவள்” ( 17ம் நூற்றாண்டு வரை ஆப்பிரிக்காவின் மேற்கு கடலோரங்களில் வெறும் சிப்பி மாலைகளுக்காகவும் ஏனைய பிற குறைமதிப்புள்ள பொருட்களுக்காகவுமே அடிமைகள் விற்கப்பட்டனர். பின்னாளில் அந்த இடத்தை இரும்பு பாளங்கள் பிடித்துக் கொண்டன. பிற எல்லா அடிமைச் சந்தைகளிலும் இது பண்டமாற்றுக்கான ஒரு பொருளாக இருந்ததை அறிய முடிகிறது).

“நானும் மனிதர்களைக் கொன்றிருக்கிறேன், உண்மைதான்… ஆனால் ஒருபோதும் எவரையும் பிடித்து அடிமைகளாக விற்றதில்லை. எனது வேலை அதல்ல, அது உங்களுடையது. நான் எனது ஊருக்குத் திரும்பவே விரும்புகிறேன்” ஆமூ.

“என்ன மாதிரியான ஆள் இவன், தனது ஊர், பொண்டாட்டி, பிள்ளை தவிர எதையும் நினைக்காதவன்”

எந்த நேரத்திலும் எதையும் செய்யத் துணிபவர்கள் அவர்கள் என்பதை மட்டும் ஆமூவால் யூகிக்க முடிந்தது. இவர்கள் அடுத்து சந்திக்கப் போகும் எந்த வியாபாரியிடமும் தன்னையும் தனது மகளையும் பிடித்து விற்று விடுவதற்கு யோசிக்கவே மாட்டார்கள் என்பதும் அவனுக்குத் தெரியும்.

“நான் இன்று இரவே புறப்பட விரும்புகிறேன்”.

“ இல்லை…. “ மொமுது கத்தினான், மதுபோதை வேலை செய்யத் தொடங்கியிருந்தது. இருந்தாலும் கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொண்டு மெதுவாகப் பேசினான் “ அடுத்த கொள்ளை வரை ஒன்றாக இருப்போம். எனது ஆட்களில் சிலர் மற்ற வெள்ளையருடன் அடிமைகளைப் பிடித்துவரச் சென்றிருக்கிறார்கள். நாம் அவர்களைக் கைப்பற்றியாக வேண்டும். அது முடிந்த பிறகு நீ தாராளமாகப் போய்க்கொள்”

“நான் போய் இவளை உறங்க வைக்கிறேன், மிகுவும் சிரமப்பட்டிருக்கிறாள்” சொல்லிவிட்டு ஆமூ தனது மகளுடன் விலகிப் போனான்.

“அவள் ஏதாவது சாப்பிட்டாளா?”

“இரண்டு பேருமே நன்றாகச் சாப்பிட்டு விட்டோம், நான் சீக்கிரம் எழுந்து வருகிறேன்”

இருவரும் இருளில் சென்று மறைந்தனர்; ஆனாலும் ஒருவன் அவர்களைப் பின் தொடர்ந்தான்.

“அவன் தாட்டியமானவன், நான்கு கலயங்கள் வரை தாங்குவான்” மொமுது

“எல்லாவற்றிற்கும் மேல், அவன் சில இரும்பு பாளங்களையும் மற்ற சில பொருட்களையும் இன்று கப்பலில் கைப்பற்றியிருக்கிறான்” இது வேறொருவன்.

“அவசரப்படாதீர்கள், நாளை சண்டை முடியட்டும். அவனையும் அவன் மகளையும் பிடிப்போம். அவள் நல்ல சரக்கு. அவர்களைத் தப்ப விடக்கூடாது.. இன்றைய நிலையில் இந்தக் கடலோரம் எங்கு தேடினாலும் அவர்களைப் போல் யாரும் கிடைக்க மாட்டார்கள்”

இதமான குளிர்ந்த காற்று கடலிலிருந்து வீசிக் கொண்டிருந்தது. விண்மீன்கள் நிறைந்த அந்த வானத்தின் கீழ் இரவு கவிழ்ந்திருந்தது. அவ்வப்போது வலியினால் எழும் கதறலும் அதைத் தொடர்ந்து கசையடியின் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது. ஆமூ அயோமுடன் மற்றவர்களிடமிருந்து கொஞ்சம் தள்ளி அமர்ந்திருந்தான். உறக்கச் சடவு அவன் முகத்தில் தெரிந்தாலும், அவனது கண்கள் விழிப்போடு இருந்தன. சில காலமாக இந்த சண்டைகளில் அவன் சேர்ந்து கொண்டதெல்லாம் தனது மகளை எங்காவது பார்த்து மீட்டுவிடுவோம் என்ற நம்பிக்கையில்தான். மொமுது இவனது திறன்களை நன்கு அறிந்தவனாக இருந்தான். மூன்று மாதங்களுக்கு முன்பு அடிமை வேட்டைக்காரர்கள் ஆமூவின் ஊரைத் தாக்கி திடனாக இருக்கும் அனைவரையும் பிடித்துச்சென்றிருந்தனர். அவன் அன்று புதர்க்காடுகளில் மறைந்து திரிந்து கொண்டிருந்ததால் இதிலிருந்து தப்பியிருந்தான். யானைக்கால் நோய் இருந்தமையால் விடப்பட்ட அவனது மாமியார் இந்த சம்பவங்கள் முழுவதையும் அவனிடம் சொல்லியிருந்தாள்.

