TAMILI

தமிழி

A Survey on Controversial Issues Regarding Contemporary Chinese Poetry

A Survey on Controversial Issues Regarding Contemporary Chinese Poetry

(Ming Di)

தற்கால நவீன சீனக்கவிதையின் சர்ச்சைகள்
– மிங்க் டி

சீனாவில் கவிதைத் துறை பற்றியும் கவிஞர்களின் நிலை பற்றியும் பல வருடங்களாகவே பல்வேறுபட்ட விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. சீனாவிற்கு வெளியே இருக்கும் வாசகர்களிடமிருந்து இந்தப் பிரச்சினைகள் பற்றி பலதரப்பட்ட கேள்விகளும், குழப்பங்களும் நிலவுகின்றன.அவர்களுக்கு ஒரு தெளிவை உண்டாக்குதல் இந்த ஆய்வின் நோக்கம். ஆய்விற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, பல்வேறு பின்னணிகொண்ட 25 கவிஞர்களில், சிலர் நேர்காணல் தர நாகரிகமாக மறுத்துவிட்டனர்; இருவர் கோபமாக நிராகரித்தனர்; 16 பேர் சுருக்கமாக அல்லது நீண்ட கட்டுரைகள் மூலமாக பதில் அளித்தனர். Poetry International இதழின் இதழின் சீன மொழிக்கான ஆசிரியர் மிங்க் டி (Ming Di) 2016 பிப்ரவரியில் இந்த ஆய்வை நடத்திக்கொண்டிருந்தபோது வந்த வரிசைப்படி 16 கவிஞர்களின் கருத்துக்களின் பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

***********

I. ‘அதிகாரப்பூர்வமான’ அல்லது ஜனரஞ்சக நீரோடை இலக்கியத்திற்கு எதிரான ஒரு கலகமாக 1970களில் ஒரு சுதந்திரமான அல்லது மறைமுகமான கவிதை எழுந்து வந்தது. 21-ஆம் நூற்றாண்டு சீனாவில் ‘அதிகாரப்பூர்வத்திற்கும்’ ‘அதிகாரமற்ற தன்மைக்கும்’ இடையிலான பிளவு இன்னும் இருக்கிறதா? ‘அதிகாரப்பூர்வம்/அரசாங்கம்’ அல்லது ‘நிறுவனமயமான அமைப்பு’ என்பதை நீங்கள் எப்படி வரையறுக்கிறீர்கள்? இந்த அமைப்புக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் கவிஞர்களில் உங்களுக்குப் பிடித்தமானவர்களை நீங்கள் சொல்லலாம்.

ஜிங் வெண்டாங் (Jing Wendong 敬文东 ) (கவிஞர்; விமர்சகர்; மின்ஸூ இனவியல் பல்கலைக்கழகம், சீனா) :
சீனா சுயமுரண்பாடுகளும், மாய எதார்த்தவாதமும் கொண்ட தேசம். சீனர்கள் உட்படயாரும் இதைப் புரிந்து கொள்ள முடியாது. ஒவ்வொருவர்க்கும் பல்வேறு அடையாளங்கள் இருக்கின்றன. ‘நான் யார்?’ என்ற கேள்வி கவிஞர்களை மட்டுமல்ல, எல்லா மக்களையும் தொந்தரவு செய்திருக்கிறது. அரசு/அதிகாரப்பூர்வமான கவிஞர்களுக்கும், சுதந்திரமான அகதிகளுக்கும் இடையில் எந்தத் தெளிவும் இல்லை. அரசின் அமைப்பிலிருந்து முற்றிலும் விலகியிருப்பதாக ஒருவன் கற்பனை செய்வதற்கு முயன்றால், அது வெறும் புனைவுக் கற்பனைதான். இரண்டுக்கும் நடுவில் ஒரு கோடு கிழிப்பது கொடுமையானது. இருந்தாலும், இன்றைய விவாதத்திற்கு மிகவும் ஆற்றல்மிக்க வழி வேறெதுவும் இல்லை. அடிப்படையில் அரசாங்கத்தின் பக்கம் நல்ல கவிஞர்கள் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கவில்லை. சிலர் இரண்டு பக்கமும் இருக்கிறார்கள், சீக்கிரம் வெற்றியடைய. சில வருடங்களுக்கு முன்பு (மறைமுகமான கவிதையின் வெற்றிக்குப் பின்பு) சில கவிஞர்கள், மக்களிடம் அரசு சாராத வகையில் தங்களைப் பிரசித்தமானவர்கள் என்று சொல்லிக்கொண்டார்கள்; நீதிவொழுக்கத்தில், தர்மத்தில் தங்களை மேலானவர்களாக காட்டிக்கொண்டார்கள். ஆனால் அரசு அமைப்பின் ஏணியில் படிப்படியாக ஏற அவர்கள் கடினமாக உழைத்தார்கள்.

ஜாங் கின்குவா (Zhang Qinghua 张清华) (கவிஞர், விமர்சகர், பீஜிங் நார்மல் பல்கலைக்கழகம்) :
கவிஞர்களின் சமூக அந்தஸ்து நிச்சயமாக அர்த்தமுள்ளதல்ல; கலாச்சார அந்தஸ்து நிச்சயமானதல்ல. அதுதான் பல எல்லை சம்பந்தமான சந்தேகங்களை எழுப்புகிறது. 1990-களிலிருந்து எல்லைக்கோடு தெளிவில்லாமல் ஆகிவிட்டது. அடிமட்ட எழுத்தாளர்கள் இனியும் அடிமட்டத்தில் இல்லை. உதாரணமாக, ஸெங் சியோஓகியாங் மேற்கொண்டு ஓர் ஆலைத்தொழிலாளராக இல்லை. குவாங்டாங் பிரதேச எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் பத்திரிகையில் அவர் ஓர் ஆசிரியர். நாம் ஒரு கவிஞனை அவனது எழுத்தை வைத்து மதிப்பிட வேண்டும்; அவனது பதவியை வைத்து அல்ல.

லி ஹென்ங் (Li Heng 黎衡 ) (ஹுபெய்யின் இளம்கவிஞர், தற்பொழுது குவாங்சௌவில் பத்திரிகையாளர்) :
சீனாவில் விஷயங்கள் குழப்பமாக சிக்கலாக இருக்கின்றன.ஒருபக்கம் சீனா எழுத்தாளர்கள் சங்கத்திலிருந்து, சீனா கலை இலக்கிய வட்டங்களின் கூட்டமைப்பிலிருந்து அங்கத்தினர்கள் சராசரியான அல்லது கவிதையல்லாத கவிதையை உற்பத்தி செய்கிறார்கள். அடிப்படையில் அவர்கள் ஜூலைக் குழுவின் பாணியை, குவோ சியோசுவானின் பாணியை, ஹீ ஜிங்ஷியின் பாணியைப் பின்பற்றுகிறார்கள். புகழ்பெற்ற புதிய நாட்டுப்புறக் கவிதையின் பாணியையும் பின்பற்றுகிறார்கள். மறுபக்கம், பல கவிஞர்கள் சோவியத் ஐக்கியத்தின் எழுத்தாளர்களுக்கான அமைப்பியல் பாணியிலிருந்து, குறிப்பாக அதன் சித்தாந்தரீதியில் சரியான, ஆனால் ஆழமில்லா சரக்கிலிருந்து விலகி நிற்க முயல்கிறார்கள். ஆனால் அங்கே மங்கலான எல்லை இல்லை என்று அர்த்தமில்லை. சிலர் தங்கள் அதிகாரப் பதவிகளை சமூகத் தொடர்புகளுக்காகப் பயன்படுத்துகிறார்கள்; கவிதை எழுதுவதற்கு அல்ல. ‘அமைப்பு’ என்பதை பெரிய அர்த்தத்தில் பார்த்தால் அதில் பல்கலைக் கழகங்கள், செய்தி ஊடகங்கள், பதிப்பகங்கள் எல்லாமும் அடங்கும். அங்கெல்லாம் பணிபுரிவது பிழைப்பதற்கான வழி. ‘அதிகாரப்பூர்வமான எழுத்தாளர்கள்’ எழுத்தாளர்கள் கழகத்தால், கூட்டமைப்பால் மற்றும் உள்ளூர் நிலையங்களால் முழுவதும் ஆதரிக்கப்படுகிறார்கள். அவர்களில் கூட சில நல்லகவிஞர்கள் இருக்கிறார்கள்; லான் லான், லெய் பிங்கியாங்க், ஷாங் ஷிஹாவோ போன்றவர்கள். ‘அதிகாரபூர்வமற்ற கவிஞர்கள்’ விளிம்புநிலையில் தள்ளப்பட்டு, நடைமுறை வளங்கள் இல்லாமல், அரசு விருதுகளை விட்டு தள்ளி நிற்கிறவர்கள். தங்களின் அதிகாரத் தொடர்புகள் எப்படியிருந்தாலும், அவர்கள் தங்களை சுதந்திரமான கவிஞர்கள் என்று சுயவரையறை செய்துகொள்கிறார்கள்.

சூ யூ (Zhu Yu 茱萸_) (ஷாங்காயில் இருக்கும் இளம்கவிஞர், விமர்சகர்):
கவிஞனின் எழுத்தை அவனது பதவியை வைத்து அளக்கக் கூடாது. அதிகாரப்பூர்வமானது, அதிகாரப்பூர்வமற்றது, அரசு சார்ந்தது சுதந்திரமானது என்றெல்லாம் பிரிவுகள் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால் கவிஞர்கள், கவிஞர்கள் அல்லாதவர்கள் என்ற பிரிவு இருக்கிறது. சில ’கவிஞர்கள்’ இலக்கியத் தரங்களால் அளக்கப்படக்கூட தகுதியற்றவர்கள். எழுத்தாளர்களுக்கென்று ஓர் அரசு அமைப்பு இருக்குமேயானால், அது இலக்கியத்திற்காக அல்ல. உண்மையில் அது இலக்கியத்திற்கு எதிரானது.

யாங்க் சியோபின் (Yang Xiaobin 杨小滨) (தைவானில் பணிபுரியும் கவிஞர், விமர்சகர்) :
பிரிவு என்பது இருக்கிறது. ஆனால் எல்லைக்கோடு தெளிவாக இல்லை. லூ சுன் இலக்கிய விருது என்பது அரசு கொடுப்பது; அதை வென்றவர்கள் பெரும்பாலோனார் சந்தேகத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். ஆனால் அது அரசாங்க எழுத்தாளர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது என்று நான் நினைக்கவில்லை.

லியூ வெயிட்டாங் (Liu Waitong 廖伟棠) (தென்சீனா கவிஞர், தற்போது ஹாங்க் ஹாங்கில் இருக்கிறார்) :
சீன எழுத்தாளர்கள் சங்கத்தில் சேர்ந்தவர்கள் அல்லது அந்தச் சங்கத்தில் அல்லது அரசு நிலையங்களில் முக்கிய பதவி வகித்திருப்பவர்கள் ‘அமைப்பின் உள்ளே’ இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்களில் சிலர், சென் சியன்ஃபா, யூ ஜியன், லெய் பிங்கியாங் மற்றும் ஷாங்க் ஷிஹாவோ போன்றவர்கள் நல்ல கவிஞர்கள். ‘அமைப்பிற்கு வெளியே’ இருப்பவர்கள் என்று கருதப்படுபவர்கள் அந்த அமைப்பால் ஆதரிக்கப்படாதவர்கள்; அவர்கள் எழுத்தின் ஜீவனம் நடத்துபவர்கள் அல்ல; பல்கலைக் கழகங்களில் போதிப்பவர்கள் அல்ல; அரசு நிறுவனங்களில் பதவிகள் வகிப்பவர்கள் அல்ல.

