TAMILI

தமிழி

The Curious Case Of Benjamin Zec – Elvis Hadzic

 

The Curious Case Of Benjamin Zec
– Elvis Hadzic
Tamil translation : Karthikai Pandian

பெஞ்சமின் ஸெக்கின் கதை
– எல்விஸ் ஹாஜிக்
தமிழில் – கார்த்திகைப் பாண்டியன்

 

முன்பொரு காலத்தில், வெகுகாலம் முன்பல்ல, மலைகள் சூழ்ந்ததாகவும் விவசாயிகளின் நிலமாகவுமிருந்த பால்கன் பிரதேசத்தில் ஒரு சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுடைய பெயர் பெஞ்சமின் ஸெக் எனவும் அவனொரு சாதாரணமான சிறுவன்தான் என்றும் சிலர் சொல்வார்கள்.

கஷ்கொட்டை மரங்களின் கிளைகளினூடாக டார்ஸானைப் போல ஊஞ்சலாடித் திரிவான் பெஞ்சமின். அந்தச் சின்னஞ்சிறு நகரத்தில் அவன் ஏறியிறங்காத மரமென்று எதுவுமில்லை. அவனது வீதிக்குள் அவன்தான் மிகச்சிறந்த கோலி விளையாட்டுக்காரன் என்பதோடு பள்ளியின் தொலைதூர ஓட்டப்பந்தயங்களிலும் நேர்த்தியாக ஓடி இரண்டாவதாக வரக்கூடியவன். கால்பந்தாட்ட மைதானத்துக்குள் அதிக கோல்களை அடிப்பவன் என்பதால் வகுப்பின் மற்ற மாணவர்கள் அவனைப் பெரிதும் மதித்தார்கள், ஆனால் பெண்கள் எப்போதும் அவன் மீது ஒரு கண் வைத்திருப்பார்கள், சின்னதொரு இளிப்போடு, ஏனெனில் பிருஷ்டங்களைக் கிள்ளவோ அல்லது கொட்டாவி விடும் சாக்கில் கைகளை நீட்டி இன்னும் மலர்ந்திராத மார்புகளைத் திடீரெனப் பற்றவோ பெஞ்சமின் ஒருபோதும் தயங்கியதில்லை. அனேகமாக அவனுடைய பெரிய பச்சைநிறக் கண்களின் கீழே அடிக்கடி தென்படும் கீர்த்திமிகு காயங்களுக்கும் அதுவே காரணமாக இருக்கக்கூடும்.

பெஞ்சமின் என்கிற அந்தக் குட்டிச்சாத்தான், பள்ளி இடைவேளை முடிந்து திரும்புகையில், தன்னுடைய டி-ஷர்ட் நிறைய செர்ரிப்பழங்களை மார்போடு அணைத்து எடுத்து வருவான். பிறகு வகுப்பு வேளைகளில் அவற்றைச் சாப்பிட்டு விதைகளை முன்னணியில் அமர்ந்திருக்கும் ஆசிரியரின் செல்லப்பிள்ளைகள் மீது வீசியெறிவான். பள்ளிக்குப் போக ஒருபோதும் அவன் விரும்பியதில்லை, அல்லது அங்கே அவர்கள் சொல்லிக் கொடுத்த எதையும். எந்தவொரு அறிவியல் பாடத்தைக் காட்டிலும், வனத்தின் வாசத்தையும் மண் மீது பூத்துக்குலுங்கும் இளமஞ்சற்பூக்களின் அரும்புகளையும் பெஞ்சமின் அதிகமாக நேசித்தான். ஒருமுறை, மிகத்தீவிரமான மூர்க்கமும் துணிச்சலும் கொண்ட கருதுகோளால் தனது இயற்பியல் ஆசிரியரை வம்புக்கிழுத்தான், அது என்னவென்றால், மிகவும் புகழ்பெற்ற அந்த மரத்தினடியில் நியூட்டன் மலம்தான் கழித்துக் கொண்டிருந்தார், மேலும் அவருடைய தலையில் ஆப்பிள் எதுவும் விழவில்லை, ஆனால் அவர், அதாவது நியூட்டன், உண்மையில் தன்னுடைய மலம் புவியீர்ப்பு விசைக்குக் கட்டுப்பட்டு கீழே விழுவதைக் கண்டபிறகே தெளிந்தார்! மேலும் ஆப்பிள் மரங்கள் பற்றிய கட்டுக்கதைகளெல்லாம் எல்லா வகையிலும் இட்டுக்கட்டிச் சொல்லப்படும் கதைகளென்றே பெஞ்சமின் சொல்வான்: ஆப்பிள்கள் ஒருபோதும் மரங்களிலிருந்து சட்டென அதுபோல விழுந்து விடுவதில்லை. அத்தோடில்லாமல், அவன் தொடர்ந்து சொல்வான், ஒரு மனிதன் இயற்கையின் உபாதைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் தருணங்களில்தான் ஆகச்சிறந்த யோசனைகள் பிறக்கும்! மொத்த வகுப்பினரும் சிரித்தார்கள், எதிர்பார்த்ததைப் போல, இயற்பியலில் பெஞ்சமினுக்கு மிகக்குறைவான மதிப்பெண்களே கிடைத்தன.

பெஞ்சமின் ஸெக்கிற்கு அறிவியலின் மீது விருப்பமிருக்கவில்லை, ஆனால் புத்தகங்கள் வாசிப்பதை மிகவும் நேசித்தான். அவனுக்கு மிகப்பிடித்தமான புத்தகமாக “தி லிடரரி ரீடர்” இருந்ததெனில் செர்பிய-குரோஷிய மொழியைச் சொல்லித்தரும் வகுப்பே அவன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் வகுப்பாயிருந்தது. வகுப்பறைகள் வெறும் மூச்சுமுட்டச்செய்யும் சுவர்களாகவும் துயிலூட்டுகிற ஆசிரியரின் குரலை எதிரொலிப்பதாகவும் இருந்தன – ஆனால் தேவதாருக்களும் ஊசியிலை மரங்களும் அடர்த்தியான நிழல்களாகச் சூழ்ந்திருந்த கிராமப்புறத்தில், தான் வாசித்த ஒவ்வொரு சாகசத்தின் அதிநாயகனாகத் தன்னை உருவகித்துக் கொள்ளும் சுதந்திரம் அவனுக்கிருந்தது.

ஆம், உண்மையாகவே, பெஞ்சமின் ஸெக் ஒரு சாதாரணமான சிறுவன்தான் என்று சிலர் சொல்லக்கூடும்.