தனது மகளை ஆமூ கப்பலிலிருந்து மீட்ட பொழுதில் அவனது கண்கள் ஆறாய்ப் பெருகிவிட்டிருந்தது. இரத்தம் தோய்ந்த கோடரியை ஒரு கையிலும் மகளின் மணிக்கட்டை மறுகையிலும் இறுகப் பற்றியிருந்தான். அவனது இதயம் படபடத்துத் துடித்துக் கொண்டிருந்தது. அயோம் விம்மிக் கொண்டிருந்தாள் அவளுக்கு ஒன்பது அல்லது பத்து வயதுதான் இருக்கும்.

இப்போது அவன் அவளது அச்சத்தை தணிக்க முயன்றான் “ நாம் மறுபடியும் ஊருக்குப் போகிறோம். நீ அழக்கூடாது, நான் சொல்வதை மட்டும் கேட்க வேண்டும், புரிகிறதா?

“சரியப்பா”

“சரி.. அழக்கூடாது. எல்லாம் முடிந்தது! அப்பா உன்னுடன் இருக்கிறேன்”

இரவின் மடி அங்கே விரிந்து கிடக்க, அயோம் தனது தந்தையின் மடியில் தலைவைத்து உறங்கிக் கொண்டிருந்தாள். ஆமூ கோடரியின் பிடியை சற்று தளர்த்தி கைகளுக்கு அருகிலேயே வைத்துக் கொண்டான். மரத்தில் முதுகைச் சாத்தியிருந்தான், அவனது முழுக்கவனமும் சுற்றி நடப்பவை குறித்தே இருந்தது. சிறிய சல சலப்புக்குக் கூட அவனது கை கோடரியைப் பற்றிக்கொண்டது. இடையிடையே சற்று அயர்ந்து போனான்.

கிழக்கே வெள்ளி முளைக்கும் முன்னமே மொமுது தனது ஆட்களை எழுப்பினான். பிடிபட்ட அடிமைகளையும் கொள்ளைப் பொருட்களையும் பாதுகாபான இடங்களுக்கு கொண்டுசெல்ல சிலர் பணிக்கப்பட்டனர். ஆமூவும் அயோமும் இதனின்று விலகியே நின்றனர். அவள் கொஞ்சம் உள்விழுந்த கண்களோடு அவளது வயதுக்கு சற்று உயரமாகவே தோன்றினாள்: நடுவகிடெடுத்து வாரி பின்னப்பட்ட இரட்டைச் சடை அவளது தோள் வரை தொங்கிக் கொண்டிருந்தது. அவள் தகப்பனுடன் ஒட்டிக்கொண்டிருந்தாள்; கப்பலில் அவளோடு இருந்தவர்களைப் பார்த்தாள், அவர்களுக்கு நேரப்போவது அவளுக்குத் தெரியாமலிருக்கலாம் ஆனால் இப்போது அவர்கள் இருக்கும் நிலைக்கு இரவில் சத்தம் எழுப்பிய கசையடிகள் தான் காரணம் என்பதில் அவளுக்கு சந்தேகமில்லை.

“அவர்கள் எல்லோரும் அங்கே நமக்காக காத்திருப்பார்கள்” மொமுது பேசிக்கொண்டே ஆமூவை நோக்கி வந்தான். “ வெள்ளையரின் ஒற்றர் கண்ணில் பட்டுவிடும் நிலைக்கு நாம் போய்விடக்கூடாது. பிள்ளையை ஏன் இன்னும் கையில் பிடித்திருக்கிறாய்? எனது ஆட்கள் யாரிடமாவது விட்டிருக்க வேண்டியது தானே”

“இவள் மிகவும் பயந்திருக்கிறாள், நான் இவளுடன் இருக்கவேண்டும்” அடிமைகளும் காவலர்களும் புறப்படுவதைப் பார்த்துக் கொண்டே ஆமூ பதிலளித்தான்.

“அழகான குழந்தை”

“ஆமாம்”

“அவளது தாயைப் போலவே…..”

“அந்தளவுக்கு இல்லை..”

மொமுது வேறுபக்கம் திரும்பி மீதமிருக்கும் ஆட்களை, முப்பது பேர் இருக்கலாம், புறப்படச் செய்தான். ஒற்றை வரிசையில் அவர்கள் போய்க்கொண்டிருந்தனர். மொமுது அடிமை வியாபாரிகளின் மத்தியில் பிரபலமானவன், மேலும் அவர்கள் எவரும் இவனை முழுமையாக நம்புபவர்கள் இல்லை. அவன் முதலில் சில வியாபாரிகளுக்குத் தரகனாக இருந்து பிற்பாடு மொழிபெயர்ப்பாளனாக மாறி அடிமைகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கோட்டைகளுக்கும் முகாம்களுக்கும் பயணிப்பவனாக இருந்தவன்.