சென் ஜியாபிங் (Chen Jiaping 陈家坪) (பீஜிங்கில் வசிக்கும் ஷோங்குயிங்க் கவிஞர்) :
1970களில் வந்த பனிமூட்டக் கவிதை அரசாங்க விவாதத்திற்கு சவாலாக இருந்தது. பின்பு 1980களில் மூன்றாம் தலைமுறைக் கவிஞர்கள் எழுந்தனர். அப்போதிருந்து சுதந்திரமான பத்திரிகைகள் பிரசுரித்ததை எல்லாம் அரசுப்பத்திரிகைகளும் பிரசுரித்தன. ஒவ்வொரு பிரிவினரும் நல்ல கவிதையை விரும்பினார்கள். சீனா எழுத்தாளர்கள் சங்கத்தில் அல்லது கூட்டமைப்பில் இருப்பவர்களை, அவற்றில் இருந்து கொண்டு பிழைப்பு நடத்துபவர்களை, அரசாங்கப் பதிப்பகங்களில், அரசுப்பத்திரிகைகளில் அல்லது அரசுக்கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையங்களில் வேலை செய்பவர்களை ‘அதிகாரப்பூர்வக் கவிஞர்கள்’ என்று நான் வரையறுக்கிறேன். ‘அதிகாரப்பூர்வமில்லாத’ கவிஞர்கள் என்று, எந்த அரசு நிறுவனங்களிலும் இருந்து கொண்டு பிழைப்பு நடத்தாதவர்களைக் குறிப்பிடலாம். மிகவும் முக்கியமாக, ‘அதிகாரப்பூர்வக் கவிஞர்கள்’ என்பவர்கள் அரசுக் கொள்கைகளையும், அரசின் அழகியல் தரங்களையும் பின்பற்றுபவர்கள். ‘அதிகாரப்பூர்வமில்லாத’ கவிஞர்கள் தேசத்தின் பிரதானப்போக்கின் விழுமியங்களை எதிர்ப்பவர்கள். ஐ குவிங்க் மர்றும் ஷாங்க் கெஜியா போன்ற ஆரம்ப அதிகாரப்பூர்வக் கவிஞர்கள் இடதுசாரி சித்தாந்தங்களையும், புனைவு உலக யதார்த்தத்தையும் பின்பற்றினார்கள். பின்னால் வந்த அதிகாரப்பூர்வக் கவிஞர்கள் மிகவும் தகுதியற்றவர்கள். பெரும்பாலான வளங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தன. பெய் டாவோ காட்டியது போன்ற கலகக்குரல் இப்போது இல்லை. ஷு டிங் போன்ற மறைவிடத்துக் கவிஞர்கள் அரசின் அதிகாரப்பூர்வமான எழுத்தாளர்கள் ஆகிவிட்டார்கள்.

ஸென் ஷி (Sen Zi 森子 ) (ஹெனன் பிரதேசத்து கவிஞர், ஓவியர்) :
‘அதிகாரப்பூர்வமான’ அல்லது நிறுவனமயப்படுத்தப்பட்ட கவிஞர்களை வரையறுப்பது எளிதாகத் தோன்றும். ஆனால் உண்மையில் கடினமானது. தன்னை அதிகாரப்பூர்வக் கவிஞன் என்றோ அல்லது அதிகாரப்பூர்வக் கவிதையின் பிரதிநிதி என்றோ யாரும் ஒத்துக்கொள்வதில்லை. எழுத்தாளர் சங்கத்தில், கூட்டமைப்புகளில் அல்லது அவற்றின் பத்திரிகைகளில் பெரிய பதவியில் இருப்பவர்கள் அதிகாரப்பலம் கொண்டவர்களாக, பல வளங்களைக் கொண்டவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களை யாரும் நம்புவதில்லை. ஆனால் ‘அமைப்பு’ என்றால் சீனாவின் அமைப்பு என்று அர்த்தம். அந்த அர்த்தத்தில் பெரும்பாலான மக்கள் ‘அமைப்பில்’தான் வாழ்கிறார்கள். இருந்தாலும், ‘அமைப்பு’ எல்லோரையும் அதிகாரப்பூர்வக் கவிஞன் என்று அங்கீகரிக்காது. நம்மைப்பொறுத்த வரையில் கவிஞனை எடைபோடும் ஒரே வழி அவன் என்ன எழுதுகிறான்; எப்படி எழுதுகிறான் என்று பார்ப்பதுதான்.

கின் சான்ஷு (Qin Sanshu 秦三澍 ) (இளம்கவிஞர்; ஒப்பீட்டு இலக்கியத்தின் பட்டதாரி மாணவர்) :
அதிகாரப்பூர்வத்திற்கும், அதிகாரப்பூர்வமற்றதற்கும் இடையிலான எல்லை முற்றிலும் கலைந்துபோகவில்லை என்றாலும், அது மங்கலாகிக்கொண்டே இருக்கிறது. ‘அதிகாரப்பூர்வமான’ கவிஞர்களை நாம் வரையறுக்க வேண்டுமென்றால், எழுத்தாளர் சங்கங்களில், கூட்டமைப்புகளில், பிராந்திய எழுத்தாளர் கழகங்களில் வேலைக்கு இருப்பவர்களை அப்படிச் சொல்லலாம். செய்தி ஊடகங்களை, அரசுப் பதிப்பகங்களை சேர்ப்பதற்கு நான் தயங்குகிறேன். ‘அதிகாரப்பூர்வமான’ கவிஞர்களில் நற்கவிதை எழுதுபவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரையில், நல்லகவிஞர்கள் அதிகாரமற்ற பக்கத்தில்தான் இருக்கிறார்கள்.

ஷென்ங் சியவோகுவியாங் (Zheng Xiaoqiong 郑小琼) (கவிஞர், சிசுவனிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளி, குவாங்டாங்கில் எடிட்டராக இருப்பவர்) :
21-ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்தே, குறிப்பாக இணையதளத்தின் அசுரவளர்ச்சிக்குப்பின்னால், அரசுசார்ந்தவை, அரசுசாராமல் சுதந்திரமானவை என்பவற்றிற்கு இடையிலான எல்லைக்கோடு மங்கிவிட்டது அல்லது மறைந்துவிட்டது. அரசின் கட்டுப்பாட்டிலிருந்த மரபுரீதியிலான அச்சுப்பத்திரிகைகள் தங்கள் செல்வாக்கை இழந்து கொண்டிருக்கின்றன. பல அரசுப் பத்திரிகைகள் சுதந்திரமான பத்திரிகைகளை காட்சிக்கு வைக்கின்றன. ஆனாலும், இலக்கிய விருதுகள் வழங்கும்போது, அரசு தனது வழமையான நடைமுறையைத்தான் கடைப்பிடிக்கிறது. விருதுகளுக்கு கவிதையில் எந்தவழியிலும் செல்வாக்கு இல்லை. சீனா எழுத்தாளர்கள் சங்கம் என்பது சீனாவில் எழுத்துத் தொழிலுக்கான ஓர் அதிகார அமைப்பு; அதனால் வரிசைக்கிரமப்படியான நிர்வாகப் பதவிகளும், பெயர்களும் இருக்கின்றன. பல்கலைக்கழகங்களும் அப்படித்தான். நீங்கள் புகழ்கிறீர்களோ அல்லது எதிர்க்கிறீர்களோ இரண்டுமே ஓர் அமைப்பின் பிரிக்கமுடியாத அங்கம். நமக்குத் தேவை தனிமனிதச் சுதந்திரம் என்று நினைக்கிறேன்.

சன் வென்போ (Sun Wenbo 孙文波) (சிசுவன் கவிஞர்: ஷென்ஷென்னில் வசிப்பவர்):
ஒருவரின் சமூக அந்தஸ்தை அவரது எழுத்திலிருந்து பிரிப்பது என்பது அவநம்பிக்கைத் தன்மையானது. அரசுப் பின்புலம் கொண்ட பல எழுத்தாளர்கள் தங்களின் அந்தஸ்தை மறுத்துவிட்டு, தாங்கள் சுதந்திரமானவர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். சிந்தித்துப் பாருங்கள்: சிலபேர் அரசு எந்திரத்தில் சௌகரியமாக நீரில் மீனைப் போல ஒத்துப்போகிறார்கள் என்றால், அவர்களின் எழுத்துக்கள் அந்த எந்திரத்தில் உள்ள யாரையும் புண்படுத்தவில்லை அல்லது அவர்களைச் சந்தோசப்படுத்தின என்று அர்த்தம். குறைந்தபட்சம், அவர்கள் எந்திர விளையாட்டு விதிகளைப் பின்பற்றுகிறார்கள். இன்று ‘அதிகாரப்பூர்வமான’ கவிஞர்களைக் காணவேண்டுமென்றால், அவர்களின் சமூக அந்தஸ்தையும், அவர்கள் வகிக்கும் பதவிகளையும் பாருங்கள். சீனாவில், அதிகாரமான கவிதை அல்லது அதிகாரமற்ற கவிதை என்று எதுவுமில்லை. ஆனால் அதிகாரப்பூர்வமான கவிஞர்கள், அதிகாரமற்ற கவிஞர்கள் இருக்கிறார்கள். இன்றைய சீனாவின் நிஜம் இதுதான்.

ஜியான்ங் ஹாவோ (Jiang Hao 蒋浩) (சோன்ங் கவிஞர்; தற்போது தெற்குத்தீவில் வசிப்பவர்) :
சீனாவில் ‘அதிகாரப்பூர்வமானது’ அல்லது ‘அதிகாரப்பூர்வமற்றது’ என்பதற்கான தரமான வரையறைகள் இல்லை. இரண்டு வார்த்தைகளும் பரிவர்த்தனை செய்யக்கூடியவை. உதாரணமாக, யு ஜியன் போன்றவர்கள் ‘அதிமாரப்பூர்வமற்ற’ தன்மைக்காக புகழ்பெற்றவர்கள். ஆனால் புகழ்பெற்றபின், அவர்கள் எல்லாவிதமான அதிகாரப்பூர்வமான நன்மைகளைப் பெறவும், லூ சுன் இலக்கிய விருது, மக்கள் இலக்கிய விருது போன்ற எல்லாவிதமான அரசாங்க விருதுகளையும் பெறவும் தலைப்பட்டார்கள். மாறாக, அரசு நிறுவனங்களுக்கு வெளியே இருக்கும் சிலர் அரசாங்கத் தரத்தை நோக்கிச் சாய்கிறார்கள். ஏனென்றால் கவிதை எழுதுவது கடினமானது; அரசு நன்மைகள் அவர்களைக் கவர்ந்திழுக்கின்றன. அவர்களின் கவிதை ஒழுங்குபடுத்தப்படுகிறது’; ‘நிறுவனமயமாக்கப்படுகிறது’. நல்ல அரசுக்கவிஞன் என்று யாரையும் நான் பார்த்ததில்லை. மேலே சொன்னதுபோல, சில கவிஞர்கள் இரண்டு பக்கமும் இருப்பது போல தோன்றுகிறார்கள். என்னைப் பொறுத்தவரையில், அரசாங்கச் சார்பு இல்லாத, அதிகாரப்பூர்வமான மதிப்பீடு இல்லாத கவிஞர்கள்தான் சீனக்கவிதையைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள்.