மேலும் அப்படியே அவன் இருந்திருக்கவும் செய்யலாம், அதாவது, தானொரு பொறிவண்டாக மாற வேண்டுமென்றுத் தீர்மானிப்பதற்கு முன்னால்…

ஒருமுறை, செர்ரி மரத்தின் கிளையிலிருந்து அவன் கீழே வீழ்ந்தபோது, வெப்பத்தால் கன்றிப்போயிருந்த கன்னம் ஈரத்தரையில் படிந்திருக்க, அப்படியே கிடந்தான். அச்சமயத்தில், காற்றிலாடாமல் உறைந்திருந்த புல்லும் அதனூடாக மெல்ல நகர்ந்த பொறிவண்டும் அவனது கவனத்தை ஈர்த்தன. பொறிவண்டாக இருப்பது ஓர் அதியற்புத சங்கதி என்று நினைத்தான்: எதற்கும் அது அவசரப்படுவதில்லை. தனது சின்னஞ்சிறு எடையும் கூட ஒரு புல்லின் நுனியை வளைக்கப் போதுமானதாக இருப்பதையெண்ணி ஆச்சரியத்தோடு, புல்லின் மேற்பரப்பிலிருந்து மற்றொன்றிற்கு அது நிதானமாகத் தாவிச்செல்கிறது. விசித்திரம்தான் என்றெண்ணிக் கொண்டான், எந்தவொரு முன்யோசனையுமின்றி கணநேரத்தில் இந்தப் பொறிவண்டுகள் தங்களுக்கான தீர்மானங்களை வந்தடைவதாகத் தெரிகிறது, பிறகு சட்டென்று, உங்களுடைய நல்லதிர்ஷ்டத்தையும் தங்களோடு எடுத்துக்கொண்டு, கறுப்புப்புள்ளிகள் அடர்ந்த கவசத்தின் கீழிருக்கும் சிறகுகளை அகல விரித்து எங்கோ பறந்து செல்கின்றன.

அவனுடைய உள்ளங்கை வானத்தை நோக்கித் திரும்பியிருக்க அந்தப் பொறிவண்டு அவனது கைரேகைகளின் மீது தாவிக்குதித்து அமர்ந்தது.

தானொரு நடிகனாக வேண்டுமென்றே அவன் எப்போதும் ஆசைப்பட்டான், அதிரடித் திரைப்படங்களில் நடிப்பதற்காக அல்லது அந்தப் புகழ்பெற்ற அமெரிக்க பிராட்வேயில் முக்கியக் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க வேண்டுமென்பதற்காக.. அது என்னவாக இருந்தாலும்.. ஆனால் இப்போதோ ஒரு பொறிவண்டாக மாறுவதே போதும் என அவனுக்குத் தோன்றியது. இந்தப் பூச்சிகளில் ஒன்றாக மாற முடியுமெனில், இதோ இங்கிருக்கும் இந்த வண்டினைப் போல, அவனுடைய உள்ளங்கைக்குள் மிகுந்த உற்சாகத்துடன் அது ஊர்ந்து கொண்டிருந்தது – சிறகுகள் முளைத்து பின் மாயமாக மறைந்து போகலாம், ஆக.. அதுவொரு குறிப்பிடும்படியான சங்கதியாயிருக்கும்.. பொறிவண்டே, பொறிவண்டே, எனக்கொரு வழியைக் காட்டிடு, குழந்தைகள் பாடுகிற விழைவுப்பாடலை அவன் முணுமுணுத்தான்.

மிகச்சரியாக அதே தருணத்தில், அவனது தலையின் பின்புறத்தில் பலமாக ஏதோவொன்று வெடித்துப் பிளந்திட, ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும் காதுகளுக்குள் ரீங்கரித்து, பின் சில்லென்ற ஒரு அமைதி அவனுடைய முன்நெற்றியின் மீது வழிந்து பரவியது. அதன் பிறகு, பெஞ்சமின் ஸெக் மாயமாகிப் போனான். துடுக்கோடும் ஊடுருவித் துளைப்பதாகவுமிருந்த, ஏற்றத்தாழ்வுகள் ஏதுமின்றி ஒரே தொனியில் ஒலித்ததொரு பீப் ஒலி மட்டுமே அங்கு மிச்சமிருந்தது, வனத்தினுடைய மரங்களின் மீது மோதித் திரும்பியது. சில காலங்களுக்கு அருகிலிருந்த கிராமங்களினூடாக அந்த ஒலி அலைந்தோய்ந்து பிற்பாடு மெல்லத் தேய்ந்து போன எதிரொலியாகச் சுருங்கியது, பறவைகள் மட்டுமே அதனைக் கவனித்தன, கடைசியில் அதுவும் மொத்தமாகத் தொலைந்து இல்லாமல் ஆனது.
அந்தக் கடுமையான கோடைதினம்தான் சிறுவனைப் பற்றி மக்களில் யாரும் கேள்விப்பட்ட கடைசி தினம். அக்கம்பக்கத்திலிருந்த சில சிறார்கள் பெஞ்சமினுக்கு சிறகுகள் முளைத்து விட்டதாகக் குற்றஞ்சாட்டினார்கள், உண்மையாகத்தான், அவனொரு பொறிவண்டாக மாறிப் பறந்து சென்றதாகவும் சொன்னார்கள். என்றாலும், ஒரு சிலர் அவனுடைய மறுவருகைக்கான சாத்தியங்களின் மீது நம்பிக்கை கொண்டிருந்தார்கள், என்றேனும் ஒருநாள் திரும்பி வரலாமென்றும் கற்பனையிலும் நினைத்துப் பார்க்கவியலாததொரு அதியற்புதமான கால்பந்தாட்டப் போட்டியை நகரத்தில் அவன் ஒழுங்கு செய்வானென்றும் நம்பினார்கள். மேலும், இன்னும் சிலரோ, முற்றிலும் வேறொரு தீர்மானத்தைக் கொண்டிருந்தார்கள், யாராலும் நம்ப முடியாத வகையில் பெஞ்சமின் அந்தக் கடைவீதிக்குள் திரும்பி வந்தாலும் கூட மூன்றே நாட்களில் அனைவருக்கும் அவன் மீது சலிப்புத் தட்டிவிடும் என்றார்கள், அத்தோடு, யாருக்குத் தெரியும், ஒருவேளை அவன் ஏற்கனவே இங்கு வந்து நம்மிடையே நடமாடிக் கொண்டிருக்கலாம், மேலும் தான் எங்கே சென்றோமென்பதை ஆராய்கிற இந்த மொத்த நகரத்தையும் எள்ளி நகையாடவும் கூட செய்யலாம். பொருத்தமான விளக்கமேதும் இருப்பதாகத் தெரியவில்லை, அல்லது குறைந்தபட்சம், சாதாரண மனிதர்களுக்கும் புரியும்படியான எந்த விளக்கமும் இருக்கவில்லை. இருப்பினும், யார் கவலைப்படப் போகிறார்கள்? ஆக, மேய்க்கச் சிரமமான மற்றுமொரு சிறுவனும் மறைந்து விட்டான். பெஞ்சமினைப் போல யாரோவொருவர் சட்டென்று மறைவதும் காற்றோடு கலந்து போவதும் அதுதான் முதல் முறையென்றோ அல்லது கடைசி முறையென்றோ சொல்ல முடியாது.. இதெல்லாம் இயல்பாக நடக்கக்கூடியதுதான், இல்லையா? சொல்வதெனில், நம் சின்னஞ்சிறு கிரகத்தின் மேற்பரப்பில் சுற்றி வரும் சமயங்களில் பெஞ்சமின் எங்காவது வழிதவறிப் போயிருக்கலாம், தன்னைக் கண்காணித்தவர்களின் பார்வையிலிருந்து தப்பி விட்டதை உணர்ந்த தருணத்தில் வாய்ப்பைப் பயன்படுத்தி அவன் தலைதெறிக்க ஓடிப் போயிருக்கலாம். மக்களுக்குக் கவலைப்படுவதற்கென இதைக்காட்டிலும் பெரிய பிரச்சினைகள் இருந்தன. எனவே ரொம்ப நாளைக்கு பெஞ்சமின் ஸெக்கை எண்ணி யாரும் தங்களை வருத்திக் கொள்ளவில்லை. எப்படி நோக்கினும், திரைப்படங்கள் பார்ப்பதைத் தவிர அவனால் வேறு என்ன பிரயோஜனம்? எதற்குள்ளும் பொருந்திப் போகாதவன். அனைவரோடும் இயைந்து வாழத் தெரியாதவன். ஆகையால் இதுவொன்றும் பெரிய இழப்பல்ல.