ஆமூவும் அவனது மகளும் கடைசியில் வர அவர்கள் அன்று காலைப்பொழுது முழுக்க நடந்தனர். அயோம் சோர்வடையும் போதெல்லாம் தகப்பனின் முதுகில் தொற்றிக் கொண்டாள். வழியெல்லாம் தான் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருப்பது ஆமுவிற்கு நன்றாகத் தெரியும். அவனுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த மனிதர்கள் நுட்பமான எந்த உணர்வுகளுமற்ற முரடர்களாக இருந்தனர், தங்களது நீண்ட ஓற்றைக்குழல் துப்பாக்கிகளை தரையில் தேய்த்தபடியே நடந்து போய்க்கொண்டிருந்தனர். புல்வெளிகளை விட்டு நீங்கிய அவர்கள் விரைவில் வல்லூறுக் கூட்டம் அமர்ந்திருந்த உயரமான மரங்களினூடே வந்தனர். ஒருவரும் பேசிக்கொள்ளவில்லை. அவ்வப்போது தூரத்திலிருந்து ஒலிக்கும் பறவைகளின் சத்தத்தையும் அதன் எதிரொலியையும் தவிர அங்கே வேறெந்த ஒசையையும் கேட்க முடியவில்லை. அவர்களுக்கு அந்நியமான மழைக்காடுகளை வந்தடைந்திருந்தனர், இங்கே நின்ற மொமுது எல்லோரையும் ஓய்வெடுக்க பணித்தான்.

“ களைப்பாக இருக்கிறதா சகோதரா, உனது மகளுக்கு எப்படி இருக்கிறது” மொமுதுவின் ஆள் ஒருவன் ஆமூவிடம் கேட்டான்.

அயோம் தனது கறுத்த, நீண்ட அழகான இமைமயிர் கொண்ட கண்களைத் திறந்து அந்த மனிதனை ஏறிட்டுப் பார்த்தாள், பிறகு தனது தகப்பனையும் பார்த்தாள்.

“ஆமாம், அவள் கொஞ்சம் சோர்ந்துதான் போய்விட்டாள்“ ஓய்வெடுப்பதற்கான இடத்தை நோட்டமிட்டபடியே ஆமூ பதில் சொன்னான். பருத்த தடியொன்று வீழ்ந்து கிடந்த மரத்தடிக்கு அயோமை கூட்டிச் சென்றான். அந்த மனிதன் அந்த மரத்திலிருந்து சற்று தொலைவில் அமர்ந்து இவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தான்.

எல்லோருக்கும் வழங்கப்பட்ட உருளைக் கிழங்குகள் மொமுதுவிடமும் இருந்தன, அந்த குறைவான உணவைச் சாப்பிட்டு முடித்தவுடன் அவன் ஆமூவைப் பார்க்க வந்தான்.

“உனது மகள் எப்படியிருக்கிறாள்”

“அவள் உறங்கிவிட்டாள்” ஆமூ அங்கே கிடைத்த கட்டையொன்றில் தனது மகளுக்கு மரப்பாச்சி ஒன்றை செதுக்கிக் கொண்டிருந்தான்.

“அவள் வலுவுள்ள பெண்தான்” மொமுது பேசிக்கொண்டே தனது பெரிய வட்டத்தொப்பியை கழற்றிவிட்டு அவனுக்கு அருகிலேயே தரையில் உட்கார்ந்தான். அவனது பெரிய கருத்த பூட்ஸுகளில் சேறு அப்பியிருந்தது. “எல்லோரும் இங்கேயே ஓய்வெடுத்து காத்திருப்போம். அவர்கள் வரும் வழி இதுதான்”

ஆமூ தனது கண்காணிப்பில் முழுக்கவனத்துடன் இருந்தான், குனிந்து நிமிர்ந்து செதுக்கிக் கொண்டிருக்கும் வேளையிலும் அவனது கண்கள் அயோமின் மீதும் இருந்தன. மரப்பாச்சி மெல்ல மெல்ல உருவம் பெற்றுக் கொண்டிருந்தது.

“அந்த வேலை முடிந்த பிறகு நீ விரும்பியபடி போகலாம். உண்மையில் நீ ஊருக்குத் திரும்பிச் செல்ல விரும்புகிறாயா?”

“ஆமாம்”

“ஆனால் அங்கே உனக்கு யாரும் இல்லைதானே” ஆமூவின் பதிலுக்குக் காத்திராமல் மொமுது மேலும் தொடர்ந்தான் “நானும் காட்டின் எல்லையிலிருந்த ஓர் ஊரில்தான் இருந்தேன். எனது தாயும் தந்தையும் அங்கே வசித்தார்கள், நிறைய உறவுகள் – அந்த மொத்த குலமுமே! எங்களுக்கு சாப்பிட இறைச்சி கிடைத்தது சில நேரங்களில் மீனும். ஆனால் காலப்போக்கில் அந்த கிராமம் மெதுவாக மறைந்து போய்விட்டது. நடந்தவற்றை நினைத்து புலம்புவதற்கு மட்டும் ஒரு முடிவேயில்லை. நான் பிறந்ததிலிருந்து அழுகுரல்களைத் தவிர வேறெதையும் கேட்டதில்லை, காடுகளுக்கும் புதர்களுக்கும் ஓட்டமெடுப்பதையே கண்டிருக்கிறேன். காட்டுக்குள் போனால் நோய்வாய்ப்பட்டு இறப்பாய், வெட்டவெளியில் வாழ நினைத்தால் பிடிபட்டு அடிமையாக்கப்படுவாய். நான் என்ன செய்திருக்க முடியும்? ஆக நான் எனது வழியைத் தேர்ந்து கொண்டேன். வேட்டையாடப்படுவதை விடவும் வேட்டைக்காரனாய் இருப்பதை”