ஜியாங் டாவோ (Jiang Tao 姜涛) (பீஜிங்க் பல்கலைக்கழகத்திலிருந்து வந்த கவிஞர்; விமர்சகர்) :
அதிகாரப்பூர்வமானதிற்கும், அதிகாரப்பூர்வமற்றதிற்கும் இடையிலான எல்லைக்கோடு நடப்புக்கால சீனக்கவிதையின் உள்ளடுக்கு அமைப்பாக இருந்தது. அது சமூக அந்தஸ்தோடு மட்டுமல்ல, வெவ்வேறு அழகியில் தரங்களோடும் சம்பந்தப்பட்டது. அதிகாரப்பூர்வமான பாசறையில், அரசியல் தன்னுணர்வும், நாடகப்பாணியும், சமூக விழுமியங்களை மேம்படுத்தும், எளிதாகப் புரியக்கூடிய கவிதைகள் பிரசித்தம். அதிகாரப்பூர்வமற்ற முன்னணியினரின் பக்கத்தில் ஒலிக்கும் பிரக்ஞை, அதிகாரவர்க்கம் ஏற்றுக்கொள்ளும் எல்லாவற்றையும் எதிர்க்கிறது. பொருளாதார வளர்ச்சிக்கு அப்புறம் இந்த எல்லைக்கோடு அழிந்துகொண்டிருக்கிறது. ‘அதிகாரவர்க்கம்’ என்பது அதே ‘அதிகாரவர்க்கம்’ அல்ல; முதல், அதிகாரம், நடுவண் மற்றும் உள்ளூர் அரசு, நிறைய வளங்களைக் கட்டுப்படுத்துபவர்கள், கவிதைச் செயல்வீரர்கள் ஆகியவற்றின் கலவை அது.

சாங் கே (Sang Ke 桑克) (ஹார்பின் கவிஞர்) :
முழு அரசியல் அமைப்பும் சீனாவின் ஆகப்பெரிய நிறுவனம். சந்தர்ப்பவாதிகள் தவிர எல்லாக் கவிஞர்களும் நிகழ்கால நிஜத்தைத் தாண்டிப் போக எத்தனிப்பவர்கள்; இந்தக் காரணத்திற்காக நான் எல்லோரையும் மதிக்கிறேன்.

ஏ சியாங்க் (A Xiang 阿翔 ) (அன்ஹூய் கவிஞர்) :
இந்த இணைய காலத்தில் அரசுக்கவிதைக்கும், சுதந்திரக் கவிதைக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. ஒருவர் செய்யக்கூடியது என்னவென்றால் தீமைக்குத் துணைபோகாமல் இருப்பது; கட்சிக்குக் கவிதை பாடாமல் இருப்பது.

யா ஷி (Ya Shi 哑石) (கணக்கியல் பேராசிரியர், சென்ங்டூ கவிஞர்) :
மேலோட்டமாகப் பார்த்தால், அரசுப் பத்திரிகைகளுக்கும், சுதந்திரமான பத்திரிக்கைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இல்லை. ஆனால் ஆழமாகப் பார்க்கும்போது ஓர் எல்லைக்கோடு இன்னும் இருக்கிறது. அந்த வித்தியாசம் வார்த்தைகளிலோ அல்லது லேபல்களிலோ இல்லை. ஆனால் ‘கவிதையியலில்’ இருக்கிறது. அதனால் ‘அதேமாதிரியான’ தன்மை என்பது ஒத்தயியல்பு வசீகரிக்கிறது என்று சொல்வது போல எப்போதுமே இருக்கிறது. இது எளிமையானது; தெளிவானது. சாராம்சத்தில் அடக்குமுறை அமைப்பு, அரசுக்கட்டுப்பாட்டில் இருக்கும், அரசுக்கு ஊழியம் செய்யும் இலக்கியத்தின் விழுமிய, அழகியல் தரங்களைத் தீர்மானிக்கிறது. அதனால், அந்த இலக்கிய நிறுவனத்திலிருந்து வரும் எதுவும், அரசியல் அமைப்புக்கு அல்லது அதன் விழுமியங்களுக்கு, ஊழியம் செய்யும் மறைமுக நோக்கம் இருக்கிறதோ இல்லையோ, ‘அதிகாரப்பூர்வமானது’ அல்லது ‘அரசுசார்ந்தது’ அல்லது ‘நிறுவனமயமானது’ என்று அழைக்கப்படலாம்; அது எவ்வளவு நேர்மையானதாக தன்னைக் காட்டிக்கொண்டாலும் சரி; அது வரிசெலுத்துவோரின் பணத்தை செலவழித்திருந்தாலும் சரி.

 

II. 1949-ல் நிறுவப்பட்ட ‘அதிகாரப்பூர்வமான’ ‘நிறுவனமயமான’ எழுத்தாளர்கள் சங்கம் இன்னும் இருக்கிறது. அதில் உள்ளே இருப்பவர்களும், வெளியே இருப்பவர்களும் தங்களுக்குப் பிடித்த கவிஞர்களை எப்படி தூக்கிவிடுகிறார்கள்? இரண்டு பாசறைகளுக்கும் இடையிலான அழகியல் வித்தியாசம் என்ன? எல்லைக்கோடு மறைந்து கொண்டிருந்தால், அது எப்போது நிகழ ஆரம்பித்தது? அதிகார வர்க்கத்தோடு ஒத்துப்போன, அதேசமயம் சுதந்திரமான எழுத்தில் இருக்கும் கவிஞர்கள் யாராவது இருக்கிறார்களா? 

ஜிங் வெண்டாங்: 1980களிலிருந்து மையநீரோடை அழகியலை புதிய பரீட்சார்த்த கவிதை அழித்துவிட்டது. பரீட்சார்த்த கவிதைகளிலிருந்து அரசுக்கவிஞர்கள் படிமங்களை, தொனிகளை, மூச்சுக்காற்றைக் கூட திருட கற்றுக்கொண்டனர். உச்சத்தில் இருக்கும் அரசுச்செய்தித்தாளான ‘மக்கள் தினசரி’ கூட பகிஷ்கரிக்கப்பட்ட
கவிஞர்களிடமிருந்து திருட முயற்சி செய்கிறது. அரசுப் பத்திரிகைகளில், சுதந்திரப் பத்திரிகைகளில் பிரசுரமாகும் கவிதைகளில் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. தந்திரமான அம்சம் என்னவென்றால், அவர்கள் உங்கள் கவிதையைப் பிரசுரிப்பார்கள்; புகழ்வார்கள்; ஆனால் தங்கள் ஆட்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்குவார்கள். அரசு விருதுகளும், பரிசுகளும் ஒரு பெரிய தொழில். ஆனால், தேசிய அரசின் பரிசான லூ சுன் இலக்கியப்பரிசு வேண்டுமென்றால், ஒருவர் தனிப்பட்ட முறையில் விண்ணப்பிக்க வேண்டும். மக்கள் இலக்கியம் என்ற பத்திரிகை அதே பெயரில் விருதுகள் வழங்குகின்றன, பிரசுரமான எழுத்தாளர்களுக்கு. விருது வழங்கும் முடிவுகள் சொந்த தனிப்பட்ட தொடர்புகளைச் சார்ந்தவை; உங்களின் அரசியல் கொள்கை நிலைப்பாட்டைச் சார்ந்தவை. இந்த விருதுகளில் ஒன்று கிடைத்தாலும் கூட, உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும்; நீங்கள் முன்னேறலாம். அரசு விருதுகளில் மிகவும் பரிகாசமானது என்பதால், சுதந்திர விருதுகளில் ஏற்படும் சின்னசின்ன தவறுகளை மக்கள் மன்னிக்க தயாராக இருக்கிறார்கள். மாறாக, ‘சுதந்திரமானவை’ என்பதற்கும், ‘அரசாங்கம்’ என்பதற்கும் இடையிலான வித்தியாசம் மேலும் மங்கலாகிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் கவிஞர்களும் மனிதர்கள்தான்; இரண்டு பக்கங்களிருந்தும் வருகின்ற நன்மைகளை அனுபவிக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

ஷாங்க் குவின்குவா: இப்போதெல்லாம் பல சுதந்திரமான பத்திரிகைகள் அதிகாரப்பூர்வமாகவும் அழகாகவும் வெளிவருகின்றன. ‘கவிதை கட்டமைப்பு,’ ‘கவிதையும் மக்களும்,’ ‘பெண்கள் கவிதை ஏடு’ போன்றவை.

லி ஹென்ங்: அதேமாதிரி ‘அமைப்பிற்கு’ உள்ளே இருக்கும் மனிதர்கள், வெளியே இருக்கும் மனிதர்கள் தங்கள் கவிஞர்களுக்கு விருதுகள் கொடுத்து, அவர்கள் படைப்புகளைப் பிரசுரித்து ஊடகச் செல்வாக்கும் கொடுக்கின்றனர். ‘கவிதை’ போன்ற அரசுப் பத்திரிகைகள் அடிமட்டத்திலிருந்து வரும் புதிய முகங்களை அறிமுகப்படுத்தி வளர்த்துவிட முயல்கின்றன.

ஷு யூ: உண்மையான நிஜமான கவிஞர்களைத் ‘தூக்கிவிட’ அவசியமில்லை. சிலர் அதிகார மையத்தில் இருக்கலாம்; ஆனால் உண்மையான கவிஞர்கள் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.

யாங் சியவோபின் : அரசுப் பத்திரிகைகளை நான் படிப்பதில்லை. அதனால் அவற்றைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. தரமான பத்திரிகைகள் பல சுதந்திரமானவை.

லியூ வெய்ட்டாங்: ‘நல்ல அரசுப் பத்திரிகைகள்’ ‘நல்ல அரசு விருதுகள் என்று எதுவுமில்லை. அரசு அமைப்பிற்கு வெளியே பல நல்ல பத்திரிக்கைகள், நல்ல விருதுகள் இருக்கின்றன. நல்ல கவிகள் சிலர் இரண்டிலும் இருக்கிறார்கள். ஏனென்றால் அரசுப்பத்திரிகைகளுக்குச் சில அலங்காரங்கள் வேண்டும்; இல்லை என்றால், அவை குப்பையாகிவிடும்.

சென் ஜியாபிங்க்: தான் நம்பும் கவிஞர்களின் படைப்பை அரசாங்கம் தன் பத்திரிகைகளில் வெளியிடுகிறது. அதிகாரமற்ற பாசறைகள் தங்கள் கவிஞர்களின் படைப்பை தங்கள் சுதந்திரப் பத்திரிக்கைகளிலும் இணையத்திலும் வெளியிடுகின்றன. சில கவிஞர்கள் இரண்டு பக்கத்திலும் வளர்கிறார்கள்: சி சூவன், யூ ஜியன், யாங் ஜியன், பாங்க் பெய், ஷென் வெய் ஆகியோர். அரசுப் பத்திரிகைகளில் பிரசுரமாவது ஆகப்பெரிய விஷயம். ஆனால் பலகவிஞர்கள் ஒத்துப்போவதில்லை. நடப்புச் சரக்குப்பொருளாதாரக் காலத்தில், கவிஞர்கள் மாற்றமான நிலையை அனுபவிக்கிறார்கள்; சுய மறுபரிசீலனை, நஷ்டம், லௌகீக வாழ்வியல் ஆகியவற்றில் ஈடுபடுகிறார்கள்.