பல வருடங்கள் கழிந்த பிறகு, பெஞ்சமின் ஸெக்கின் மர்மம் குறித்து யாரேனும் இன்னும் கவலைப்படுகிறார்களா என்ன? அனேகமாக அவனுடைய கூன்விழுந்த தாய் மட்டும்தான், அடர்த்தியான கஷ்கொட்டை மரங்களின் உச்சிக்கிளைகளை தொடர்ச்சியாகப் கண்காணித்துக் கொண்டிருந்தாள், தன்னுடைய வெற்றுக்கரங்களால் இளமஞ்சற்பூக்களை அகழ்ந்தபடியும்..

மறதியின் நீரோடைக்குள் காலம் சொட்டுச் சொட்டாக சிந்திக் கொண்டிருந்தது. டிக்-டாக், டிக்-டாக், டிக்.. ஒவ்வொரு துளியாக, ஜூலை மாத இறுதிகளின்போது பெஞ்சமினின் தாய் கால்வாய்களில் ஓடிய மழைநீரை அள்ளிக்குடிப்பதோடு சோகம் நிரம்பியவளாக செர்ரிப் பழங்களை மென்று விழுங்கவும் செய்தாள்..

பெஞ்சமின் ஸெக்கின் இந்த வினோதமான கதை காலவோட்டத்தில் ஒரு வாய்மொழிக்கதையாக மாறியது. ஒரு தேவதைக்கதை என்பதாக. கதைக்குப் பின்னாலிருந்த உண்மையான சிறுவனை அனேக மனிதர்கள் மறந்திருந்தாலும், அவ்வப்போது, அவனைப் பற்றிய கேள்விகளை எழுப்பும் சிலரும் இருக்கத்தான் செய்தார்கள். பெஞ்சமின் குறித்த தங்களுடைய ஞாபகங்களை மீட்டெடுப்பார்கள், அதிகபட்சம் போனால் ஓரிரு கணங்களுக்கு – பச்சை நிறக் கண்களைக் கொண்டிருந்த வெளுத்த சிறுவன், பெண்களைக் கிள்ளவும் மரங்களில் தாவியேறும் சமயங்களில் டார்ஸானைப் போல ஊளையிடவும் செய்கிறவன் – எனவே அவன் அந்த நகரத்தில் உலாவும் ஆவியென மாறிப்போனான், மெழுகுவர்த்திகளை மாற்றிடும் சமயங்களில் சொல்லப்படும் தொன்மமாக, பொறிவண்டுகளின் முதுகிலிருந்த கறுப்புப்புள்ளிகளில் பறந்து திரியும் கட்டுக்கதையாக, எந்தவொரு விசாரணையின் முனையும் தீண்ட முடியாத ஆழத்திலிருந்த பொதுரகசியமாக, மொத்தத்தில் மறந்து போன கடந்தகாலத்தின் மீயதார்த்தச் சிதறல்களாக மட்டுமே அவன் எஞ்சியிருந்தான். உண்மையில் அப்படியொருவன் இருந்தானென்பதற்கான சாட்சியமாக ஒரேயொரு புகைப்படம் மட்டுமிருந்தது: அவன், பெஞ்சமின் ஸெக், முழங்கால்களில் கிழிந்த காற்சட்டையும் கந்தலாகிப்போன மேற்சட்டையும் அணிந்து, ஒழுங்காக வாரப்படாத கேசத்தோடிருந்த தலையின் கீழிருந்த கண்களால் சூரியனை ஓரப்பார்வை பார்த்தபடி நின்றிருந்தான், கையில் கோலிகளோடு. அவன் அம்மா அந்த புகைப்படத்தை எப்போதும் தன் இதயத்துக்கு நெருக்கமாக வைத்திருந்தாள், பரந்த இவ்வுலகில் எங்கு செல்ல நேர்ந்தாலும் மார்க்கச்சையின் உள்ளிருந்து இந்த நினைவுச்சின்னத்தை அவ்வப்போது வெளியே எடுத்து பரட்டையாய் நின்றிருக்கும் பெஞ்சமின் ஸெக்கை மறதியின் முகத்தில் அறையும் வகையில் காட்டி விட்டுப் போவாள்.

நல்லதொரு விளைச்சலை வேண்டி அவனை வழிபட்ட மக்கள் நிலங்களை பஞ்சம் சூழ்கிற காலகட்டங்களில் தங்களை மன்னித்து அருளும்படி அவனிடம் மன்றாடினார்கள், ஏதோவொரு தொன்மையான தெய்வத்தை வழிபடுவதைப் போல. தங்களுடைய குழந்தைகளிடம் கதை சொல்லும் சமயங்களில் இப்படித்தான் தொடங்கினார்கள்: முன்பொரு காலத்தில், ஒரு சிறுவன் இருந்தான்…

பெஞ்சமின் ஸெக் அமெரிக்காவில் தென்பட்டதாகச் சிலர் சொன்னார்கள்; ஆகவே அவனொரு கட்டுக்கதையாக மாறவில்லை, மாறாக ஒரு மீனங்காடியில் தன்னோடு சேர்த்து முப்பத்து மூன்று மனிதர்களை வெடிக்கச் செய்த மதவெறி பிடித்த கிறுக்கனாக மாறிப்போனான் என்றார்கள். மேலும் சிலர் சொன்னார்கள், இல்லை, தன்னைதானே அவன் மாய்த்துக் கொள்ளவில்லை; தற்போது அவனொரு பைத்தியக்கார விடுதியில் இருக்கிறான், என்றாலும் அவன் கொன்றொழித்த மனிதர்களின் எண்ணிக்கையை அனைவரும் மகிழ்ச்சியோடு ஒத்துக்கொண்டார்கள். மேலும், இன்னொரு கருத்துருவாக்கமும் இருந்தது: தன்னுடைய தவறுகளுக்குப் பிராயச்சித்தமாக அமெரிக்கக் கடற்படையில் இணைந்து தற்சமயம் அவன் ஈராக்கில் கன்னிவெடிகளை அப்புறப்படுத்துபவனாகப் பணிபுரிந்து வருகிறான்.