அங்கே இதுதான் விதியென்பது ஆமூவுக்கும் தெரியும். நீங்கள் ஒருபோதும் பாதுகாப்பாய் இருக்கமுடியாது, நாளைய விடியலைப் பார்ப்பது ஒருபோதும் உத்தரவாதமில்லை. ஆனால் அவனுக்குப் புரியாததெல்லாம் இதுதான், இந்த ஆண்களையும் பெண்களையும் என்ன பயன்பாட்டிற்காகப் பிடித்துச் செல்கிறார்கள். வெள்ளையர்கள் இவர்களின் தோலை உரித்து பூட்ஸு செய்கிறார்கள் என்றுகூட அங்கே பேசப்பட்டது.

அவர்கள் இருவரும் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள் அல்லது மொமுது மட்டும் நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்தான். அவன் தனது கொள்ளைகளையும் குடியையும் குறித்து பீற்றிக் கொண்டிருந்தான். கேட்டுக் கொண்டேயிருந்த ஆமூவிற்கு மமுதுவின் இயல்பு குறித்து மிகுந்த குழப்பமாகிப் போனது. அவன், வன்முறையையும் அச்சுறுத்தலையும் மட்டுமே கைக்கொண்டு அதிகாரத்தை பெறத்துடிக்கிற, எந்த விதிமுறைகளுக்கும் கட்டுப்படாத படைத்தலைவன். அந்த இடைவிடாத பேச்சு ஆமூவிற்கு அயர்ச்சியைத் தந்தது போல் தோன்றியது, அந்நேரம் மொமுதுவின் ஆள் ஒருவன் வந்து சேர்ந்தான். வெள்ளையர்கள் அந்த இடத்தை நெருங்கி வந்து கொண்டிருக்கும் சேதியை தெரிவித்தான்.

“அனைவரையும் கொன்றுவிட்டு அடிமைகளை மட்டும் கைப்பற்றுங்கள்” மொமுது தனது ஆட்களுக்கு ஆணையிட்டான். அத்தருணத்தில் காடு அசைவற்றுக் கிடந்தது, லேசாக அடித்த காற்றின் உரசலைத் தவிர எங்கும் அமைதி நிரம்பியிருந்தது.

கறுப்பு அடிமைகளின் நீண்ட வரிசை தூரத்தில் தெரிந்தது, கைத்துப்பாக்கிகள் வைத்திருந்த நான்கு வெள்ளையர்கள் முன்னே வந்துகொண்டிருந்தனர், அவர்களிடம் கைகளால் தூக்கிச் செல்லக்கூடிய சிறியரக பீரங்கியும் இருந்தது. ஆண்களும் பெண்களுமாயிருந்த அந்த அடிமைகள், மரத்தாலான தாழிடப்பட்ட கழுத்துப்பட்டை கொண்டு ஒருவரோடு வரிசையாக பிணைக்கப்பட்டிருந்தனர். மேலும் மூன்று வெள்ளையர்கள் பின்னால் வந்து கொண்டிருந்தனர். இறுதியாக நான்காவது ஒருவனை, அவன் உடல்நலமில்லாதவனாக இருக்கமுடியும், நீண்ட கம்பில் கட்டப்பட்ட தூளியில் உள்ளூர்காரர்கள் சுமந்து வந்துகொண்டிருந்தனர்.

மரங்களின் மேலிருந்து திடீரென வெடித்த துப்பாக்கிகளின் சத்தம் நெடுந்தூரம் சென்று எதிரொலித்தது. அதைத் தொடர்ந்து அங்கே பெரும் கூசசலும் குழப்பமும் கிளம்பியது. ஆமூ இந்நிலைமையை பயன்படுத்திக் கொண்டு தன்னை கண்காணித்து கொண்டிருந்தவனை சட்டென அடித்து கீழெ விழச்செய்தான். மகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு காட்டினுள் ஓடத்தொடங்கினான்.

அவர்கள் ஓடைகளையும் ஆறுகளையும் கடந்து அடர்ந்த காட்டினுள் போய்க் கொண்டிருந்தனர், ஆனால் எப்போதும் அவர்கள் போகும் திசை தென்கிழக்காகவே இருந்தது. மனிதர்களின் கண்ணில் படாமலேயே பயணித்தனர், பெரும்பாலும் பகலில் மறைந்திருந்து இரவுகளிலேயே நடந்தனர்.