சென் ஷி: நிறுவனமயமான கவிஞர்களுக்கும், பகிஷ்கரிக்கப்பட்ட கவிஞர்களுக்கும் இடையில் ஒரு நூலிழை வித்தியாசம்தான் எனக்குத் தெரிகிறது. A, B -யைப் பார்த்துப் பொறாமைப்படுகிறான்; B, A -யைப் பார்த்துப் பொறாமைப்படுகிறான். அரசுப் பத்திரிகைகளில் பிரசுரமாவது ஒருவனை அதிகாரப்பூர்வமான கவிஞனாக ஆக்கும் என்று நான் நினைக்கவில்லை. இரண்டு பாசறைகளிலும் போற்றப்படுபவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அதில் நான் கவனம் செலுத்துவதில்லை.

ஷென்ங் சியோவோகுவியாங்: அரசுத் தரப்பு நிலையங்கள் கவிஞர்களின் படைப்புகளை வெளியிட்டு அவர்களை அரசு நிகழ்ச்சிகளுக்கு அழைக்கின்றன. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பல சுதந்திரமான கவிஞர்களும் கூட அரசு நிகழ்வுகளுக்கு அழைக்கப் படுகிறார்கள் என்பதுதான். விருதுகலசிப் பற்றி பேசுவதானால், எதுவும் திருப்திகரமாக இல்லை. ஏனென்றால் அரசு தரும் விருதுகளுக்குப் பின்னால் அரசுக்கான ஒரு நோக்கம் இருக்கிறது. சுதந்திரமான விருதுகள் அதே வட்டத்தில் இருப்பவர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக, அரசு சாராத சுதந்திரமான கவிதை சீனாவின் கவிதையை வளர்த்தது. இந்த விஷயத்தில், சுதந்திரமான பத்திரிகைகள் ஒரு முக்கியப் பங்கை ஆற்றின, நிறைய சுதந்திரத்தோடு. அரசுப் பத்திரிகைகள் மிகவும் பத்தாம்பசலித்தனமாக இருக்கின்றன.

சன் வென்போ: பதிப்பகங்கள் அரசின் பொருளாதார அதிகாரத்தில் கட்டுப்படுகின்றன. கவிதையின் தன்மையை விட பணம் அதிகம் பேசுகிறது. அதனால், இன்றைய பதிப்பகங்கள் வாசகர்களைத் தவறாக வழிநடத்தக் கூடும். அரசு விருதோ, தனியார் விருதோ, எதுவுமே கவனத்திற்குரியதல்ல. முன்னாடி நான் வாங்கிய விருதுகள் கூட. அரசு விருதுகளில் பல ஊழல்கள் இருந்திருக்கின்றன. அரசுக்கு அப்பால், சில பணக்காரர்கள் விருதுகளை உருவாக்கி அதன்மூலம் கவிதை உலகத்திற்குள் அடியெடுத்து வைக்கிறார்கள். நல்ல மனம் கொண்ட புரவலர்களும் இருக்கிறார்கள். அவர்கள் விஷயம் தெரியாத ஆட்களை நம்பியிருக்கிறார்கள்.

ஜியாங் ஹாவோ: அரசு அமைப்பு என்பது முடிவில்லாத ஒரு கறுப்பு ஓட்டை.
அங்கிருந்து நல்ல இலக்கியம் வெளிவருவதாகத் தெரியவில்லை. ஏனென்றால்
இலக்கியத்தின் பணி அரசியல் நோக்கத்திற்குப் பயன்படுவது, அதாவது தங்களின்
நிறுவனத்திற்கு ஊழியம் செய்வது, கட்சிக்கு ஊழியம் செய்வது என்று அவர்கள்
நம்புகிறார்கள்.

ஜியாங் டாவோ: 90களிலிருந்து சில பரீட்சார்த்த கவிஞர்கள், பதிப்பகத்துறையில்
தொழில்முனைவோர்களாக மாறியிருக்கிறார்கள். அரசு உதவியுடன் இயங்கும் பெரிய
பதிப்பகத்தார்கள் அவர்கள். அவர்கள் அரசுக்கவிஞர்களை விடவும் நிறைய அதிகாரம்
கொண்டவர்கள். மாறாக, சுதந்திரமான கவிஞன் ஒருவன் எல்லோருக்கும் தெரிந்த ஒரு
வழமையான மொழியில் எழுதினால், அவன் பரிகாசத்திற்கு உள்ளாவான்.

சாங் கே: அரசிடம் பணம் இருக்கிறது; அளவில்லாத வளங்கள் இருக்கின்றன. அதனால்,
தான் மிகவும் மதிக்கும் விஷயத்தை அது வளர்த்துவிடும். இரண்டு பாசறைகள்
இருக்கின்றன என்று யாராவது வற்புறுத்திச் சொன்னால், லெய் பிங்கியாங்க்கும்,
யாங் ஜியானும் இரண்டு பக்கங்களிலிலும் அதிக கவனம் பெறுவார்கள். அவர்கள் நல்ல
கவிஞர்கள். பணத்திற்கு அதிக அதிகாரம் வந்ததிலிருந்து, இரண்டுக்குமிடையிலான
எல்லை மறைந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், நிறுவன அமைப்பு பணத்தைவிட அதிக
அதிகாரம் கொண்டது. அது அறிவுக்குப் புறம்பானதுதான்; ஆனால் அதுதான் நிஜம்.

ஏ சியாங்: அரசுப் பத்திரிகைகள் மரபுரீதியானவை; ஆனால் அவை சுதந்திரமான
பத்திரிகைகளைப் போல செயல்பட முயற்சி செய்கின்றன. அரசுக்கும், சுதந்திர
அமைப்புக்கும் இடையிலான போராட்டத்தால், அங்கே ஒருவிதமான தகவல் தொடர்பும்,
உறவாடலும் நிகழ்கின்றன. அதன் விளைவாக, இரண்டும் கலந்து கவிதையை
வளமாக்குகின்றன.

 

III. மேல்தட்டு வர்க்கம், அடித்தட்டு வர்க்கம் என்று சீனக் கவிதையில் ஒரு  பிரிவினை இருக்கிறதா? மாவோ சொல்லி, அதை ஜி ஜின்பிங்க் 2014-ல் மீண்டும்  சொல்லியது போல, சீனாவின் அதிகாரப் பூர்வமான இலக்கியக் கொள்கை இப்படி  வலியுறுத்தியது: “இலக்கியம் உழைக்கும் வர்க்கத்திற்கு ஊழியம் செய்யவேண்டும்”.  உழைக்கும் வர்க்கத்தைப் பற்றிய இலக்கியம், உழைக்கும் வர்க்கத்தினர் படைக்கும்  இலக்கியம் ஊடகங்களின் மையமாக இருந்தன. தொழிலாளிக் கவிஞர்கள், விவசாயிக்  கவிஞர்கள் மையநீரோட்ட இலக்கியத்தில் பிரபல்யம் ஆனார்கள்; அவர்கள்  சுதந்திரத்தையும், அடித்தட்டுத் தன்மையையும் பேணுவதற்கு முயற்சி செய்கிறார்களா?

ஜிங் வெண்டாங்: ‘அடித்தட்டு’ என்ற வார்த்தையை, தெற்கு சீனாவில் ‘டியன்யா’
பத்திரிகை ஆசிரியராக இருக்கும்போது லி ஷாவோஜன் கண்டுபிடித்தது. அதைப் பலர்
கையாண்டனர். அது உழைக்கும் வர்க்கத்தைக் குறிக்கிறது. கசப்பான வாழ்க்கையைப்
பற்றிய, அலைந்துதிரிதல் பற்றிய டூ ஃபூ எழுத்து மரபைக் குறிக்கிறது. உழைக்கும்
வர்க்கம் நிறுவன அமைப்பிற்குள் நுழைந்துவிட்டால் அவர்கள் வாழ்க்கைத்தரம்
மேம்படும். அதனால் அதை ஓர் இலட்சியமாக வைத்துக்கொள்வது அறிவுக்கு ஒப்பானது
என்பதுதான் சீனாவில் நிலவும் நிஜம். டூ ஃபூ, சக்கரவர்த்தி கொடுத்த பதவியில்
மூன்று மாதங்கள் இருந்தார். நடப்புக்கால எழுத்தாளர்கள் சின்ன பதவிகள்
கிடைத்தால் அவற்றை நீண்ட காலம் தக்கவைத்துக் கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்.

ஷு யூ: ‘மேல்தட்டு’ என்பது ஒரு பலமான, பரந்த மனது என்று நேரான பொருளைத்
தருவது. அது ஒரு சமூக வார்த்தை அல்ல. சமூகரீதியிலான அடிமட்டத்து
மக்களுக்குக்கூட மேல்தட்டு மனமிருக்கும்.

யாங் சியோவோபின்: நிறுவன அமைப்பிற்கு முற்றிலும் வெளியே இருப்பவர்கள் ‘மேல்தட்டு’ வர்க்கத்தினராக இருக்கமுடியாது. ஆனால் ஆத்மரீதியாக ‘மேல்தட்டு’ மனப்பான்மையுடன் அவர்கள் இருக்கமுடியும். அதனால், ‘மேல்தட்டு’ ‘அடித்தட்டு’ என்பதெல்லாம் ஒரேநேரத்தில் முரண்பாடானவை அல்ல. வூ நியாவானியாவொ, குவோ ஜின்னியூ ஆகியோர்களை எடுத்துக் கொள்ளுங்கள். குவோ ‘ஆலைத்தொழிலாளி’ என்ற அந்தஸ்தை நீண்டநாளைக்கு முன்பே இழந்துவிட்டார். ஆனால் அவர் இன்னும் அதிகார அமைப்பின் சமூக ஏணியில் மிகவும் கீழாகத்தான் இருக்கிறார். அதனால் உயர்பதவியில் இருப்பவர்கள் எழுதுவதைவிட உயர்ந்த கவிதைகளை அவர் எழுதுவதை அது தடுத்துவிடவில்லை.

லியூ வெயிட்டாங்: அடிமட்டக் கவிஞர்கள் எனக்குப் பிடிக்கும். ஆனால் அவர்களை
மற்ற சுதந்திரமான எழுத்தாளர்களிடமிருந்து பிரித்து வைக்க வேண்டும் என்று நான்
நினைக்கவில்லை. ஆனால் அவர்கள் ஒருமுறை அரசு அமைப்பில் நுழைந்து விட்டால்,
சுதந்திர மனப்பான்மையைப் பேணிக்காப்பது கடினம். யூ சியூஹுவா, மற்றும் ஷென்ங்
சியோவோகுவியாங் ஆகிய இருவர் மட்டுமே எனக்குத் தெரிந்த விதிவிலக்குகள்.

சென் ஜியாபிங்: மற்ற பக்கத்தைப் பற்றி அதிகார வர்க்கத்தின் கற்பனைதான் ஏழை, அடித்தட்டு என்பது. அதில் உண்மையில்லை. யாங் ஜியன், யூ சியூஹுவா ஆகியோர் ‘அடித்தட்டு’ என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் புகழ் பெறும்போது, ‘மேல்தட்டு’ ஆகிறார்கள். அதனால், இது மையநீரோடை முத்திரைகளின் தோல்வி.