இன்னொன்றும் கூட: பெஞ்சமின் ஒரு வஹாபியாக மாறிவிட்டதாகச் சிலர் சொன்னார்கள், தாடியை நீளமாக வளர்த்து தலைப்பாகை அணியப் பழகிக்கொண்டான் என்றும், அத்துடன், இருண்மையும் மர்மமும் பொருந்திய கண்களைக் கொண்டதொரு பெண்ணை அவன் திருமணம் செய்து கொண்டதாகவும்.

ஆனால் மொத்தக்கதையிலும் ஒரேயொரு துளி மட்டுமே உண்மையாக இருந்தது: இறுதியில் பெஞ்சமின் ஸெக் அமெரிக்காவைத்தான் வந்தடைந்திருந்தான். ஆனால், விவகாரங்களை இன்னும் சிக்கலாக்கும் வகையில், பெஞ்சமினும் கூட தான் எப்படி அங்கே வந்து சேர்ந்தோமென்பதையோ அல்லது எப்போது வந்தோமென்றோ அறிந்திருக்கவில்லை. எதுவும் ஞாபகத்தில் இல்லை. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் இதுதான்: ஒருநாள் திடீரென்று அவன் தோன்றினான், ஒரு மேடையில், ஒரு அரங்கத்தில், ஒரு ஷேக்ஸ்பியர் நாடகத்தின் நடுவில், பாதங்களின் கீழே ஒளிவட்டம் பாய்ந்தபடியிருக்க அவன் ஆச்சரியப்பட்டான்:

“இருப்பதா அல்லது இல்லாமல் போவதா?” (To be or not to be?)

மேலும் அவன் அங்கிருந்தான்..

அவன் மேடையின் மீது நின்றிருந்தான், பிராட்வேயில், பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று ஆரவாரித்தார்கள். மக்களின் அன்பை ஏற்றபடி அங்கேயே நின்றிருந்தால் முதுமையின் பொருட்டு தான் இறந்து போகக்கூடும் என்று அவன் நினைக்குமளவிற்கு, வெகு நேரம், தொடர்ச்சியான கரவொலிகளால் திரு.பெஞ்சமின் ஸெக்கை அவர்கள் பாராட்டினார்கள்.

“அற்புதம்! அதியற்புதம்!” பூக்களை அவன் மீது வீசியெறிந்து அவர்கள் ஒட்டுமொத்தமாக அலறினார்கள்.

எப்படி அங்கு வந்து சேர்ந்தோமென்பதை பெஞ்சமின் அறியமாட்டான் என்பது யாருக்கும் தெரியாது. அங்கு வருவதற்கு முன்னால் என்னவாக இருந்தோம் அல்லது என்ன செய்து கொண்டிருந்தோம் என்பது அவனுக்கும் கூட தெரிந்திருக்கவில்லை. ஆனால் அவன் அதற்குத் தயாராயிருந்தான், எப்போதும் போல, வெகு சீக்கிரமாகத் தன்னுடைய புதிய கதாபாத்திரத்துக்கேற்பத் தன்னைத் தகவமைத்துக் கொண்டான்.

ஆர்வங்கொண்ட மக்கள்திரள் அவன் பெயரை உச்சரித்தபடியிருக்க, பெஞ்சமின் உடைமாற்றும் அறைக்கு வழிநடத்திச் செல்லப்பட்டான். வழியில், மூன்று ரசிகர்களுக்குக் கையொப்பமிட்டுத் தந்ததோடு ஒரு திரைப்படத்தில் செர்பிய போர்க் குற்றவாளியாக நடிக்க வேண்டுமென்கிற அசாதாரணமான கோரிக்கைக்கு மறதியாகத் தலையசைக்கவும் செய்தான். தன் பெயரை அவர்கள் எப்படித் தெரிந்து கொண்டார்கள் என்று ஆச்சரியப்பட்டான். ஏதும் பேசாமல் பெஞ்சமின் வெறுமனே கூட்டத்தினூடாக நழுவிச் சென்றான். அங்கே, அந்த அலமாரியின் கண்ணாடியில், சுருக்கங்களடர்ந்த தன் முகத்தை வெறித்தான். தன்னைப் போர்த்தியிருந்த ஹாம்லெட்டைக் களைந்து பெஞ்சமின் ஸெக்கை மீண்டும் கண்டுபிடித்தான். தனக்குப் பழக்கமான ஆனாலும் தானறிந்திராத இந்த உருவத்துக்கு என்ன வயதிருக்கும் என்று அதிசயித்தான். பூரிப்போடு இருபத்து-ஐந்தைக் காட்டிலும் அதிகமாயிராது என்றெண்ணிக் கொண்டான். இருபத்து-ஐந்து!

ஆகா, தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் உடலால் பெஞ்சமின் ஸெக் மிகத் திருப்தியாக உணர்ந்தான். ஆண்மை ததும்பும் முகக்கூறுகள், வலுவான தாடை மற்றும் ஊடுருவிப் பார்க்கும் பச்சை நிறக் கண்களைக் கண்டு பெருமையோடு – அவன் யாராக இருந்தாலும், தன்னுடைய இந்தப் புதிய வாழ்க்கைக்கு நிச்சயம் அவன் தகுதியானவனே. அதில் எந்தச் சந்தேகமுமில்லை. வளர்ந்தவனாகவும் வாழ்க்கையில் வென்றவனாகவும் இருப்பதில் ஒரு சுகமிருந்தது. இந்த சாகத்தைத் தொடர்வதென அவன் முடிவு செய்தான், எப்படிப் பார்த்தாலும் தனக்கு நினைவில்லாத இறந்தகாலத்தை புறக்கணிப்பதாகவும், அவன் யாராக இருக்க நேர்ந்தாலும் அப்படியே இருப்பதென்று தீர்மானித்தான், ஏனென்றால் சூழ்நிலைகள் ஏற்கனவே அப்படியானதொரு இடத்தை வந்தடைந்திருந்தன…

காட்சிக்குப் பிறகு, வெகுகாலம் பழகியவனின் தோரணையோடு ஒரு லிமோ ஓட்டுனன் வந்து அழைத்திட அவன் தனக்கான அந்தரங்கப் பணியாளன் என்பதை பெஞ்சமின் புரிந்து கொண்டான். அந்த மனிதன் பெஞ்சமினை நன்கறிந்ததொரு நண்பனைப் போல நடத்தினான், சென்ற வருடம் போலவே இந்த வருடமும் நிகழ்வின் தொடக்கம் அமர்க்களமாக இருந்ததா என மரியாதையோடு விசாரித்தான். ஒரு அழகான வீட்டுக்கு பெஞ்சமினை அழைத்துப் போனான், கிரேக்கத் தூண்களோடும் கோத்திக் மரபிலான வளைவுகளோடும் அட்லாண்டிக் கடலைப் பார்த்தபடியிருந்த ஆடம்பர இல்லத்துக்கு.