மூன்று வாரங்களாக நடந்து தமது கிராமத்திற்கு வந்துசேர்ந்தனர், முப்பது குச்சில்களைக் கொண்ட அந்த ஊரை ஒருபுறம் பெரிய நீரூற்றும் மறுபுறம் புதர்க்காடுகளும் சூழ்ந்திருந்தன. அவர்கள் வந்து சேர்ந்த நேரம் ஊரில் ஆள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது, உண்மையில் அங்கே திடகாத்திரமான இளவட்டங்கள் காணாமல் போயிருந்தனர். ஆமூ மகளுடன் தனது மாமியாரின் குச்சில் வாசலில் கால்வைத்ததுதான்… அந்த கிழவி தடுமாறி எழுந்து நின்று வெடித்து அழுதாள், அந்த பலவீனமான் அழுகுரல் அங்கே ஆவியற்றுப் போய் கிடக்கும் கொஞ்சம்பேரையும் அழைப்பதற்கு போதுமானதாக இருந்தது. திடுக்கிட்டுப் போய் வந்து நின்ற அவர்கள் ஆமூவையும் அயோமையும் பார்த்தவுடன் மகிழ்ச்சியுடனும் திகைப்புடனும் முனுமுனுத்தார்கள். இருவரையும் மக்கள் அனைவரும் சூழ்ந்திருக்க அந்த இடம் கண்ணீரிலும் விசாரிப்புகளிலும் நிறைந்து கிடந்தது. அந்தக் கிழவி பேத்தியை ஒரு பொக்கிசத்தைப் போல பொத்தி அணைத்துக்கொண்டு குச்சிலுக்குள் போனாள், அயோம் அவளின் விசாரிப்புகளுக்கு கண்ணீர் வழிய பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்.
ஊரில் இருந்த முதியவர்கள் ஆமூவின் பாடுகளையும் சாகசங்களையும் கேட்டறிய அவனை அழைத்திருந்தனர்

அங்கிருந்த பெரியவர் ஒருவர் “எனது தகப்பனின் காலத்திற்கு முன்பிருந்து எனது காலம் முழுமையும் வெள்ளையரிடம் பிடிபட்டு விற்கப்படும் அச்சத்திலேயே வாழ்வு கழிகிறதே, காட்டுமிராண்டி வெள்ளையர்கள்”

“இதற்கு ஒரு முடிவே இல்லையா? என் பிள்ளைகள் எல்லோரையும் அவர்கள் தூக்கிப் போனதைப் பார்த்தேன், எத்தனை இடம் மாறி மாறி குடியிருந்தோம் என்பதே நினைவில் இல்லை. இதற்கு மேலேயும் நடுக் காட்டுக்குள் போக முடியாது. நோய்களையும் காட்டு விலங்குகளையும் எதிர்கொண்டு வாழமுடியாது” இது வேறொருவர்.

“அய்யா, இந்த வேட்டைக்காரர்களை சமாளிப்பதற்கு அந்த மிருகங்களைச் சமாளிக்கலாம்”

“இந்த இடத்திற்கு வந்துசேர்ந்த பிறகு ஐந்தாறு காலமழையைப் பார்த்துவிட்டோம், கொஞ்சம் பாதுகாப்பாய் தெரிகிறது. இருந்தாலும் இப்படியே இருக்குமென்று சொல்லமுடியாது. இங்கிருந்து மூன்றரை நாள் தொலைவிற்கு ஒரு அடிமை முகாம் நெருக்கி வந்துவிட்டது”

ஒருவரும் பேசவில்லை, சுருக்கங்கள் விழுந்து வாடி வதங்கிப் போன அவர்களின் முகங்களில் வாழ்வின் மொத்த துயரங்களும் தெரிந்தன. மீண்டும் எடுபட்டு போவதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டன. சிலர் சம்மதித்தனர், ஏனையோர் நடுக்காட்டில் வாழ்வதில் இருக்கும் சிக்கல்கள் குறித்தும், தாட்டியமான இளவட்டங்கள் இல்லாதது பற்றியும், கிராமத்தின் சவக்குழிகளை எப்படி கேட்பாரற்று விட்டுவிட்டுப் போவது என்றெல்லாம் கவலை கொண்டனர். குளிர்காலம் முடியும் வரை இங்கேயே இருப்பதும் அதே நேரத்தில் குடியேறுவதற்கு வாய்ப்பான இடங்களைத் தேடி ஒரு குழுவை அனுப்புவதுமான முடிவை ஊர்த்தலைவன் முன்வைத்தான். தோதான இடங்களை முன்கூட்டியே தெரிவு செய்யாமல் ஊரைவிட்டுப் போவது மடத்தனம். மேலும் அவர்களுக்கு வழமையான சடங்குகளையும் பலியிடுதலையும் நிறைவேற்ற வேண்டிய கடமைகளும் இருந்தன. ஒருவழியாக தலைவரின் யோசனைக்கு அனைவரும் உடன்பட்டனர். இந்த குறுகிய காலத்தில் வெள்ளாமையை அதிகரிப்பது, ஆடு மாடுகளைப் பொதுவில் வைத்து அடைத்துப் பாதுகாப்பது என முடிவு செய்யப்படது. மற்றவர்கள் வேலையாக இருக்கும் நேரத்தில் ஊரைக் கண்காணிக்கும் வேலை அங்கிருந்த கிழவிகளுக்கு ஒதுக்கப்பட்டது.