சென் ஷி: இந்தச் சமூக வார்த்தைகளுக்குக் கவிதையில் எந்தத் தாக்கமும் இல்லை. யார் அடித்தட்டு வர்க்கத்தினர், யார் மேல்தட்டு வர்க்கத்தினர் என்று என்னால் சொல்லமுடியாது.

கின் சான்ஷு: உழைக்கும் வர்க்கக் கவிஞன், விவசாயி கவிஞன் என்பதெல்லாம், இந்தத்தேசம் உழைக்கும் வர்க்கத்து அஸ்திவாரங்களில் கட்டப்பட்டது என்பதை ஞாபகப்படுத்துகின்றன. உழைக்கும் வர்க்கத்து கவிஞர்களுக்கும், உழைக்கும் வர்க்கமல்லாத கவிஞர்களுக்கும் இடையிலான மிகைப்படுத்தப்பட்ட வித்தியாசம் உழைக்கும் வர்க்கத்துக் கவிஞர்களின் கவிதையை வித்தியாசமானதாகத் தோன்ற செய்கிறது. ஆனால் நாம் ஒரேமாதிரியான கவிமூலங்களைப் பகிர்ந்துகொள்கிறோம் என்று நான் நினைக்கிறேன். இருந்தாலும், முத்திரை குத்துதல் என்பது ஒரு கவிக்கும்பலை பிரபலமாக்குகிறது என்றால், அது ஒன்றும் மோசமான விஷயம் அல்ல. எனினும் நாம் கவனமாக இருக்கவேண்டும்.

ஷென்ங் சியாவொகுவியான்ங்: மேல்தட்டுக் கவிதைக்கும், அடித்தட்டுக் கவிதைக்கும் இடையில் ஒரு பிரிவு வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. உழைக்கும் வர்க்கமும், உழைக்கும் வர்க்கக் கவிதையும் இருவேறு விஷயங்கள். உழைக்கும் வர்க்கம் சமூகத் தொழிலாளத் தேசங்களுக்கு ஒரு கருப்பொருளாக இருந்தது. அது ஏன்
அழுத்தமாக வலியுறுத்தப்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை. சீனாவில் வீட்டுப்பதிவுத் திட்டத்தினால், நாட்டுப்புறங்களிலிருந்து புலம் பெயர்ந்தவர்களுக்கு, நகரங்களில் வாழும் உரிமை கிடையாது. அதனால் அவர்களுக்கு வேலைநேரம், கூலிகள், ஆரோக்கிய சலுகைகள் ஆகியவற்றுக்கான உத்தரவாதம் அவர்களுக்கு இல்லை. குரல் எழுப்பவும் அவர்களுக்கு அதிகாரம் இல்லை. விவசாயிக் கவிஞன், தொழிலாளிக் கவிஞன், அடிவர்க்கக் கவிஞன், அடித்தட்டுக்கவிஞன் என்ற முத்திரைகள் எல்லாம் மரியாதையில்லாமல் அறிவுஜீவிகள் கொடுத்தவை. மையநீரோடை நிறுவன அமைப்பு புலம்பெயர்ந்த தொழிலாளிகளை ஏற்றுக்கொண்டதில்லை. அவர்களில் பெரும்பாலோனோர் சமூகத்தின் அடிப்பகுதியில் இருக்கிறார்கள்.

சன் வென்போ: ‘அடித்தட்டு கவிதை’ என்பது அரசின் சித்தாந்தத்தை மனதில் வைத்துக்கொண்டு ஒருசில மக்கள் கண்டுபிடித்த வார்த்தைகளில் ஒன்று. இந்தத் தேசத்தில் இதுவொரு பிரச்சாரம். அரசு அதிகாரத்தின் சட்டப்பூர்வமான தன்மையைக் காட்டுவதற்காக அடித்தட்டு ஜனங்களை வளர்த்தெடுக்கும் பிரச்சாரம். அது மக்களை
வர்க்கங்களாகப் பிரிக்கிறது; சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் மறுதலிக்கிறது. ஆளும் வர்க்கத்தின் அதிகாரத்தைக் காட்டுகிறது.

ஜியாங் ஹாவோ: அதிகார அமைப்புக்கு வெளியே, சமூகத்தின் அடிப்பகுதியில் நல்ல
கவிஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் அதேவேளை பணக்காரர்களாக இருக்கும் நல்ல
கவிஞர்களும் இருக்கிறார்கள். சமூகத்தொழிலாளத் தேசத்தின் அரசு
தொழிலாளர்களையும், விவசாயிகளையும் வளர்த்தெடுக்க விரும்புகிறது. அரசால்
ஆதரிக்கப்பட்டபின்பு, தொழிலாளர்களும், விவசாயிகளும் ஒரு நல்ல வாழ்க்கையைப்
பெறுகிறார்கள். ஆனால் எழுத்தில் வலிமையை இழக்கிறார்கள். அரசால்
ஆதரிக்கப்பட்டவுடன், அவர்கள் பரீட்சார்த்த கவிஞர்கள் போல பாவனை செய்ய
ஆரம்பித்தால், தங்களால் நல்லதாக எதையும் எழுதமுடியாது என்று அவர்கள்
உணர்ந்துகொண்டு, மற்ற தொழிலாளர்கள்மீதும், விவசாயிகள் மீதும் அக்கறை
உள்ளவர்கள் போல நடிக்கிறார்கள்.

ஜியாங் டாவோ: உழைக்கும் வர்க்கத்தின் குரலாக இருப்பது சீன இலக்கியத்தின் மரபு. ஆலைகளில் அல்லது நாட்டுப்புறங்களில் இருக்கும் பல கவிஞர்கள் நடப்புக்கால சீனக் கவிதையின் அங்கமாக இருக்கிறார்கள். மேல்தட்டு அறிவுஜீவிகள் அதிகாரமற்றவர்கள். புதிய மேல்தட்டினர் அதிகாரமும், பணமும் படைத்தவர்கள்.

சாங் கே: அடித்தட்டுக் கவிஞன் ராஜசபைக் கவிஞனாக இருக்கமுடியும். (நான் உதாரணங்கள் தரமுடியாது; என் கைகள் அழுக்காகிவிடும்). ஓர் அரசு அதிகாரி அல்லது அலுவலர் பரீட்சார்த்தக் கவிஞாக இருக்க முடியும் (ஹவ் மா போன்றவர்கள்).

ஏ சியாங்: ‘அடித்தட்டு’ முத்திரை இல்லாமல், புலம்பெயர்ந்த தொழிலாளி ஒரு நல்ல கவிஞனாக இருக்கமுடியும். நின்ங்சியா விவசாயி ஷாங்க் லியனை நான் குறிப்பிடவேண்டும். அவர் 1990களிலிருந்து அமைதியாகக் கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறார். ஆனால் அவருக்குரிய கவனம் இன்னும் அவர்மீது விழவில்லை.

யா ஷி: கவிஞர்களை அவர்களின் தொழில் அடிப்படையில் கும்பல்படுத்துவது அர்த்தமற்றது.

 

IV. சீன அரசாங்கத்தால் ஒடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வமான கவிஞர்கள் உண்டு.  சுதந்திரக் கவிஞர்களால் கௌரவிக்கப்பட்ட முன்னாள் அரசுக்கவிஞர்கள் யாராவது உண்டா? 1949-க்கும், 1976-க்கும் இடையில் எழுதப்பட்ட நல்ல கவிதை ஏதாவது உண்டா? 1970களிலிருந்து எழுதப்பட்ட மறைவிடத்துக் கவிதை 1980களில் மையநீரோட்டமாக மாறியபோது, நல்ல கவிஞர்கள் யாராவது அந்தக் காலகட்டத்தில் மறைக்கப்பட்டிருக்கிறார்களா அல்லது குறைவாக மதிப்பிடப்பட்டிருக்கிறார்களா?

ஷூ யூ: சாங்க் யாவோ ஒரு நல்ல உதாரணம். அவரது ஆரம்பகால எழுத்துக்களால் அரசு அதிகாரத்தின் ‘சுவையை’ அவர் அனுபவித்தார். அந்தக் கொடுமையிலிருந்து அவர் தப்பித்தபின்பு, அவரது பிற்கால எழுத்துக்கள் சுதந்திரமான கவிஞர்களின் மரியாதையைப் பெற்றது. 1949-1976 காலகட்டத்தில், நவீன சீனக்கவிதையின் இதயத்துடிப்பு தைவானில் துடித்தது.

யாங் சியோவோபின்: 1949-1976 காலகட்டத்தில் இருந்த முன்னாள் அரசுக்கவிஞர்கள் எந்தச் சொத்தையும் விட்டுச்செல்லவில்லை. 1970களின் கவிஞர்கள் மூடிமறைக்கப்பட்டனர்.ஜென் ஷி அவர்களில் முதல் ஆள். அவர் நிறைய எழுதவில்லை. ஆனால் நிச்சயமாக 1970களின் மறைவிடத்துக் கவிதையின் முன்னோடியும், அடையாளமும்
அவர்தான். ஒப்பிடுகையில், குவா லுஷென்ங் (ST) ஒரு மறைவிடத்துக் கவிஞராக இருந்தாலும், அவர் ஹீ ஜிங்க்ஷியை (1960-ல் அரசின் கவிஞர்) எதிரொலித்தார்.

சென் ஜியாபிங்: ஐ குவிங்கும், ஹீ குவிஃபான்ங்கும் முன்னாள் அதிகாரப்பூர்வக்
கவிஞர்கள்; அவர்கள் நிறுவனத்தால் கொடுமைப் படுத்தப்பட்டதும் பிரபல்யம்
அடைந்தார்கள். அவர்கள் பெய் டாவோ மற்றும் ஷி ஜியால் ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள்.
தற்போது லியாவோ யிவு என்ற கவிஞரை அரசு தடுக்கப்பார்க்கிறது. கடந்த வருடம்,
நான் லூ டாங்கைச் சந்தித்தேன். அவர் பெய் டாவோ, மற்றும் ஷு டிங்க் ஆகியோருடன்
சேர்ந்து தன் படைப்பைப் பிரசுரித்தார். ஆனால் இற்றைய காலத்தில் அவரைப்பற்றி
யாருக்கும் ஒன்றும் தெரியாது. அவர் மறைந்து கொண்டிருக்கிறார். ஒருநாள் அவர்
கவிதை மறுமதிப்பீடு செய்யப்படும் என்று நான் நினைக்கிறேன்.

கின் சான்ஷு: 1949-1976 காலகட்டத்தின் இலக்கியச்சொத்து: சான்ங் யாவோ, பெங்க் யான்ஜியாவோ, ஷென்ங் மின், மற்றும் மு டான். ஷூ இங்க்டான், மற்றும் ஹுய் வா ஆகியோரை மறுகண்டுபிடிப்பு செய்வதில் எனக்கு அக்கறை உண்டு. ஷு இங்க்டான் 1970களில் பல நல்ல கவிதைகள் எழுதினார். ஹூய் வா அற்புதமான கவிதைகள் எழுதினார். அவர்கள் இப்போது கவனப்படுத்தப்படுகிறார்கள்.