உள்ளே, புகைபோக்கியில் வேலைக்காரர்கள் ஏற்கனவே நெருப்பினை உண்டாக்கியிருந்தார்கள். “திருவாளர் பெஞ்சமின்” என்று அவர்கள் அவனை அழைத்தார்கள், மிகக்கச்சிதமான ஆங்கிலத்தில் அவன் அவர்களுக்கு பதிலுறுத்தான், என்றாலும் அது தன்னுடைய தாய்மொழியல்ல என எதுவோ அவனுக்குள் சொல்லிக் கொண்டிருந்தது. தனது நாக்கு சுழல்வதையும் புரள்வதையும் அவனால் உணர முடிந்தது, வெகு வினோதமான உச்சரிப்பில் வார்த்தைகள் வாயிலிருந்து நழுவி விழுவதையும்.

அவனது முந்தைய வாழ்க்கை பற்றிய சில தடயங்களைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையோடு, தனது வீட்டைச் சுற்றிப்பார்க்க பெஞ்சமின் தீர்மானித்தான், அங்கிருக்கும் தன்னுடைய பொருள்களனைத்தையும் அலசுவதென்றும். எங்கிருந்து அவன் வந்தானென்றோ எத்தனை காலமாக அங்கு வசித்து வருகிறானென்றோ தனது வேலையாட்களைக் கேட்பதை அவனால் நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை! திரு.ஹாம்லெட்டின் உடலுக்குள் புகுந்து வெளியேறும் தருணங்களில் ஏதோவொரு இடத்தில் தனது சுயநினைவை இழந்து விட்டதாக அவர்கள் எண்ணுவதை அவன் விரும்பவில்லை. பணியாட்கள் தன்னை மிகவும் நன்றாக அறிந்திருந்தார்கள் என்று நினைத்தான் பெஞ்சமின், அவர்கள் அவனை மரியாதையோடு நடத்தியதோடல்லாமல் அவனோடு ஒருவித நெருக்கத்தையும் கொண்டிருந்தார்கள்.

அந்த வீடு அவனுடையதுதான், நிச்சயமாக, ஏனெனில் எந்தவொரு சிறு பொருளாகயிருந்தாலும் அது எங்கே இருந்ததென்பதை அவன் மிகத்தெளிவாக அறிந்திருந்தான், ஆனால் தனக்குப் பரிச்சயமானதாகத் தெரிந்த இந்தப் பொருட்கள் குறித்த திடமான நினைவுகளென்று எதுவும் அவனிடம் இருக்கவில்லை. அவனைச் சுற்றியிருந்த பொருட்களுக்கும் அவனுக்குமிடையேயான உளப்பூர்வமான பிணைப்பென்பது வெகு தொலைவிலிருப்பதாகவும் ஆராய்ந்தறிய முடியாததாகவும் தோன்றியது. அவனுடைய உருவப்படங்களும் புகைப்படத் தொகுப்புகளும் கூட எந்த வகையிலும் உதவவில்லை: எல்லாம் சமீபகாலத்திய பெஞ்சமினையே காட்டின, தற்காலத்தில் வாழ்பவனை, அதே கருமையான கேசம், கண்களைச் சுற்றியிருக்கும் புள்ளிகள் மற்றும் அம்முகத்தின் ஈடுஇணையற்ற இளமையோடு. தற்போது இருப்பதைக் காட்டிலும் இளமையாக அவன் ஒருபோதும் இருந்திருக்க முடியாது எனத் தோன்றியது. அவன் பிறந்ததே இப்படித்தான் என்பதைப் போல, அதாவது இருபத்து-ஐந்து வயது நிரம்பியவனாக, மேலும் இப்போதுதான் தன்னை முதன்முறையாகச் சந்திக்கவும் செய்கிறான். ஆனால் ஒரு மனிதனுக்கு எதுவுமே நினைவில்லை என்பது சாத்தியமா என்ன? இறுக்கமாகப் பற்றிக் கொள்ளும் வகையில் அவனுடைய இறந்த காலத்தில் எதுவுமில்லாமல் போனது எப்படி? வெகு எளிதாக, பிராட்வே மேடையில் ஹாம்லெட்டாக நடிக்கும் இடத்தை அவன் எப்படி வந்தடைந்தான்? அவனுக்கென நண்பர்கள் யாரும் இருந்தனரா அல்லது ஒரு குடும்பம்? அப்பா? அம்மா? அவன் எங்கு பிறந்தான்? அவனுடைய பிறந்ததினம் என்ன? பெஞ்சமினுக்கு எதுவும் தெரியவில்லை. எங்கோ இருந்தவனை யாரோ வெட்டியெடுத்துக் கொண்டு வந்து உருவாக்கியதாகத் தோன்றியது.

சுவர்களில் தொங்கிய புகைப்படங்களைப் பார்த்தான். இந்தப் புகைப்படங்கள் உண்மையாயில்லை என்றெண்ணினான் – புன்னகைக்கச் சிரமப்படும் ஒரு திமிர்பிடித்த மனிதனை அவை காட்டின. அவனுடைய ஒவ்வொரு அசைவையும் குரூரம் நிரம்பிய கண்கள் பின்தொடர்ந்தன. எப்படிப் பார்த்தாலும் ஏன் இத்தனை புகைப்படங்களை வீடு முழுக்க அவன் மாட்டி வைத்திருக்கிறான்? மேலும் அவையெல்லாமே நேற்றுத்தான் எடுக்கப்பட்டதைப் போலத் தோற்றமளித்தன. அவனுடைய முழுவுருவ ஓவியங்கள் கூட முந்தையதினம் வரைந்து முடிக்கப்பட்டதாகத்தான் தோன்றின, அவற்றின் தைல வர்ணங்களெல்லாம் ஓரிரவுக்குள் உலர்ந்த தன்மையைக் கொண்டிருந்தன. தனக்குத்தானே எதையும் சொல்ல அவன் முற்படுகிறானா?