ஆமூவும் அயோமும் திரும்பி வந்தது அவர்களின் வாழ்வில் கொஞ்சம் உற்சாகத்தைச் சேர்த்திருந்தது. எல்லோரும் கூட்டாக வேலை செய்து சுற்றுப்புறங்களைத் திருத்தி வேலி அடித்தனர். ஆண்கள் அனைவரும் ஒன்றாக வேலைகளுக்குச் சென்று திரும்பினர். பெண்களும் பரபரப்பாக இருந்தனர், சிலர் சமையல் வேலை செய்து கொண்டிருக்கையில் மற்றவர்கள் ஆள் பிடிப்பவர் எவரேனும் தென்படுகிறார்களா என்று நோட்டம் விட்டுக் கொண்டிருந்தனர். (அங்கே அலைந்து திரிந்து கொண்டிருந்த ஆள் பிடிப்பவர்கள் அனைவரும் உள்ளூர் பழங்குடிகளே, தாங்கள் வேலை செய்யும் வெள்ளை தேசத்தினரின் சீருடைகளை அணிந்திருப்பர், பொதுவில் அடிமை வேட்டைக்காரர்கள் என்றே அழைக்கப்பட்டனர்) கடல் இருக்கும் திசை நோக்கி அச்சமின்றி பார்ப்பவர் எவரும் அங்கில்லை.

மழை வந்தது, செழிப்பான அந்த பூமி விதைப்புகளை மேலெழச் செய்தது. அவர்கள் வேலையாக அலைந்து திரிந்த அளவில் அச்சம் கொள்ளக்கூடிய எந்த அறிகுறிகளும் தென்படவில்லை என்றாலும், தாக்குதல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதை அறிந்து அதற்கான முன் தயாரிப்புகளுடனேயே இருந்தனர்.

ஆமூ மகளுடன் ஒரு தனிக் குச்சிலில் தங்கியிருந்தான், உறங்கும் வேளைகளிலும் கைக்கெட்டும் தூரத்தில் ஆயுதங்களை வைத்துக்கொண்டான். மெல்லிய காற்றின் தீண்டலுக்குக் கூட பதறிவிடும் நிலையில் இருந்தாள் அயோம். எல்லோரும் ஏற்றுக் கொண்டதன்படி அவள் முழுநேரமும் ஓய்வில் இருந்தாள், ஆமூ தனது வேலைகளில் முழுக் கவனமாய் இருந்தான். அவள் மெல்ல தனது துயரமான நினைவுகளிலிருந்து மீண்டு கொண்டிருந்தாள். கறுத்த கண்ணங்கள் கொஞ்சம் பூசிவிட்டாற்போல் மினுங்கின, கழுத்து மடிப்புகள் லேசாய் தெரியத்தொடங்கின மேலும் தட்டையான சிறிய தனங்கள் மேலெழத் தொடங்கியிருந்தன.

நாட்களும் வாரங்களும் அமைதியாகக் கழிந்தன. அவர்கள் தம் கடுமையான உழைப்பில் கரடாய் கிடந்தவற்றைத் திருத்தி பயிர் செய்திருந்த அந்த ஒடுங்கலான துண்டு நிலங்கள் ஓரிரு மேனி கூடுதலாய் இருக்குமளவு விளைந்து நின்றன. விளைந்து விட்ட கப்பைக் கிழங்குகளின் மேல்வரிசை செடியின் தூரினின்று வெளியே தெரிந்தது. செம்பனை எண்ணெயும், வெண்ணெயும், மொச்சையும், தேனும் அவர்கள் சேகரிக்கத் தொடங்கினர். அவர்கள் குடியேறும் புதிய இடத்தில் இவையெல்லாம் உடனடியாகத் தேவைப்படும். புதிய குடியிருப்புக்கான இடம் தேடிப் போனவர்கள் வந்து சேர்ந்தனர், மலையடிவாரத்தில் ஆனால் புல்வெளிகளுக்கு சற்று மேடான, ஒரு நீரோடையிலிருந்து அதிக தொலைவிலில்லாத ஒரு வாக்கான இடத்தை அவர்கள் கண்டு வந்திருந்தனர். செழிப்பான மண், மேய்ச்சலுக்கு நல்ல் பச்சையுள்ள மேலும் ஆள் பிடிப்பவர்களிடமிருந்து பிள்ளைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கு தோதான இடம்.

அந்த இடத்தை கண்டு கொண்டதில் எல்லோரும் மகிழ்ச்சியாய் இருந்தனர். ஊர்த்தலைவன் கிளம்புவதற்கு நாட்குறித்தான். பாதுகாப்பான இடத்தை கண்டடைந்துவிட்ட உணர்வு நாளது வரை இருந்த எச்சரிக்கை ஏற்பாடுகளை கொஞ்சம் தளர்த்தியிருந்தது. இரவு நேரங்களில் எந்த தேவைக்காகவும் நெருப்பு பற்றவைக்க இருந்த தடை நீங்கி இரவு நேரங்களில் ஊரில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன, சிரிப்பொலிகள் கேட்டுக் கொண்டிருந்தன, பெற்றோரின் கண்பார்வைக்கு எட்டாத தூரங்களில் பிள்ளைகள் விளையாடப் போனார்கள், பெரியவர்கள் வரப்போகும் பயணம் குறித்தே சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது நாட்களை எண்ணும் அளவிற்கு காலம் நெருங்கியிருந்தது. ஊர்ச்சாவடியில் எல்லோரும் கூடி கிளம்புவதற்கான ஒப்புதல் குறி எதுவாக இருக்கும் என்று ஆலோசித்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் வீட்டுச் சாமியிடமும், குலக்குறிகளின் முன்னும், குடும்பங்களின் புதைமேடுகளிலும் வேண்டி நின்றனர்.