சன் வென்போ: ஐ குவிங்க், மு டான் மற்றும் நியூ ஹான் ஆகியோர் கொடுமைப்படுத்தப் பட்டார்கள். ஆனால் பிற்காலத்தில் புனர்வாழ்வு பெற்றார்கள். அவர்கள் சீனக்கவிதைக்கு பங்களிப்பு நிகழ்த்தியிருக்கிறார்கள். மு டான், நியூ
ஹான் ஆகியோரின் கவிதை என்னைக் கவர்ந்தது. 1970களின் கவிஞர்களைப் பற்றிப் பேசினால், ஃபான்ங் ஹான், யூ ஷாங்க் மற்றும் டியன் சியோவோகுவிங் ஆகியோர் மறக்கப்பட்டுவிட்டார்கள்.

ஜியாங் டாவோ: 1949-1976 காலகட்டத்தின் கவிதைச் சாதனை மிகவும் குறுகியது. பியன் ஷிலின் மற்றும் மு டான் போன்ற சில முக்கியமான கவிஞர்கள் 1970-களிலிருந்து தங்கள் பரிசோதனையைத் தொடர்ந்து செய்தார்கள். சாங் யாவோவை நடப்புக்காலக் கவிதையின் இன்னொரு மூலமாகப் பார்க்கலாம். நியூ ஹான் மற்றும் ஷெங் ஷூவோ ஆகியோர் தங்கள் காலத்தில் சுதந்திரமான வேகத்தோடு இருந்தார்கள். மைய நீரோட்டத்திற்கு அவர்கள் எழுதவில்லை.

யா ஷி: பல முன்னாள் அரசாங்கக் கவிஞர்கள் அரசாங்கத்தால் கொடுமைப்படுத்தப்பட்டனர். ஆனால் அவர்களை ஒட்டுமொத்தமாக சுதந்திரக் கவிஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

V. அரசுசார்ந்தோ அல்லது மறைவிடம் சார்ந்தோ இல்லாத கவிதை புதிய பரீட்சார்த்தக் கவிதையின் மையமாக மாறிவிட்டதா? அல்லது பல மையங்களாகவா? இந்தப் புதிய மையத்தின் (அல்லது மையங்களின்) புறவெளியில் இருக்கும் கவிஞர்கள் எப்படி சாதனை நிகழ்த்தினார்கள்? மையத்திற்கு எதிரான ஏதாவது கவித்துவ இயல் உண்டா? எந்த மையத்திலும் முற்றிலும் இல்லாத கவிஞர்கள் உண்டா? ‘பிராந்திய கவிதை’ சமீபகாலங்களில் வளர்க்கப்படுகிறது; ஆனால் அதில் நிஜமாகவே பூகோளரீதியிலான, மொழியியல் ரீதியிலான ‘உள்ளூர்’ அம்சங்கள் இருக்கின்றனவா? சீனாவிற்கு வெளியே பெரியதாக ஏதாவது இருக்கிறதா?

யாங் சியோபின்: 1980களில் பல கவிதைச் சித்தாந்தங்கள் இருந்தன. ‘நாட்’ (Not),
‘மாக்கோ மென்’ போன்ற பல கவிதை இயக்கங்கள் ஒரு ‘மையத்தை’ உருவாக்கின. ஆனால்
கவிதை மையங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன. 1990களிலிருந்து தனித்துவ எழுத்து
பிரதானமான அம்சமாக மாறிவிட்டது. சில கவிஞர்களைத் தவிர, பிராந்திய அல்லது
‘உள்ளூர்’ அம்சங்களைக் கவிஞர்களிடம் காண்பது அரிது. ஹாங்ஷவ்விலிருந்து பான்
வெய், ஷாங்கையிலிருந்து சென் டாங்டாங் ஆகியோர் அந்தச் சில கவிகள். எல்லா
சீனக்கவிஞர்களும் ஒரே சமூக மாற்றங்களையும், ஒரே கலாச்சாரப் பின்னணியையும்
எதிர்கொண்டிருப்பதால், பிராந்திய வித்தியாசங்களைப் பார்ப்பது கடினம். தைவான்
கவிஞர்கள் புதிய கவிதை வளர்ச்சிக்கு பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார்கள்: சென்
லி, லிங் யூ, சியா யூ, சென் கெஹுவா, லின் யாவோட், டாங் யுவான், யே மிமி
போன்றவர்கள்.

ஷு யூ: என் கருத்துப்படி, அரசு சார்ந்தோ அல்லது சுதந்திரமாகவோ இல்லாத
கவிஞர்கள் கவிதை மையமாக ஆகிவிட்டார்கள். இருந்தாலும், ‘அதிகாரப்பூர்வமானது’
என்பதற்கும், ‘அதிகாரப்பூர்வமற்றது’ என்பதற்கும் இடையில் எந்த
வித்தியாசத்தையும் நான் பார்ப்பதில்லை. நான் வெளியுலகத்தைச் சார்ந்திருந்தால்,
எப்படி உள்ளே நுழைவது என்பது பற்றி நான் யோசிக்க மாட்டேன். என்னை நான் கடந்து
போவது எப்படி என்பதைப் பற்றி மட்டுந்தான் நான் யோசிப்பேன். ‘பிராந்திய
கவிதை’யைப் பற்றிப் பேசினால், ‘அது சிலரின் தந்திரம்’ என்று நான் நினைக்கிறேன்.

சென் ஜியாபிங்: அரசுசாராத அல்லது மறைவிடம் சாராத கவிதை பெரிய சக்தியாகி
இருக்கிறது என்பது உண்மை. ஆனால் ‘பிராந்தியம்’ என்பது நடுவண் அரசுச்
சித்தாந்தத்தின் தர்க்கம்.சென் ஷி: இணையதளக் காலத்தில், எல்லா முன்னாள்
வட்டங்களும், மையங்களும் கலைந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலான கவிஞர்கள்
தங்களை ‘விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டவர்கள்’ என்று சொல்லிக்கொள்ள
ஆசைப்படுகிறார்கள். அது அவர்களின் மனதில் இருக்கும் ‘மையம்’ பற்றிய உணர்வைப்
பிரதிபலிக்கிறது. ‘பிராந்தியக் கவிதை’ என்றழைக்கப்படுவது ஒரு பிராந்தியத்திலிருந்து வருவதுதான்; அது வெறும் முத்திரையன்றி வேறொன்றுமில்லை. விசேசமான உள்ளூர் குணாதிசயங்கள் என்று ஏதுமில்லை. நான் சீனாவையே பிராந்தியம் என்றுதான் கருதுவேன். அது தனக்குரியதான தட்பவெப்ப நிலை, வட்டார வழக்கு, தொனி,
பாணிகள் என்று நிறைய வைத்திருக்கிறது.

குய்ன் சான்ஷூ: ‘மறைவிடத்துக் கவிதை’ என்பது, கலாச்சாரப் புரட்சியின் இலக்கியக் கொடுங்கோன்மைக்கு எதிராக 1970 முதல் எழுதப்பட்ட கவிதையைப் பிரதிநிதிப்படுத்தும் ஒரு சொல். 1976-ல் முடிந்த கலாச்சாரப் புரட்சியின்
முடிவிலிருந்து, இந்த எதிர்ப்பு முடிவுக்கு வந்தது. இன்றைக்கு இருப்பது அதிகார மையமும், மையத்திற்கு வெளியே இருக்கும் பல கவிதைக் கூட்டங்களும் சேர்ந்திருக்கும் நிலைதான்.

ஷென்ங் சியோவோகுவிங்: 1980களில், பீஜிங் மற்றும் சிசுவன் போன்ற கவிதை மையங்கள் இருந்தன. புதிய நூற்றாண்டில், நிறைய மையங்கள் இருப்பது போல தோன்றுகின்றன. ஆனால் உண்மையில் ஒன்றுமில்லை. ஒரே ஒரு கவிஞனும் அவனைச் சுற்றி நிற்கும் தொண்டர்களும்தான். இந்த இணையதளக் காலத்தில் ஒவ்வோருவரும் ஒரே நடைமேடையில்தான் நிற்கிறார்கள்.

ஜியாங் ஹாவோ: மையம் சிதறுதல் என்பதுதான் இன்றைய போக்கு. இறுதியில் ஒவ்வொரு பிராந்தியத்திலும் நிறைய பிராந்தியக் கவிதை வளரும்.

சாங் கே: ‘பிராந்தியக் கவிதை’யில் குறைந்தபட்சம் உள்ளூர்க் கருப்பொருட்களும், உள்ளூர்க் கலாச்சாரங்களும் இருக்கின்றன.

ஏ ஷியாங்: அதிகாரப்பூர்வமாகவோ அல்லது அதிகாரப்பூர்வமற்றதாகவோ, கவிஞர்கள் உருவாக்கிய எந்தப் புதிய கவிதை மையமும் ஒருபோதும் இருந்ததில்லை.

யா ஷி: எந்தக் கவிஞனும் கவிதையைவிட்டு விலகியதில்லை. ஆனால் சிலர் மையங்களை விட்டு அல்லது வட்டங்களை விட்டு விலகுவதுண்டு.

 

VI. ஹான் சீன இலக்கியத்தின் ஆதிக்கத்தால், சிறுபான்மை இனத்து எழுத்தாளர்கள்  ஒதுக்கப்படுகிறார்களா? அல்லது கொண்டாடப்படுகிறார்களா? அவர்கள் எப்படி தங்கள் சொந்தமொழியை, கலாச்சாரங்களை தங்கள் எழுத்தில் பேணிக்காக்கிறார்கள்? சீனாவில், சீன மொழியில் அல்லது தங்கள் சொந்த மொழிகளில் சிறப்பாக எழுதும், பிரதானமான, ஹான் அல்லாத தேசியஇனக் கவிஞர்களின் பெயர்களைச் சொல்லுங்கள்.

ஜின் வெண்டாங்: சீனாவில் 56 தேசிய இனங்கள் இருக்கின்றன. சொந்தமொழியில்
எழுதும் எந்தக் கவிஞனையும் எனக்குத் தெரியாது. சிலர் தங்கள் சொந்த மொழிகளில்
(லுவோ குவிங்சன் போன்ற மொழிகளில்) எழுதிக் கொண்டிருக்கலாம். ஆனால் அவர்களின் படைப்பை என்னால் புரிந்து கொள்ள முடியாது. அதனால் அதை மதிப்பிடவும் முடியாது.
சிறுபான்மை இனத்து எழுத்தாளர்களுக்கென்று விசேஷ விருதுகள் இருக்கின்றன. அரசு
அவர்களை ஆழமாக எடுத்துக்கொள்கிறதா அல்லது லேசாக எடுத்துக்கொள்கிறதா என்று
எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. ஹா ஜின் அமெரிக்காவில் சிறுபான்மை
எழுத்தாளர்களுக்கான விருதைப் பெற்றாரா என்று நான் நினைக்கவில்லை. ஜிடி
மஜியாவின் கவிதையை அறிந்துகொள்ள நேர்ந்தது. எனக்கு அது மிகவும்
பிடித்திருக்கிறது. ஆனால் வேடிக்கை என்னவென்றால், சீனமொழியில் மடத்தனமான
உணர்வு போல ஒலிக்கும் விஷயங்கள், இனக்கவிஞர்கள் எழுதும்போது இதயத்தைத்
தொடுகின்றன. ஒவ்வொரு கலாச்சாரத்திலும் ஏதோவொரு புதிர்த்தன்மை இருக்கிறது. இன எழுத்தாளர்கள் சீனமொழியில் எழுதி அதை வளப்படுத்தியிருக்கிறார்கள்.