அட, ஆமாம், சட்டென்று அவனுக்குப் புரிந்தது: எனக்கு வயதாவதில்லை!

ஓ, அந்தத் தருணத்தில் திரு.பெஞ்சமின் ஸெக் எத்தனை குழம்பியவனாக இருந்தான்.. என்றென்றும் இளமையோடிருப்பவனின் முகத்தை அவன் பெற்றிருந்தான், டோரியன் கிரே என்னும் மனிதனைப்போல! அது வேறொரு சங்கதி. ஹாம்லெட் அவனுடைய இதயத்துக்கு நெருக்கமானவனாக மாறிய அதே வழியில், அதன் ஒவ்வொரு வரியும் அவனது அங்க அசைவுகளில் எப்படியோ பொறிக்கப்பட்ட அதே முறைமையில், இப்போதிந்த “டோரியன் கிரே” அவன் நினைவுகளுக்குள் புகுந்து புறப்பட்டான் – எவ்வித காரணமுமின்றி.

மேலும் அடுத்ததாக நிகழ்ந்த அதிசயத்தோடு ஒப்பிட இது ஒன்றுமேயில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

டோரியன் கிரேயின் நினைவோடு பெஞ்சமின் படுக்கையறைக்கு ஓடினான். அறை மாடியில் இருந்தது, இடப்பக்கத்தில் முதலாவதாக, இரவு-மேசையின் இழுப்பறைக்குள் அந்தப் புத்தகம் கிடந்தது – அவனுக்குத் தெரியும். எனவே இழுப்பறையைத் திறந்தான். அங்கே அவன் கண்டெடுத்த புத்தகம் உடைந்து விரிசலிட்ட அட்டையையும் பழுப்பேறிய பக்கங்களையும் கொண்டிருந்தது. மேலும் அது ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கவில்லை. ஆனால் அதனை எப்படி வாசிப்பதென்பது பெஞ்சமினுக்குத் தெரியும், அட்டையில் இருந்த வாசகங்கள்:

ஆஸ்கர் வைல்ட்
டோரியன் கிரேயின் சித்திரம்

முதல் பக்கத்தைத் திறந்து பெஞ்சமின் வாசிக்கத் தொடங்கினான். ஒவ்வொரு வார்த்தையும் அவனுக்குப் புரிந்தது; ஆரம்பத்தில் மனதுக்கு நிறைவானவையாக, அன்போடும் மகிழ்ச்சியோடும், ஏற்கனவே அறிமுகமான எழுத்துகளைப் போல வேகவேகமாக வார்த்தைகள் அவனுக்குள் நுழைந்தன, ஆனால் பிற்பாடு வலியாக மாறின, ஏதோ அந்த வினோதமான மொழி அவனுடைய ஆன்மாவை ஆழத் துளைப்பதாகத் தோன்றியது. பெஞ்சமினின் ஒவ்வொரு மூச்சும் நெஞ்சுக்குழியில் தேங்கி நின்றது; தன்னுடைய ஈரக்குலையை ஏதோவொன்று இரண்டாக அறுப்பதைப்போல உணர்ந்தான், உள்ளுறுப்புகளை தனது விலா எலும்புகள் அழுத்தி நெருக்குவதாகவும் தோன்றியது. மயங்கி விழும் நிலையிலிருந்தான். நாகரீகமான புன்னகையை வெளிப்படுத்திய அவனது புகைப்படங்கள் இப்போது அவனைச் சுற்றிச் சுழன்றடித்தன, படபடத்த கண்ணிமைகளுக்குக் கீழிருந்த கருவிழிகள் கலங்கி நின்றன. காதைச் செவிடாக்கும் வெடிச்சத்தம் பலவந்தமாக அவனுடைய பின்மண்டைக்குள் ஊடுருவி நுழைந்து வெடிக்க அங்கிருந்த அமைதியனைத்தும் முன்நெற்றியின் வழியாகத் தப்பி வெளியேறியது.

பெஞ்சமின் நிலைகுலைந்து தடுமாறி தரை மீது விழுந்தான்.

சிறிது நேரம் கழித்து பிரகாசமான வெளிச்சம் இருட்டை விழுங்கிட மீண்டும் தான் மேடையின் மேல் நிற்பதை பெஞ்சமின் அறிந்து கொண்டான்..

“இருப்பதா அல்லது இல்லாமல் போவதா?” பார்வையாளர்கள் கரவொலி எழுப்பினார்கள், அவன் தலைகுனிந்து வணங்கினான். உடை-மாற்றும் அறையின் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தான். நான் யார் எனவும் ஏன் இங்கிருக்கிறேன் என்றும் அதிசயித்தான். கதவைத் தட்டி விட்டு உள்ளே நுழைந்த அவனுடைய லிமோ ஓட்டுனன் தன்னை பெஞ்சமினின் சாரதி என்று அறிமுகம் செய்து கொண்டான், வீட்டுக்குச் செல்ல அவன் தயாராகி விட்டானா எனவும் வினவினான். கிரேக்கத் தூண்களோடும் கோத்திக் மரபிலான வளைவுகளோடும் பெஞ்சமினுக்கென ஒரு அழகான வீடு இருந்தது. அதன் அத்தனை சுவர்களும் அவனது புகைப்படங்களாலும் ஓவியங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பெஞ்சமின் தன்னைக் கண்ணாடியில் பார்த்துத் தனக்கு வயதாவதில்லை என்பதைப் புரிந்து கொண்டான். டோரியன் கிரேயைப் போலவே! படுக்கையறையில், ஆஸ்கர் வைல்ட் எழுதிய புத்தகமொன்றைக் கண்டெடுத்தான், முதல் பக்கத்தைத் திறந்து பார்த்து.. மயங்கி விழுந்தான்.

மீண்டும் கண்களைத் திறந்தபோது பளீரிடும் ஒளிவட்டத்தின் நடுவே மறுபடியும் தான் நின்றிருப்பதை அறிந்தான். இருப்பதா அல்லது இல்லாமல் போவதா, மீண்டும், அவனுடைய தர்மசங்கடமான நிலையைச் சற்றும் புரிந்து கொள்ளாததொரு சூழல். மறுபடியும் கிடைத்த ஆரவார வரவேற்பு. உடை-மாற்றும் அறையில் தனக்குப் பழகத் தொடங்கியிருந்த முகத்தை மீண்டும் கண்டான். ஆடியில் தெரிந்த உருவமும் சற்றுப் பழக்கமானதாகத்தான் தெரிந்தது. சாரதி அவனை வீட்டுக்கு அழைத்துப் போனான், அட்லாண்டிக் கடலைப் பார்த்திருக்கும் ஆடம்பரமான இல்லத்துக்கு. தன்னுடைய பிரதிபலிப்பைக் கண்ட பெஞ்சமின் தனக்கு வயதாவதில்லை என்பதைப் புரிந்து கொண்டான், அந்தப் புத்தகத்திலுள்ள பிரதானக் கதாபாத்திரத்தைப் போலவே. டோரியன் கிரேயின் சித்திரம்! படுக்கையறைக்கு ஓடினான். பதைபதைப்போடு, இரவு-மேசையின் இழுப்பறையைத் திறந்து ஆஸ்கர் வைல்ட் எழுதிய புத்தகத்தைக் கண்டுபிடித்தான். முதல் பக்கத்தைத் திறந்து பார்த்திட… உடன் மயக்கநிலைக்குள் விழுந்தான்.