நல்ல நாளாக இல்லாவிட்டாலும், எல்லா நாளும் போல ஒரு நாள் அது. கதிரவன் தகித்துக் கொண்டிருந்தான், புதிதாய் தளிர்த்திருந்த பசும் இலைகள் காற்றில் சல சலத்துக் கொண்டிருந்தன, மேகத் திரள்கள் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தன, தேன் சிட்டுக்கள் ஆரவாரமாய் உணவு தேடி பறந்து கொண்டிருந்தன, குரங்குகள் கிளைக்குக் கிளை தாவி விளையாடிக் கொண்டிருந்தன. ஊரார் எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்த இனிமையான அந்தநாள் எந்தவொரு பயணியையும் சில நேரமோ, சில நட்களோ போகவிடாதபடி அங்கேயே இருக்கச் செய்துவிடுமளவிற்கு இருந்தது.

அந்த நாளிலேயே அதுவும் நடந்து விட்டது! அன்று திடீரென அங்கே ஆள் பிடிப்பவர்கள் தோன்றினர். அச்சமடைந்த விலங்குகள் நடுக்காட்டிற்குள் ஓடி மறைந்தன. துப்பாக்கிகளின் சத்தம் கேட்டு நடுங்கி ஓலமிட்ட ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் சிதறி ஓடினர். அவர்களுக்கென்று திறந்திருப்பதாக எப்போதும் நினைவில் இருக்கும் ஒரே இடமான காட்டை நோக்கி ஓட்டமெடுத்தாக வேண்டும்.

கோடரியை இறுகப் பற்றிக்கொண்ட ஆமூ, மகளையும், கிழவியையும் முன்னே தள்ளினான். முதிர்ந்துபோன அந்த கிழவியால் மெதுவாக அடியெடுத்து வைக்கவே முடிந்தது. குச்சில்களுக்கு இடையே வேகமாக ஓடி ஒருவழியாக ஊரின் எல்லைக்கு வந்து சேர்ந்தனர். இங்கே, ஆமூ மொமுதுவின் கையாள் ஒருவனை நேருக்கு நேர் எதிர்கொண்டான். ஆமூ முந்திக் கொண்டான், அவனை அடித்து வீழ்த்திவிட்டான். ஆனால் இப்போது மொத்த கூட்டமும் பின்னால் வந்து கொண்டிருந்தது.

ஆமூ காட்டின் நடுப்பகுதிக்கு வந்துவிட்டான். தரையில் அடர்ந்து வளர்ந்திருந்த செடிகளும் தாழ்வாகத் தொங்கிக் கொண்டிருந்த மரக்கிளைகளும் அவர்களை வேகமாக முன்னேற விடவில்லை. ஆமூ தனியனாக இருந்திருந்தால் இந்நேரம் தப்பிச் சென்றிருப்பான். ஆனால் மகளை அவனால் எப்படி விட்டுவிட முடியும். தனது மனைவியை நினைத்துக் கொண்டான். அடிமை வேட்டைக்காரர்களிடம் பிடிபடாமல் தவிர்ப்பதற்காக அவன் அவளைக் கொன்றிருந்தான். அங்கே அந்த கிழவி அவனது மனைவியை அவனுக்கு நினைவுறுத்துவதாக இருந்தாள். அந்த கிழவியை அங்கே விட்டுச் செல்வது அவன் மனைவியை விட்டுச் செல்வது போல்தான். கிழவி ஆங்காங்கே நின்று மூச்சுவாங்கிக் கொண்டிருந்தாள், அந்த யானைக் காலை இழுத்துக் கொண்டு நடப்பது எப்போதையும் விட கணமாகத் தோன்றியது. ஆமூ அவனால் முடிந்த வரை உதவினான். அவனோடு ஒட்டிக்கொண்டிருந்த அயோம் பேச முடியாமல் நின்றிருந்தாள்.

அவனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. நடப்பதை நிறுத்தி விட்டு, மகளின் தாடையை மெதுவாகத் தூக்கி சில நொடிகள் உற்று நோக்கினான். காலத்தால் அழியாத சித்திரமாக அவன் மனதில் அது நிலைக்கக் கூடும். அவன் விழிகளில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

கிழவியை நோக்கிச் சொன்னான் “எத்தே! இதற்கு மேல் நம்மால் போக முடியாது. நம் மூன்று பேருக்குமான சாவு இந்த வழியின் முன்னே இருக்கிறது, மகளுக்கும் எனக்குமான அடிமைத்தளை பின்னே வருகிறது”

“ஏயா… இதற்கு மேல் என்னால் ஒரு எட்டு கூட வைக்க முடியாது” பேத்தியை கைகளில் பிடித்தபடி, கவலை தோய்ந்த முகத்தோடு கிழவி ஆமூவை ஏறிட்டுப் பார்த்தாள்.