ஷாங்க் குவின்குவா: சிறுபான்மை இனத்து எழுத்தாளர்கள் அரசின் ஆதரவைப்
பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பொது வாசகர்கள் அவர்களின் படைப்பின் மீது
கவனம் செலுத்துவதில்லை. இதுவொரு வினோதமான முரண்நகை. அவர்கள் சீனமொழியில்
எழுதுகிறார்கள்: ந்ஹியூ ஹான், பேயின் போலுவோ (மங்கோலியா); ஜிடி மஜியா, ஃபா
ஷிங், அசூவோ லேயி, லு யுவான், அகு வுவு (யி); நா யே (மன்சூ); ஹீ சியோவொஷு
(மியாவோ); லைமெய் பிங்குவா மற்றும் ஷாக்சின் கைரங் (திபெத்).

யாங் சியாவோபின்: சிறுபான்மை எழுத்தாளர்கள்மீதான அரசின் கவனம்
‘உணர்ச்சிப்பூர்வம்’ ‘தடைசெய்யப்படுவது’ ஆகியவற்றைக் குறிப்பதாக இருக்கிறது.
அதைப் பற்றிப் பேசுவது ஆபத்தானது. எனக்குச் சில சிறுபான்மை கவிஞர்களைத்
தெரியும்; ஹீ சியாவொசூ (மியாவோ), ஜிமு லாங்கே (யி); ஆனால் அவர்கள் எல்லோரும்
சீனமொழியில் எழுதுகிறார்கள்.

ஷூ யூ: மைய நீரோட்ட ஊடகங்கள் கவனப்படுத்தும் ‘சிறுபான்மை இலக்கியம்’ பெரும்பாலும் பேசப்படுவதற்குத் தகுதியற்றது. அதில் சமூக மதிப்பு இருக்கிறது. ஆனால் கவித்துவ மதிப்பு இல்லை. நான் ஒருவேளை பாரபட்சமாக இருக்கலாம். தங்கள் சொந்த மொழிகளில் எழுதும் கவிஞர்கள் என்று வரும்போது, என் கருத்து இதுதான்: அகு வுவு மற்றும் ஒருசிலர் கவனத்திற்குத் தகுதியானவர்கள்.

லியூ வெயிட்டாங்: மா யான் ஓர் அற்புதமான இஸ்லாம் கவிஞர். ஹான் சீன மொழியில் எழுதுகிறார். திபேத் மொழியில் எழுதும் பல நல்ல திபேத் கவிஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் மொழிபெயர்ப்புகள் இல்லை. ஒரு சிலர் அகதிகளாக மறைந்து வாழ்கிறார்கள்.

சென் ஷி: நா யே, ஹீ சியாவோஷு, ஜிமு லாங்கே ஆகியோர்களை மட்டுந்தான் எனக்குத் தெரியும். ஆனால் அவர்கள் சீனமொழியில் எழுதுகிறார்கள்.

குய்ன் சான்ஷூ: உள்வயப்படுத்துதல் விவாதத்திற்கு அப்பாலான ஒரு நிஜம். ஆனால் இன அந்தஸ்து ஓர் இணையான கலாச்சார வம்சத்தைக் கொண்டிருக்குமா என்று சொல்வது கடினம். மொழிரீதியிலான, கலாச்சார ரீதியிலான மரபுகள், அவர்களின் மதநம்பிக்கைகளோடு, அவர்களின் எழுத்துகளில் புதிர்த்தன்மையுடன் பிரதிபலிக்கின்றன.

சன் வென்போ: இந்தத் தேசத்தின் ஆட்சிமொழியாக சீனமொழி எல்லா மொழிகளையும் ஆக்ரமித்துவிட்டது. சொந்த மொழியில் எழுதுவதை விட்டுவிட்ட மக்கள்மீது எனக்கு அனுதாபம் உண்டு. சீன மொழியில் எழுதும் சில சிறுபான்மைக் கவிஞர்களைச் சொல்கிறேன்: டை ஈ, ஹீ சியோவாஷூ (மியாவோ தேசிய இனம்); ஜிமு லாங்கே (யி தேசிய இனம்).

சாங் கே: சிறுபான்மைக் கவிஞர்கள் எப்படி தங்கள் மொழியியல், கலாச்சார அம்சங்களை எழுத்தில் கொண்டுவர முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. உதாரணமாக, வு யூமிங் என்பவர் டௌர் தேசிய இனத்தவர்; யாருக்கும் தெரியாது. ஏனென்றால் அவர் சீனமொழியில் எழுதுகிறார்.

யா ஷி: ஆம். சீனமொழியில் எழுதும் மற்ற தேசிய இனத்தவர்களில் சிறந்த கவிஞர்கள் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, சன் கியூயான் (முஸ்லீம்).

 

VII. தற்போதைய சீனாவில் தணிக்கை இருக்கிறதா? எது தணிக்கை செய்யப்படுகிறது? தணிக்கை முறையை, அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் எழுத்துத்துறை நிலைமையை கவிஞர்கள் எப்படி சமாளிக்கிறார்கள்? தணிக்கை முறை கவிஞர்களை, தணிக்கையை விட்டு தப்பிப்பதற்காக, மேலும் படைப்பாற்றல் உள்ளவர்களாக மாற்றிவிட்டதா?

ஜிங் வெண்டாங்: எங்கள் அரசியல் சட்டம் பேச்சுச் சுதந்திரத்தை, பிரசுர உரிமையைப் பேசுகிறது என்றாலும், மறைமுகமாக தணிக்கை நடக்கிறது. இதில் மோசமான விஷயம், பதிப்பகங்களே சுயதணிக்கை செய்து கொள்கின்றன. பாதுகாப்பில்லாத புத்தகங்களை வெளியிடாமல் அமுக்கிவிட்டு அவை பாதுகாப்பாக இருந்து கொள்கின்றன. சீனாவில் நீங்கள் ஒர் எழுத்தாளர் என்றால், பிரசுரிக்காமல் இருப்பதற்கு நீங்கள் தயாராக இருக்கவேண்டும். நீங்கள் நினைத்ததை எழுதலாம்; ஆனால் பிரசுரம் அல்லது தணிக்கைச் சாத்தியங்களைப் பற்றி நீங்கள் யோசிக்கக் கூடாது. நீங்கள் எழுதியதெல்லாம் பிரசுரமானால் உங்கள் எழுத்தின்மீது எனக்கு சந்தேகம் வந்துவிடும். பிரசுரம் செய்யமுடியாததற்கு நீங்கள் பெருமைப் பட்டுக்கொள்ள வேண்டும்.

ஷாங் க்யூங்குவா: தணிக்கை, கவிதைக்குப் பிரச்சினை அல்ல. ஆனால் கவிதையை அளப்பதற்கு தரமான விதிகள் இல்லை. சில புத்தகங்கள் தணிக்கைச் செய்யப்படுகின்றன என்பது ஒரு வணிக உத்தி.

லி ஹெங்: ஆமாம். சீனாவில் தணிக்கை இருக்கிறது. டாங் பையூவின் ‘உலகத்தின் வலதுபக்கம்’ என்ற தொகுதியிலிருந்து அரசியல் காரணங்களுக்காக 20 கவிதைகள் வெட்டியெறியப்பட்டன. எனினும், தணிக்கை என்பது அரசு வெளியீடுகளை நோக்கிய ஒன்று. சீனாவில் சுதந்திரமான வெளியீடுகள் இருக்கின்றன; மேலும் இணையம் இருக்கிறது. அதில் கவிதைகள் வெளியிடப்பட்டு சுற்றில் இருக்கின்றன. மோசமான விஷயம் என்னவென்றால், அமைப்பின் அழுத்தத்தால், சுயதணிக்கை முறை தனிப்பட்ட வகையில் இருப்பதுதான்.

யாங் சியோபின்: தணிக்கை இருக்கிறது. ஆனால் அமைப்பியல் ரீதியாக செய்யப்படுவதில்லை. வழக்கமாக மக்களே சுயதணிக்கை செய்து கொள்கிறார்கள். அரசியல் தொல்லை தரும் படைப்புகளை ஆசிரியர்களே தணிக்கை செய்துவிடுகின்றனர். தணிக்கை கவிஞர்களை இன்னும் அதிகமான படைப்பாற்றல் உள்ளவர்களாக மாற்றுகிறது என்று நான் நினைக்கவில்லை. சுற்றிவளைத்துப் பேசும் பேச்சுக்கலை உத்தி ஒரு படைப்பை மேலும் பயன்பாட்டுத் தன்மைத்தாக ஆக்குகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், தணிக்கையால் நல்ல கவிஞர்கள் அதிகமான படைப்பாற்றல் கொண்டவர்கள் ஆவதில்லை.

ஷு யூ: சொல்லத் தேவையில்லை. தணிக்கை இருக்கிறது. ஆனால் உணமையான கவிஞர்கள் அதைப்பற்றி யோசிக்கக் கூடாது. மக்கள் அதைபற்றி யோசித்து சுயதணிக்கையில் ஈடுபடுகிறார்கள் என்பது பயங்கரமான விஷயம். தணிக்கை நல்ல கவிஞர்களை உருவாக்குகிறது என்று நான் நினைக்கவில்லை. அப்படி உருவாக்கியது என்றால், டாங் மற்றும் சாங்க் வம்சங்களிலிருந்து வந்ததைவிட ஆகச்சிறந்த கவிஞர்கள் மிங், மற்றும் கிவிங் வம்சங்களிலிருந்து நமக்குக் கிடைத்திருப்பார்கள்; வட கொரியா உலகத்திலே சிறந்த இலக்கியத்தை உருவாக்கியிருக்கும்.

சென் ஜியாபிங்: கடுமையான தணிக்கை இருக்கிறது. என் தொகுதி வெளிவந்தபோது அதிலிருந்து பல கவிதைகள், உணர்வுப்பிரச்சினை மிக்க தலைப்புகள், வார்த்தைகள் வெட்டியெறியப்பட்டன. ஆனால் கலைத்துவ புதுமைக்கான எனது ஆர்வம் தணிக்கையிலிருந்து வருவதில்லை.

சென் ஷி: என்ன எழுதுவது, எப்படி எழுதுவது; வெளியிடுவதா, வேண்டாமா என்பதெல்லாம் என்னுடைய சொந்த விஷயம். பேசக்கூடாத விஷயங்களை எல்லாம் கையாளும் திறன் கவிதைக்கு உண்டு. ரூயன் ஜி, டாவோ யுயான்மிங், டூ ஃபூ ஆகியோர் இந்த வகையில் நன்றாக செயல்பட்டவர்கள்.

கியுன் சான்ஷு: கவிதைமீது தணிக்கை இருக்கிறது. அதன் விளைவு கவிதையின் முழுமைக்கு ஏற்பட்ட காயம். நீங்கள் அதை எப்படி கையாண்டாலும், பிரயோஜனமில்லை.

ஜியாங் ஹவோ: தணிக்கை இருக்கிறது. ஆனால் பதிப்பகத்தின் அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்களுக்குத்தான் அதன் நடைமுறை விதிகள் தெரியும். அதிகமான படைப்பாற்றலோடு இருப்பதற்கான உந்துசக்தி தணிக்கையை விட்டு தப்பிப்பதற்கு மட்டுமல்ல, நிஜத்தின் சிக்கலையும் புரிந்துகொள்ள முடியாத அதன் ஓட்டையையும்
வெளிப்படுத்துவதற்கும் பயன்படுகிறது.