நினைவு திரும்பியபோது, ஒளிவட்டத்தைக் கண்டான், மேடையை, ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற வார்த்தைகளை உச்சரித்தான், கூட்டம் அவனுடைய பெயரைச் சொல்லி அலறியது, முதல் முறை நிகழ்வதைப் போலவே அத்தனையும் வரிசையாக நடந்தேறின, பிறகு இரண்டாவது முறையாக, மேலும் எத்தனை முறை இப்படி நிகழ்ந்ததென்பது யாருக்கும் தெரியாது.. ஒவ்வொரு முறையும் அவன் மேடையில் விழிப்பதில் தொடங்கி டோரியின் கிரேயின் சித்திரத்தினுடைய முதல் பக்கத்தை அவன் திறப்பதில் சென்று முடிவடைந்தது. பிறகு, உணர்விழந்த நிலைக்குச் செல்வான், மீண்டும் எல்லாம் முதலில் இருந்து தொடங்கும். சுழற்சியின் ஏதோவொரு முனையில் சிக்கிக்கொண்ட சுழலிசைத்தட்டைப்போல காலத்தின் முடிவில்லா சுழலுக்குள் சிக்கியதாக உணர்ந்தான் பெஞ்சமின் ஸெக். மேலும் அவன் அங்கேயே இருந்திருக்கக்கூடும், இணையாக இயங்கும் வேறொரு உலகத்தில், என்றென்றைக்குமாக, இறுதியாக அவனுடைய இந்த வழக்கமான நடைமுறையில் சின்னதொரு மாற்றம் மட்டும் நிகழாதிருந்தால் – மாடிப்படியில் வேகமாக ஏறும்போது தடுமாறி வீழ்ந்தவனின் சட்டைப்பையிலிருந்து என்னவோ சிதறி கீழே விழுந்தது: ஒரு கோலிக்குண்டு.

அடுத்த முறை பெஞ்சமின் தன்னுடைய வழக்கமான செயல்களின் கண்ணிக்குள் நுழைந்து டோரியன் கிரேயைக் கண்டெடுக்க மாடிப்படியில் விரைந்து ஏறும்போது, அந்தக் கோலிக்குண்டில் கால் வைத்து வழுக்கி விழுந்தான். பிறகு.. சிக்கிக்கொண்ட சுழலிசைப்பெட்டி கடைசியாகத் தனது நெறிப்படுத்தப்பட்ட தடத்திலிருந்து விலகி மீண்டும் இசைக்கையில் நடுவிலுள்ள வரிகளைத் தாண்டி நேரடியாக மூன்றாவது சரணத்துக்குப் போவதைப் போல, காலம் பல யுகங்களைக் கடந்து முன்னேறிச் சென்றது. அவனுடைய வழக்கமான மறதிநிலைக்குள்தான் பெஞ்சமின் சென்று விழுந்தான், ஆனால் இந்த முறை கண்விழித்தபோது அவனை வரவேற்ற வெளிச்சம் பிரகாசமான ஒளிவட்டமாக இருக்கவில்லை, அது கோடைக்காலச் சூரியனின் வெளிச்சம்..

பரந்து விரிந்த பசுமையானப் புல்வெளியையும் அதன் நடுவில் ஒரேயொரு செர்ரி மரத்தையும் அவன் கண்டான். அந்த மரத்தின் கனி உதிரச்சிவப்பில் இருந்திட, மேலும் அதன் இனிமையான சதைப்பகுதியோ சாறால் நிரம்பி கனத்தது. புழுக்களில்லாத செர்ரிகளில் அப்படியொன்றும் சுவையிருக்காது என பெஞ்சமின் நினைத்தான். மரம் அத்தனை உயிர்ப்போடிருந்தது, மெலிதான அதன் கிளைகள் காற்றில் எளிதாக அசைந்தாடின. செர்ரியினுடைய நறுமணத்தின் சில துளிகள் பெஞ்சமினின் உதடுகளில் பட்டுத் தெறித்தன. இனிப்பான உணர்வுகளின் மெல்லிய தடங்களை ஒன்றுவிடாமல் வரித்துக்கொள்ளும் வகையில் அவன் அந்தத்துளிகளைச் சுவைத்தான்.

தனியாக நின்றிருந்த மரத்தினருகே சில மனிதர்கள் தோண்டிக் கொண்டிருந்தார்கள்.

பெஞ்சமின் சில செர்ரிகளைப் பறிக்க விரும்பினான். தன்னுடைய கரத்தை நீட்டினான், ஆனால் கிளையிலிருந்து ஒரு பழத்தை அவனது விரல்கள் பறித்த அதே தருணத்தில், பெஞ்சமினுடைய வெற்றுக் கால்களுக்குக் கீழேயிருந்த நிலம் மணற்கடிகாரத்தின் உட்பகுதியிலுள்ள மணலைப்போல உலர்வாகவும் தளர்ந்ததாகவும் மாறியது. அவன் விழுந்தான். கீழே இழுத்த மணல் அவனை ஒரே கடியில் மென்று விழுங்கியது. செர்ரி மரத்தைப் பற்றிக்கொள்ள அவன் முயற்சித்தான், ஆனால், ஆச்சரியப்படும் வகையில், அதையும் தன்னோடு பாதாளத்துக்கு இழுத்துப் போனான்.

உயிரோடு புதைந்து போவோம் என்கிற அச்சம் அவனுடைய கண்களை வேகமாக மூடியது.