“எத்தே.. அயோமால் தப்பிவிட முடியும், உங்கள் இருவராலும் அது முடியும். இதற்கு மேல் உங்களது தோல் அவர்களுக்கு உதவாது, இதைக் கொண்டு வெள்ளையர்களால் பூட்ஸுகள் செய்துகொள்ள முடியாது”

“ஆனால் அயோம் தனித்து விடப்பட்டால் அவள் இறப்பது உறுதி, மேலும் நீங்கள் என்னதான் செய்யப் போகிறீர்கள்”

“ நீங்கள் போய் விடுங்கள், எனக்கு நடப்பது நடக்கட்டும்”

“நீங்கள் எங்களைக் கொல்லப் போவதில்லையா? கிழவி கேட்டாள்.

“இல்லை, அத்தே… ஆனால் அயோம் தப்புவதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை நான் அறிவேன். அதை நான் உடனடியாகச் செய்தாக வேண்டும். அவர்கள் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் சத்தத்தை என்னால் கேட்க முடிகிறது”

அவனது தலையில் இடி இறங்கியது போலிருந்தது, நிற்கின்ற தரை அவனது கால்களிலிருந்து நழுவிச் செல்வது போல் தோன்றியது. உடலை விரைப்பாக்கிக் கொண்டு கத்தியை இறுகப் பிடித்தபடி அருகிலிருந்த புதருக்குள் போனான் (வோலாவ்களின் மொழியில் அந்த செடியின் பெயர் ‘ பாந்தமார்’ , வெட்டுக் காயங்கள் சீழ் பிடித்துப் போவதைத் தடுத்து குணமாக்கும் தன்மை கொண்டது) கை நிறைய அந்த இலைகளை ஆய்ந்து கொண்டு அவர்கள் இருவரிடமும் ஆமூ வந்தான். இருவரும் அவனை திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

கண்ணீர் நிறைந்து மங்கிய பார்வையோடு மகளைப் பார்த்தான் “ நீ பயப்படக்கூடாது மகளே!”

“தாயைக் கொன்றது போல அவளையும் கொல்லப் போகவில்லைதானே! “ கிழவி கதறினாள்.

“இல்லை, மகளே இது மிகுந்த வேதனையைத் தரும், ஆனால் நீ ஒருக்காலும் அடிமையாக்கபட மாட்டாய். நான் சொல்வது உனக்குப் புரிகிறதா?”

அவன் கையில் இருந்த கத்தியின் கதுமையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்ததுதான் அயோமின் பதிலாக இருந்தது. அடிமைக் கப்பலையும் இரத்தம் தோய்ந்த கோடரியையும் அவள் நினைத்துக் கொண்டாள்.

சடுதியில் அவளைத் தன் கால்களுக்கு இடையில் இறுகப் பிடித்துக் கொண்ட ஆமூ அவளது உடலெங்கும் கத்தியால் கீறத் தொடங்கினான். அவளது அழுகுரல் அந்த காடு முழுவதும் ஒலித்தது. தன் ஆவியடங்கும் வரையில் கத்தி ஓய்ந்தாள். அடிமை வேட்டைக்காரர்கள் அவனைப் பிடிப்பதற்குள் இதை முடிப்பதற்கு அவனுக்கு குறைந்த நேரமே இருந்தது. அந்த இலைகளை அவள் உடல் முழுவதும் வைத்து துணியால் சுற்றினான். ஏற்கனவே பிடிபட்டிருந்த அவனது மக்களோடு சேர்த்து ஆமூவும் கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டான். அயோம் கிழவியோடு ஊர் திரும்பினாள். கிழவியின் வைத்திய அறிவினால் அவள் விரைவில் குணமடைந்தாள், ஆனாலும் அந்த தழும்புகள் மறையவேயில்லை.

சில மாதங்கள் கழித்து அடிமை வேட்டைக்காரர்கள் மீண்டும் ஊருக்கு வந்தனர். அப்போது பிடிபட்ட அயோமை பிறகு அவர்கள் விட்டுச் சென்றனர். உடல் முழுவதும் தழும்புகள் கொண்ட அவள் எதற்கும் மதிப்பு பெறாதவள்.

இந்த செய்தி பக்கத்து ஊர்களுக்கெல்லாம் பரவியது. தொலைதுரப் பகுதிகளிலிருந்தெல்லாம் அந்த கிழவியிடம் யோசனை கேட்க மக்கள் வந்தனர். ஆண்டுகள் செல்ல செல்ல பலதரப்பட்ட காயங்கள் நமது முன்னோர்களின் உடலில் தோன்றத் தொடங்கின.

இதுதான் அவர்கள் தொல்குடித் தழும்புகளைப் பெற்ற கதை. அவர்கள் அடிமை வாழ்வை ஏற்க மறுத்த கதை.

 

*********

செம்பேன் உஸ்மானின் கதைகளைத் தொகுத்து  “தொல்குடித் தழும்புகள்”  என்ற தலைப்பில் கலப்பை பதிப்பகம் நூலாக வெளியிட்டுள்ளது.

பிரதிகள் வேண்டுவோர் :
கலப்பை, 9/10 முதல் தளம், 2 ஆம்தெரு, திருநகர், வட பழனி, சென்னை 600 026 என்ற முகவரியில் தொடர்பு கொள்க.
தொலைபேசி எண்கள் 9444838389, 7598426389.

unnatham

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top