ஏ சியாங்: நீங்கள் அரசு நிலையத்தின் ஆதரவோடு பிரசுரம் செய்யாவிட்டால், உங்களால், தணிக்கையிலிருந்து தப்பிக்கமுடியாது.

யா ஷி: தணிக்கை முறை இருக்கிறது. அபாயமானவற்றை அது வடிகட்டுகிறது. எனினும், தணிக்கை படைப்புத்திறனை உருவாக்குகிறது என்றால், கவிஞர்களைச் சிறையில் போடுங்கள்.

 

VIII. புதுக்கவிதையின் நிலை என்ன? (உள்ளூர் பாஷையில் சுதந்திரக் கவிதை). ஹூ ஷி 1916-ல் தொடங்கிவைத்து 100 வருடங்கள் கழித்து, அது சீனக் கவிதையின் அடிப்படை வடிவமாக ஆகிவிட்டதா? இன்று செவ்வியல் கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் உள்ள தொடர்பு என்ன? (செவ்வியல் கவிதையைப் பற்றிப் பேசும்போது, வெவ்வேறு காலகட்டங்களைப் பற்றிச் சொல்லுங்கள்.)

ஜிங் வெண்டாங்: நவீன சீன இலக்கியம் மேலைநாட்டு இலக்கியத்தின் தாக்கத்திற்கு உள்ளானதுதான். வென் யிடுவோ புதுக்கவிதைக்கு ஒரு புதிய யாப்பைக் கண்டுபிடிக்க முயன்றார். டை வாங்க்ஷு, ஃபெய் மிங் மற்றும் லின் கெங்க் ஆகியோர் சீனமரபின் தன்னுணர்வு இசையோடு நவீனத்தைத் தொடர்புபடுத்த முயன்றார்கள். ஆனால் அவர்களின்
முயற்சிகள் பாதித்தோல்விகளாக முடிந்தன. தற்காலக் கவிஞர்கள் புதிய வழிகளைக் காண முயல்கிறார்கள். ஹெர்மிட் சாங்க் வெய்ட் சில நல்ல கவிதைகளை நண்பர்களின் சுற்றுக்குக் கொடுத்திருக்கிறார். யு குவாங்ஷாங் தைவானில் செய்தது ஆழமில்லாதது.

ஷாங் குயிங்குவா: மேலைநாட்டு இலக்கியத்தின் மொழிபெயர்ப்பு ஆக்கபூர்வமான தாக்கங்களைக் கொண்டு வந்தாலும், தற்காலக் கவிஞர்கள் சீன மரபுக்கூறுகளை தங்கள் எழுத்தில் கொண்டுவர முயன்று கொண்டிருக்கிறார்கள்.

யாங்க் சியோவாபின்: தற்காலச் சீனக்கவிதை சந்தேகமே இல்லாமல் பல புதிய பாதைகளைத் திறந்துவிட்டிருக்கிறது. புதுக்கவிதை இப்போது நாகரிகமாக மாறிவிட்டது. ஆனால் அது செவ்வியல் கவிதை போல உயர்ந்த அந்தஸ்தை அடையவில்லை. எங்கள் நடப்புக்கால கவிதை, புதுக்கவிதையின் சிறந்த சாதனையையும், செவ்வியல் கவிதையின் உயிர்த்துடிப்பையும், நவீன சுவையையும் சேர்த்து தருகிறது.

ஷூ யு: ஓர் ஒப்பீடு செய்யவேண்டுமென்றால், எங்கள் புதுக்கவிதையில் இன்னும்
டாவோ கியுயன், ஷென் யூ அல்லது கெங்க் சின் ஆகியோர் இல்லை. டு பூ, லி ஷாங்கியன்
அல்லது ஹுயாங் டிங்ஜியன் ஆகியவர்களை பற்றிப் பேசவேண்டாம். எனினும்,
புதுக்கவிதை ஜீவனோடு இருக்கிறது. முடிவில்லாத சாத்தியங்களோடு இருக்கிறது.

சென் ஜியாபிங்: புதுக்கவிதை ஒதுக்கப்படுகிறது என்று நினைக்கிறேன். ஏனெனில்
பள்ளிப்பாடப்புத்தகங்களில் அது சேர்க்கப்படவில்லை. புதுக்கவிதை செவ்வியல்
கவிதையோடு போட்டிபோடவில்லை; அதிலிருந்து வளர்கிறது.

சென் ஷி: புதுக்கவிதை இல்லாமல் செவ்வியல்கவிதை பற்றிப் பேசுவது
அர்த்தமற்றது. புதுக்கவிதை முதிர்ச்சியடைந்ததா இல்லையா என்பது அவ்வளவு
முக்கியமல்ல. தன்னையே உற்பத்தி செய்துகொள்ளும் ஆற்றலும் தன்னையே
புதுப்பித்துக் கொள்ளும் திறனும் அதற்கு உண்டு என்பதுதான் முக்கியமானது.
அதுதான் அதைத் தன்னளவில் புதியதாக இருக்க வைக்கிறது.

கியுன் சான்ஷு: 1990களிலிருந்து நமது புதுக்கவிதை அதிவேகமாக
முன்னேறியிருக்கிறது. போதுமான அளவுக்கு விமர்சனப்பார்வையும்
ஆராய்ச்சிப்பணியும் இல்லாததுதான் குறை. விவாதித்தால், புதுக்கவிதைக்கும்
செவ்வியல் கவிதைக்கும் வித்தியாசமான மரபுகள் உண்டு. செவ்வியல் கவிதை என்பது
நாம் தொடர்ந்து சுமந்துசெல்லும் மரபு அல்ல. ஆனால் நாம் பயன்படுத்துவதற்கு
நிறைய இலக்கிய வளங்கள் இருக்கின்றன. பதற்றத்தை நீக்கும்வழி இதுதான்.

ஷெங் சியோவாகியாங்: சீனமொழியின் அழகு புதுக்கவிதையில் மறைந்து கொண்டிருக்கிறது. 1980களின் கவிதையைத் திரும்பிப் பார்த்தால், ஷாங் ஷவோ, பை ஹுவா, ஷாங் மின்ங் போன்ற கவிஞர்கள் மரபான அம்சங்களை வைத்திருந்தார்கள். செவ்வியல் வடிவக் கவிதைகளை எழுதும் நிறைய கவிஞர்கள் இருக்கிறார்கள். அது
முற்றிலும் வேறுபட்ட உலகம். ஆனால் இரண்டு உலகங்களுக்குமிடையில் இப்போது ஓர் உறவாடல் இருக்கிறது. வெய் ஜின் தெற்கு, வடக்கு வம்சங்களிலிருந்து வந்த ஃபூ பாணி, அதன் மொழிவீச்சோடு, சுவாரசியமாக இருக்கிறது. புதுக்கவிதையில் செவ்வியல் அழகு மெதுவாக திரும்பிக் கொண்டிருக்கிறது.

ஜியாங் டாவோ: செவ்வியல் வடிவத்தில் எழுதுவது சீனக்கலாச்சாரத்தின் தொடர்ச்சி; அதனால் புதுக்கவிதையை விடவும் அதில் எழுதுபவர்களும், வாசிப்பவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். புதுக்கவிதை (சுதந்திரமான கவிதை) என்பது சீனாவில் ஒருவிதமான பரீட்சார்த்த வடிவம்.1920களில் நிகழ்ந்த கலாச்சார நெருக்கடியின் விளைச்சல் அது. மேற்கத்திய தாக்கத்தை எடுத்துக்கொள்வதா அல்லது செவ்வியல் மரபை எடுத்துக்கொள்வதா என்பது புதுக்கவிதையின் பதற்றம். ‘புது’ என்பதற்கு, சீனாவில் நிறுவனமயமாக்கப்பட்ட கவிதைக்கு இருப்பதை விட, அகன்ற அர்த்தம் இருக்கவேண்டும்.

சாங்க் கே : புதுக்கவிதைக்கு கீழான சமூக அந்தஸ்து இருக்கிறது. மாவோ செவ்வியல் கவிதை எழுதினார். பல அரசு அதிகாரிகள் செவ்வியல் யாப்பில் எழுதுகிறார்கள். கவிதை இதழ் புதுக்கவிதைக்கு ஒருலட்சம் RMBயும் (சீனப் பண மதிப்பு), செவ்வியல் கவிதைக்கும் 3 லட்சம் RMBயும் பரிசாகத் தருகிறது.

யா ஷி : செவ்வியல் கவிதையில் இருக்கும் ஒன்றிணைக்கப்பட்ட வாழ்க்கைக் கண்ணோட்டத்தோடு ஒப்பிடும்போது, புதுக்கவிதை சிக்கலான நவீனவாழ்க்கையின் அனுபவத்தை உருப்படுத்துகிறது. இது நல்லது, இது கெட்டது என்று சொல்லும் செவ்வியல் கவிதையின் வழமையான கருத்துக்களொடு ஒப்பிட்டால், யாப்பை மீறி சுதந்திரமாக இருந்தாலும், புதுக்கவிதை மிகவும் நுட்பமாக இருக்கிறது. அதில் பல இடைவெளிகள் இருப்பது போல தெரிகிறது என்று நான் அறிவேன். ஆனால் அந்த இடைவெளிகள் கற்பனை செய்து பார்க்கமுடியாத சாத்தியங்களை நமக்காக போஷித்து வளர்க்கிறது.

தமிழில் : மஹாரதி

(மிண்டி ஷாங்க் என்ற இயற்பெயர் கொண்ட மிங் டி (Ming Di), தற்கால சீனப்பெண் கவிஞர்; மொழிபெயர்ப்பாளர். இதுவரை இவர் சீனமொழியில் எழுதியவை ஆறு நூல்களாக (D Minor Etudes (poetry), Berlin Story (photo-poems), Days Floating on Footage (poems and essays on movies), Chords Breaking (poetry), Art of Splitting (poetry), and Selected Poems of Ming Di) வெளிவந்துள்ளன. இவர் ஆங்கிலத்திலிருந்து சீனமொழிக்கு மொழிபெயர்த்த படைப்புகளாக The Writer as Migrant (2010), Missed Time (2011), Dancing in Odessa (2013) மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன. சீனாவில் பிறந்து வளர்ந்த அவர், பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படிப்பதற்காக அமெரிக்கா சென்றார். பின்பு கலிஃபோர்னியாவுக்கு புலம் பெயர்ந்தார். லாஸ் ஏஞ்சல்ஸிலும் பீஜிங்கிலும் வெளியிடப்படும் ‘Poetry East West’ என்ற சீன-ஆங்கில இருமொழி இலக்கியப் பத்திரிகையை தொடங்கி அதன் ஆசிரியராக செயல்பட்டு வருகிறார்.

காப்புரிமை: மிங்க் டி (Poetryeastwest.com இதை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தது. Poetry International Rotterdam -ல் பிரசுரமான இந்தக் கட்டுரை மிங்க் டியின் அனுமதியோடு மறுபிரசுரம் செய்யப்படுகிறது.)

 

© Ming Di (Translated into English by Poetryeastwest.com)
Originally published in Poetry International Rotterdam
Republished with permission from Ming Di

unnatham

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top