இறுதியில் மெல்லியதொரு வெளிச்சம் அவனுடைய நினைவுகளை நிரப்பியபோது, எலும்புக் குவியலுக்கும் ஈயென இளிக்கும் மண்டையோடுகளுக்கும் நடுவே கிடப்பதை பெஞ்சமின் உணர்ந்தான், எல்லாம் உருக்குலைந்தும் உடைந்தும் கிடந்தன; ஒன்றையொன்று இறுக அணைத்திருந்த எலும்புக்கூடுகளின் குவியல். பெஞ்சமின் செர்ரி மரத்தை இறுகப் பற்றினான், ஆனால் அதுவோ இப்போது வெறும் வேரென மாறி கருவிலிருக்கும் நிலையைப்போல மடங்கிக்கிடந்த ஒரு எலும்புக்கூட்டில் ஒட்டிக் கொண்டிருந்தது, தொப்புள்கொடியைப் போல.. குறுகிய அந்த எலும்புகள் ஒரு சிறுவனுடையவை, பெஞ்சமினுக்குப் புரிந்தது. எலும்புக்கூட்டின் மண்டையோட்டில் பின்புறம் ஒரு பெரிய துளை இருந்தது, முன்புறம் இன்னும் பெரிதாக ஒன்று, மேலும் அதன் பற்களுக்கிடையில் ஒரு விதை, அதிலிருந்துதான் அந்த அடர்த்தியான செர்ரி மரத்தின் வேர்கள் துளிர் விட்டிருக்க வேண்டும்.

அதன் பிறகு, ஆ, அப்போதுதான் அது தன்னுடைய மண்டையோடு என்பதை பெஞ்சமின் ஸெக் உணர்ந்தான். அவனுடைய பற்கள்… அவனுடைய எலும்புகள்… அவனுடைய வாழ்க்கை… அவனுடைய மரணம்… ஒரு ஜிப்ஸிப்பாடலைப் போல அலைந்து திரிந்த அவனுடைய அமைதியற்ற ஆத்மா.

சுற்றுமுற்றும் பார்த்தபோது தான் தனியாக இல்லை என்பதை பெஞ்சமின் அறிந்தான். மேலும் நிறைய ஆத்மாக்கள் அங்கிருந்தன, தங்களுடைய எலும்புகளைத் தேடியபடி. பள்ளியிலிருந்த சில குழந்தைகளை அவன் அடையாளம் கண்டுகொண்டான்… அருகாமை கிராமத்தைச் சேர்ந்த மனிதர்களும் இருந்தார்கள்… அவனுடைய இயற்பியல் ஆசிரியரும்… உடன் பெஞ்சமினின் அப்பாவும்! மேலும் அண்டை மனிதர்களில் ஒருவர்.. மேலும் ஒருவர்.. இன்னும் நிறைய மனிதர்கள்.. அவன் அறிந்திராத பல மனிதர்களும்.. அனைவரும் தங்களுடைய எலும்புகளைத் தேடிக் கொண்டிருந்தார்கள். அமைதியாக, கீழ்ப்படிதலோடு, இந்தப் புண்ணியத்தலத்துக்குள் அவர்கள் தேடினார்கள் – எலும்புக்கூடுகளால் நிரம்பி வழிந்த அதலபாதாளத்துக்குள்.

மரித்தவர்கள் தங்களின் எலும்புகளைத் தேடுகையில் அவர்களுக்கு மேலே உயிரோடிருந்தவர்கள் ஒரு மாபெரும் சவக்குழியைத் தோண்டிக் கொண்டிருந்தார்கள்.

எலும்புக்கூடுகள் வரிசையாக அடுக்கப்பட்டு எண்களிடப்பட்டன. பெஞ்சமின் ஸெக்கின் எண் இருபத்து-ஐந்து…

இதோ, அவன் இங்கிருக்கிறான்: மீண்டும் ஒரு சிறுவனாக. ராணுவ வீரர்களில் ஒருவன் செர்ரி மரத்தின் மிகவும் தாழ்ந்த கிளையிலிருந்து அவனை இழுத்துக் கீழே தள்ளியபோது அவன் செர்ரிப் பழங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தான். தரையில் வீழ்கையில் தன்னுடைய பையிலிருந்து ஒரு கோலிக்குண்டு நழுவி விழுவதைக் கண்டான்; அடர்த்தியான புற்களுக்கிடையே அது தொலைந்து போனது. அவனைச் சுற்றிலும் புற்களின் மணம். இன்னும் ஈரமாயிருந்த நிலம். அது அவனை அமைதியாக்கியது. தன்னுடைய பயத்தைப் பற்றி நினைக்க அவன் விரும்பவில்லை; அந்தத் தருணத்தின் வேதனையை முற்றிலுமாக நிராகரித்தான். தனது கைரேகையில் மீது ஊர்ந்த எந்தக் கவலையுமில்லாத பொறிவண்டைக் கண்டான். கலாஷ்னிகோவின் குழாய் அவனுடைய பின்னந்தலையைக் குறிபார்க்க, அவன் நினைத்தான்… டோரியன் கிரேயைப் பற்றியும் என்றும் முடிவுறாத அவனது இளமை குறித்தும்… பிராட்வேயில் ஒரு நடிகனாக அவன் விரும்பினான், தனக்கென ஒரு சாரதியும் அபாரமான கிரேக்கத் தூண்களோடும் கோத்திக் மரபிலான வளைவுகளோடும் கடலைப் பார்த்தபடியிருக்கும் ஒரு வீடும் வேண்டும் என்று… அல்லது குறைந்தபட்சம் அவனால் முடியுமெனில்… இந்த அழகான பூச்சியாக அவனால் மாற முடியுமெனில்… அங்கிருந்து பறந்து செல்ல முடிந்தால்… பொறிவண்டே, பொறிவண்டே, எனக்கொரு வழியைக் காட்டிடு, அவன் முணுமுணுத்தான்…

அந்தத் தருணத்தில், ஒளிபுகும்படியான தனது சிறகுகளை விரித்த பொறிவண்டு திறந்து கிடந்த அவனுடைய உள்ளங்கையை விட்டு வெளியேறிப் பறந்து சென்றது, பெஞ்சமின் ஸெக்கின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக.

(ஸ்ரெப்ரனித்சா படுகொலையில் கொல்லப்பட்டவர்களின் நினைவுக்கு..)

**************

எல்விஸ் ஹாஜிக் (Elvis Hadzic : 1971 – )
போஸ்னியா & ஹெர்ஸிகோவினாவின் கிராடசச் நகரில் பிறந்தவர். சரெயேவோவில் உள்ள கலைக்கல்லூரியில் பட்டம் பயின்றார். ஆஸ்திரியாவிலும் ஜெர்மனியிலும் அகதியாக வாழ்ந்த காலகட்டங்களில் கலைக் கண்காட்சிகளை நடத்தியிருக்கிறார். 2010 முதல் போஸ்னிய பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். அதே காலகட்டத்தில் அவருடைய சிறுகதைகளும் வெளியாக ஆரம்பித்தன. மிருகங்களும் பிசாசுகளும் என்கிற முதல் நாவல் 2012-ல் வெளியானது. தற்போது சால்ட் லேக் நகரில் வசித்து வருகிறார். “The curious case of Benjamin Zec” என்கிற இந்தக்கதை சிறந்த ஐரோப்பியப் புனைவுகள் 2014 தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

 

unnatham

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top