TAMILI

தமிழி

In vain – Jack Kerouac

 

வீண்
– ழாக் க்யூரெக் 

வானத்தில் மின்னும் நட்சத்திரங்கள்
வீண்
ஹேம்லெட் சோகம்
வீண்
பூட்டில் உள்ள சாவி
வீண்
தூங்கும் அம்மா
வீண்
மூலையில் உள்ள விளக்கு
வீண்
மூலையில் உள்ள எரியாத விளக்கு
வீண்
ஆபிரகாம் லிங்கன்
வீண்
ஆஸ்டெக் பேரரசு
வீண்
எழுதுகின்ற கை : வீண்
(காலணிகளின் மிருதுவான அடித்தளம்
வீண்
திரைச்சீலைகளின் கயிறு
பாக்கெட் பைபிள்
வீண்
பச்சைக் கண்ணாடியாய் மினுமினுக்கும் தளம்
சாம்பல் கிண்ணங்கள்
வீண்
*காடுகளில் உள்ள கரடி
வீண்
புத்தரின் வாழ்க்கை
வீண்)

 

தமிழில் : கௌதம சித்தார்த்தன் 

குறிப்பு :

“காடுகளில் ஒரு கரடி உள்ளது” (“There is a bear in the woods” ) என்பது ஒரு பிரபலமான சொற்றொடராக வழங்கப்படுகிறது, சிலருக்கு, கரடியைப் பார்ப்பது எளிது. மற்றவர்கள் அதைப் பார்ப்பதில்லை. சிலர் கரடி ஆபத்தான விலங்கு அல்ல என்று சொல்கிறார்கள். மற்றவர்கள் இது மிகவும் ஆபத்தானது என்கிறார்கள். அப்படியானால், கரடியின் தன்மை என்ன? யார் சொல்வது சரி என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது. இந்தப்பார்வையில் உண்மையில் ஒரு கரடி இருந்தால்… என்பதான வியாக்கியானத்தில் இந்த சொற்றொடர் கையாளப்படுகிறது.

வெகு மக்களிடம் பெரிதும் புழங்கும்  இந்த சொற்றொடரை,  1984 ஆம் ஆண்டு குடியரசுக் கட்சி வேட்பாளர் ரொனால்ட் ரீகன், தனது அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்காக “கரடி” என்ற தலைப்பில்   உருவாக்கப்பட்டவிளம்பரப் படத்தில் ஒரு உருவக உத்தியாகப் பயன்படுத்தினார். ஒரு காட்டு கரடி ஒரு காடு வழியாக அலைந்து கொண்டிருந்தது, கரடி ஆபத்தானது என்றும் அதை எதிர்கொள்ள தயாராக இருப்பது புத்திசாலித்தனமாக இருக்கும் என்றும் விவரிக்கிறது. அந்தப்படம். இறுதிக் காட்சியில், ஒரு மனிதன் தோன்றி அதை எதிர்த்து நிற்க, கரடி பின்வாங்குகிறது.  “ஜனாதிபதி ரீகன்: அமைதிக்குத் தயாரானவர்” என்ற கோஷத்துடன் விளம்பரம் முடிகிறது. உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கான அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து அவற்றைச் சமாளிக்க ரீகன் தயாராக இருப்பதாக விளம்பரம் பரிந்துரைத்தது.   “வலிமையின் மூலம் அமைதி” என்ற அடிப்படை உருவகம் பொதிந்த  இந்த விளம்பரம் அரசியல் மற்றும் விளம்பர உலகில் பாராட்டுக்களைப் பெற்றது.

அவரது எதிர்க்கட்சிக்காரரான வால்டர் மொண்டேல்,  ரீகன், சோவியத் யூனியனுடன் எவ்வாறு சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கேள்வி எழுப்பினார். (கரடி : சோவியத் யூனியனின் உருவகச் சின்னம்) இப்படியான சர்ச்சைகளுக்கு இடையில், இந்தச் சொற்றொடர் பெருமளவில் பேசப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக,  2004 ஆம் ஆண்டு மெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், குடியரசுக் கட்சியின் ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷின் இந்த விளம்பர உத்தியை “ஓநாய்கள்” என்ற தலைப்பில்  மாற்றி வெளியிட்டார்.  இது பயங்கரவாதிகளின் பிம்பத்தை ஓநாய்களாக வரைய முயன்றது. அந்த விளம்பரத்தில் பயங்கரவாதம், தாராளமயம் மற்றும் “அமெரிக்காவின் பாதுகாப்பு” ஆகியவை வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டது. விஷயம் இத்தோடு நிற்கவில்லை. செப்டம்பர் 2015  தேர்தலில், குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டெட் க்ரூஸ் “ஸ்கார்பியன்” என்ற தலைப்பில் இன்னொரு விளம்பரத்தை உருவாக்கினார், “பாலைவனத்தில் ஒரு தேள் இருக்கிறது” என்ற தொடக்க வரியுடன் விரியும் விளம்பரக் காட்சிகளில், ஒரு தேள் உருவத்தைப் பயன்படுத்தி அமெரிக்காவிற்கு இஸ்லாமிய பயங்கரவாத அச்சுறுத்தலை முன்வைத்தார் க்ரூஸ்.

தற்போது, வாஷிங்டன் போஸ்ட் இதழ், அரசியல் தலைப்புகளை அறிமுகப்படுத்த, “காடுகளில் இன்னும் ஒரு கரடி உள்ளது” என்ற இந்த வரலாற்றுச் சொற்றொடரைப் பயன்படுத்துகிறது.

**************

உலகப் புகழ் பெற்ற பீட் கவிதை இயக்கத்தின் தந்தை என்று கருதப்படும் ழாக் க்யூரெக் (Jack Kerouac : 1922 –  1969),  அந்த இயக்கத்தின் மும்மூர்த்திகளாக இயங்கிய – ஆலன் கின்ஸ்பெர்க், வில்லியம் பர்ரோஸ்,  ழாக் க்யூரெக் – ஆகியோரில் முதன்மையானவர்.  புகழ் பெற்ற அமெரிக்க கவிஞர், நாவலாசிரியர். இவரது படைப்புகள் க்கும் மேற்பட்ட நூல்களாக, நாவல்களாகவும் கவிதைத் தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளன. அவரது இரண்டாவது நாவலான, On the Road  உலகம் முழுக்க பெரும் புகழையும் பரபரப்பையும் உருவாக்கியது.

ஜேம்ஸ் ஜாய்ஸ் மீது மிகுந்த அபிமானமும், ஈடுபாடும் வைத்திருந்தவர். அவரது எழுத்தாளுமையின் தாக்கம் தன் எழுத்துக்களில் பெரிதும் பாதித்திருப்பதாக சொல்கிறார், குறிப்பாக, ஜாய்ஸின், Stream of consciousness என்னும் கயிற்றரவு பாணியில் பெரிதும் மயங்கித் திளைத்தவர். தனது நாவலான, On the Road  குறித்து, அவர் கின்ஸ்பெர்க்கிற்கு எழுதிய கடிதத்தில், “மொழியின் நுரை கக்கிப் பொங்குப் பிரவஹிக்கும் வெள்ளத்தை,  நான் திரும்பிப் பார்க்கும்போது, நான் உங்களுக்குச் சொல்ல முடியும். இது யுலிஸஸ் போன்றது, அதே ஆளுமையுடன்  ஒப்பப்பட வேண்டும்.” என்கிறார்  க்யூரெக்.

**********

 

unnatham

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top